வேந்தர் மூவிஸ் அதிபர் மதன். இவர் எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக பலரிடம் கோடிக் கணக்கில் பணம் வாங்கி ஏமாற்றினார். இதையடுத்து, பணம் கொடுத்தவர்களிடம் இருந்து தப்பிக்க, வாரணாசிக்கு சென்றார். அங்கு தங்கியிருந்த ஹோட்டலில், ஜலசமாதி ஆகப்போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, தலைமறைவானார்.
சுமார் ஒரு மாத கால போலீஸ் தேடுதலுக்குப் பின்னர் கடந்த நவம்பர் மாதம் 21ம் தேதி திருப்பூரில் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட மதன், சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில் அவரை அமலாக்க பிரிவு அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருந்தனர். இன்று அவர் அமலாக்கத்துறை அதிகாரி சந்திரசேகர் முன்பு ஆஜரானார். இன்று இரவு 9 மணியளவில் அமலாக்க பிரிவு அதிகாரிகள் மதனை கைது செய்தனர். பின்னர் அவரை மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர் படுத்தினார்கள். மதனை ஜூன் 6ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.