இபிஎஸ்-ஸ்டாலின் சந்திப்பு : இதில் என்ன அரசியல் கணக்கு?

இபிஎஸ்-ஸ்டாலின் சந்திப்பு அரசியல் நாகரீகம் என்பதைத் தாண்டி, பல அரசியல் கணக்குகளையும் உள்ளடக்கியதுதான்! இதில் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கா, ஸ்டாலினுக்கா?

இபிஎஸ்-ஸ்டாலின் சந்திப்பு அரசியல் நாகரீகம் என்பதைத் தாண்டி, பல அரசியல் கணக்குகளையும் உள்ளடக்கியதுதான்! இதில் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கா, ஸ்டாலினுக்கா?

பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக மாநிலம் முழுவதும் பிப்ரவரி 13-ம் தேதி மாலையில் திமுக கூட்டணி சார்பில் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. அதேநாள் நண்பகலில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்தார்.

பஸ் கட்டணத்தை குறைப்பது மற்றும் போக்குவரத்துக் கழகத்தை சீரமைப்பது தொடர்பாக டி.ஆர்.பாலு, பொன்முடி, கே.என்.நேரு ஆகியோரை உள்ளடக்கிய திமுக குழு தயாரித்த அறிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் சமர்ப்பித்தார் ஸ்டாலின். 2004-ம் ஆண்டு சுனாமி நிவாரண நிதி வழங்க அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவையும் ஸ்டாலின் சந்தித்திருக்கிறார். ஓபிஎஸ் முதல்வராக இருந்தபோதும் ஒரு முறை சந்தித்தார். தமிழக அரசியல் சூழலில் மக்கள் பிரச்னைக்காக முதல் அமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும் சந்திப்பதே ஒவ்வொரு முறையும் விவாவதங்களுக்கு உரியதாக மாறிவிடுகிறது.

இபிஎஸ்-ஸ்டாலின் சந்திப்பில் இப்போதும் அரசியல் நாகரீகத்தைத் தாண்டி, சில அரசியல் கணக்குகளும் இருப்பதாக கருதப்படுகின்றன. திமுக.வைப் பொறுத்தவரை, ‘பஸ் கட்டண உயர்வை நாங்கள் வெறும் அரசியல் லாபத்திற்கு பயன்படுத்த வில்லை. ஆக்கபூர்வமான ஆலோசனையை ஆளும்கட்சிக்கு கொடுத்தோம். அதுவும் முறையாக ஆய்வு நடத்தி அறிக்கையாக கொடுத்தோம். ஆளும்கட்சிதான் அதை பயன்படுத்திக் கொள்ளவில்லை’ என அடுத்தடுத்த கட்டங்களில் பிரசாரத்தை முன்னெடுக்க முடியும்.

மு.க.ஸ்டாலின் சராசரிக்கும் மேலான நாகரீகமான அரசியல் தலைவர் என்கிற இமேஜை கட்டமைக்க அல்லது தக்க வைக்க இந்த சந்திப்பு உதவும் என்பது இன்னொரு கணக்கு! தவிர, ‘இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பை அங்கீகரித்து ஸ்டாலின் சந்திப்பதன் மூலமாக டிடிவி தினகரன் அணி வலு இழக்கும்! ஆர்.கே.நகரில் திமுக வாக்குகளை கபளீகரம் செய்தவர் தினகரன்தான்! அவர் பலம் இழப்பது, திமுக.வுக்கு நல்லது. அந்த வகையில் இந்த சந்திப்பு, ஸ்டாலினின் ராஜதந்திர நடவடிக்கை’ என கூறுவோரும் இருக்கிறார்கள்.

ஆனால் திமுக.விலேயே இன்னொரு தரப்பினர், ‘ஆளும்கட்சியை போர்க்குணத்துடன் எதிர்ப்பதையே அடிமட்டத் தொண்டர்கள் விரும்புகிறார்கள். இபிஎஸ் அரசை, ‘பினாமி அரசு’ என விமர்சித்துவிட்டு அவர்களைப் போய் சந்திப்பது அர்த்தமற்றது. இது மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்த இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பை அரசியல் ரீதியாக அங்கீகரிப்பது போல இருக்கிறது. இப்படி கோட்டையில் அவர்களுடன் உட்கார்ந்து சிரித்துப் பேசுவதை தொண்டர்கள் விரும்பவில்லை. எனவே எங்கள் செயல் தலைவர் இந்த சந்திப்பை தவிர்த்திருக்க வேண்டும்’ என்கிறார்கள்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரை, தன்னை யாரும் அணுக முடிகிற தலைவராக காட்டிக் கொள்ளவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். ஸ்டாலினுக்கு அப்பாய்ன்மென்ட் கொடுத்தது கட்சிக்குள் சலசலப்பை கிளப்பிவிடக் கூடாது என்பதற்காகவே ஓபிஎஸ் உள்ளிட்ட சீனியர்களையும் அருகில் வைத்துக் கொண்டார் இபிஎஸ். தவிர, இந்த அரசுக்கு பிரதான எதிர்க்கட்சி கொடுத்த அங்கீகாரமாகவும் இந்த சந்திப்பை எடுத்துக் கொண்டிருக்கிறார் இபிஎஸ்.

ஸ்டாலின் அளித்த அறிக்கை அடிப்படையில் இபிஎஸ் ஏதாவது நடவடிக்கை எடுப்பார் என நம்ப முடியவில்லை. தவிர, பஸ் கட்டண உயர்வை குறைக்கவோ, அரசு போக்குவரத்துக் கழகங்களை சீரமைக்கவோ அரசுத் தரப்பு ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எதையும் எடுப்பதாகவும் இல்லை. எனவே இதில் எதிர்க்கட்சி எடுக்கும் முயற்சியைக்கூட ஆளும் தரப்பு செய்யவில்லை என்பது வெளிப்படை ஆகும். அது ஆளும்கட்சிக்கு மைனஸ்!

அதே சமயம், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்த திமுக, எந்த கூட்டணிக் கட்சியிடமும் கலந்து ஆலோசிக்காமல் திடுதிப்பென போராட்ட தினத்தன்றே கோட்டையில் முதல்வரை சந்தித்ததை கூட்டணியினர் விரும்பவில்லை. ஆனால் இப்போதைக்கு கூட்டணியின் பெரிய அண்ணனான திமுக.வை கேள்வி கேட்கவும் யாரும் தயாராக இல்லை.

 

×Close
×Close