அப்துல் கலாமுக்கு இணையாக மோடியை உயர்த்திய எடப்பாடி : மணிமண்டபம் விழா ஷாக்!

அதற்கு முன்பு வரவேற்புரையாற்றிய வெங்கையா நாயுடுகூட இந்த அளவுக்கு கலாமுடன் மோடியை ஒப்புமைப்படுத்தவில்லை.

அப்துல் கலாமுக்கு இணையாக பிரதமர் மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உயர்த்திப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அ.தி.மு.க. அணிகளுக்குள் இப்போது பிரதான போட்டியே பிரதமர் நரேந்திர மோடியின் நன்மதிப்பை பெறுவது யார்? என்பதில்தான். சசிகலா தரப்பு ஆரம்பத்தில் இதற்கான முயற்சிகளை எடுத்தும், டெல்லி சிக்னல் ‘ஓ.கே.’ ஆகவில்லை. சசிகலாவும், டி.டி.வி.தினகரனுக்கும் அடுத்தடுத்து நெருக்கடிகள் வந்ததுதான் மிச்சம். எனவே அவ்வப்போது அ.தி.மு.க. நாளிதழான ‘நமது எம்.ஜி.ஆர்.’ மூலமாக மத்திய அரசு மீது ‘அட்டாக்’ நடத்திக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.

ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, டெல்லியின் அனுக்கிரகம் இல்லாமல் ஒரு நிமிடம்கூட ஆட்சிக் கட்டிலில் நீடிக்க முடியாது என்பதை தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார். எனவே ஜி.எஸ்.டி., நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்ட எந்தப் பிரச்னையிலும் மத்திய அரசுக்கு எதிராக ஒரு வார்த்தை அவர் பேசுவதில்லை. அதே நேரம் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசும் வாய்ப்பு கிடைத்தால், அதை எடப்பாடி ‘மிஸ்’ செய்வதே இல்லை.

அ.தி.மு.க.வின் இன்னொரு அணித் தலைவரான ஓ.பன்னீர்செல்வம் எப்படியாவது எடப்பாடி அரசுக்கு இடைஞ்சல் கொடுத்து, தன்னை மீண்டும் ஆட்சியில் அமர்த்தும் வேலையை மோடியே செய்வார் என எதிர்பார்த்தார். ஆனால் சமீபகாலமாக மத்திய, மாநில அரசுகள் இடையே ஏற்பட்டிருக்கும் புரிந்துணர்வில் அவர் ‘அப்செட்’! நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசு மீது தொடுத்த விமர்சனக் கணைகளுக்குகூட மாநில அமைச்சர்களை முந்திக்கொண்டு ஹெச்.ராஜாவும், தமிழிசையும் காரசாரமாக கமல்ஹாசனை தாளிக்கிறார்கள். எனவே, ‘இந்த அமாவாசையில் ஆட்சி கவிழும்; அடுத்த அமாவாசையில் முதல்வர் ஆகிவிடலாம்’ என ஓ.பி.எஸ். தரப்பு போட்ட கணக்கு நடக்கவில்லை. ஆனாலும் இன்னமும் நம்பிக்கையிழக்காமல் மோடியை சுற்றுகிறார் ஓ.பி.எஸ்.!

நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் பிரச்னையிலும்கூட முதல்வர் எடப்பாடியும், மாநில அமைச்சர்களும் டெல்லியிலில் முகாமிடுவதை தெரிந்துகொண்டு ஒருநாள் முன்னதாக டெல்லிக்கு சென்றார் ஓ.பி.எஸ்.! அங்கு நாடாளுமன்ற வளாக அலுவலகத்தில் மோடியை சந்தித்து, ‘நீட்’டில் இருந்து விலக்கு பெற தன் பங்குக்கும் கோரிக்கை வைத்தார். அதாவது, மத்திய மாநில அரசுகளின் முயற்சியால நீட் தேர்வுக்கு விடிவு கிடைத்தால், அதில் தனக்கும் மோடிக்கும் இடையிலான நட்புக்கும் பங்கு இருக்க வேண்டும் என்பதே ஓ.பி.எஸ். திட்டம்!

இப்படி வலிந்து மோடியுடன் ஒட்டும் வாய்ப்புகளை இரு அணிகளும் உருவாக்கிக் கொண்டிருக்கும் வேளையில், மோடியுடன் ஒரே மேடையில் விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தால் எடப்பாடி விடுவாரா? ராமேஸ்வரத்தில் ஜூலை 27-ம் தேதி நடைபெற்ற அப்துல் கலாம் மணி மண்டபம் திறப்பு விழாவை அதற்கு பயன்படுத்திக் கொண்டார் எடப்பாடி. ராமேஸ்வரம் வந்த மோடியை தனது அமைச்சரவை சீனியர்களான செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயகுமார் சகிதமாக வரவேற்றார் எடப்பாடி. தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் ஆஜர் ஆனார்கள். மேடையில் மோடிக்கு இடதுபுறம் எடப்பாடி பழனிச்சாமி உட்கார்ந்திருந்தார். அவருக்கு அடுத்து மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அமர்ந்திருந்தார்.

கூட்டத்தினரின் ‘ரீயாக்‌ஷன்’ குறித்து நிர்மலா சீத்தாராமன் இடையிடையே மோடியுடன் உரையாடியபோது, இருவருக்கும் இடையே இருந்த எடப்பாடி தனது உடலை பின்னால் வளைத்து அவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கினார்.

ஹைலைட், நிகழ்ச்சியில் எடப்பாடி பேசியதுதான்… ‘பிரதமர் மோடிஜியை வாழ்த்தி உளமாற வணங்குகிறேன்’ என குறிப்பிட்ட எடப்பாடி, ‘தன்னம்பிக்கையாலும் விடா முயற்சியாலும் ஒருவர் உயர முடியும் என்பதற்கு ஒரு உதாரணம் அப்துல் கலாம் என்றால், இன்னொரு உதாரணம் மோடி’ என மெச்சிப் புகழ்ந்தார். அதற்கு முன்பு வரவேற்புரையாற்றிய வெங்கையா நாயுடுகூட இந்த அளவுக்கு கலாமுடன் மோடியை ஒப்புமைப்படுத்தவில்லை.

தொடர்ந்து அப்துல் கலாம் மணி மண்டபத்திற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நிலம் ஒதுக்கிக் கொடுக்க நடவடிக்கை எடுத்தது, கலாம் பெயரில் தமிழக அரசு சார்பில் விருது கொடுக்க ஏற்பாடு செய்தது ஆகியவற்றையும் குறிப்பிட்டு பேசினார் எடப்பாடி. ராமேஸ்வரம் பகுதியில் 5 மாவட்டங்களை சேர்ந்த 300 கிராமங்களின் மூன்றரை லட்சம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் அத்துமீறலால் பாதிக்கப்படுவதையும் விழாவில் சுட்டிக்காட்டிய எடப்பாடி, ‘இந்த இன்னல்களை களைய கச்சத்தீவை மீட்கவேண்டும்’ என கோரிக்கை வைத்தார்.

ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக மத்திய அரசு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி கூறிய எடப்பாடி, இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கவும் வேண்டுகோள் வைத்தார்.

அதன்பிறகு மோடி பேசுகையில், ‘மீனவர்கள் எல்லை தாண்டுவதால் பிரச்னை ஏற்படுவதாக’ குறிப்பிட்டதை உள்ளூர் மீனவர்கள் ரசிக்கவில்லை. ஆனாலும் மத்திய அரசு வழங்கும் ஆழ்கடல் மீன்பிடி உபகரணங்கள் அந்தப் பிரச்னைக்கு தீர்வாக அமையும் என மோடி குறிப்பிட்டார். அதோடு மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் எடுத்துச் சொல்பவராக எடப்பாடி பழனிச்சாமி செயல்படுவதாக மோடி பாராட்டினார். அப்போது எடப்பாடியின் முகத்தில் அவ்வளவு பிரகாசம்!

இந்தக் கூட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவையும் ஏகமாக புகழ்ந்தார் மோடி. ஆனால் கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது, சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் திறக்க எடப்பாடி வைத்த அழைப்பை மோடி கண்டுகொள்ளவில்லை. ‘ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர் ஜெயலலிதா’ என குறிப்பிட்டு எதிர்கட்சியினர் சர்ச்சை கிளப்புவதும் அதற்கு காரணமாக இருக்கலாம். ஆனாலும் இன்னும் அவ்வப்போது ஓ.பி.எஸ்.ஸையும் தட்டிக் கொடுத்து வரும் மோடியை முழுவதுமாக புரிந்து கொள்ள முடியாத நிலையில்தான் எடப்பாடி டீம் இருக்கிறது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close