ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையேயான மோதலால், ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? அ.தி.மு.க-வின் வேட்பாளர் யார்? இதில் வெற்றி பெறப்போவது ஓ.பி.எஸ்-ஸா? அல்லது இ.பி.எஸ்-ஸா? என்ற தமிழக அரசியல் நோக்கர்களின் கேள்விகளுக்கு எல்லாம் பதில் கிடைத்துள்ளது. அது இ.பி.எஸ்-க்கு எதிர்பார்ப்பைத் தாண்டி கிடைத்த வெற்றி என்பதுதான் அந்த பதில்.
அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் பலப் பரீட்சை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஆரம்பத்தில் இருந்தே, தனது அரசியல் ராஜதந்திரம் மூலம் இ.பி.எஸ் தனது கை மேலே உயர்த்தி வந்திருக்கிறார்.
2017-ல் முதலமைச்சரானது முதல், சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை அ.தி.மு.க-வில் இருந்து நீக்கியது, ஓ. பன்னீர்செல்வத்துடன் இணைந்து 4 ஆண்டுகாலம் ஆட்சியைத் தக்கவைத்தது. 2021 சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க-வின் முதலமைச்சர் வேட்பாளரானது, தேர்தலில் அ.தி.மு.க ஆட்சியை இழந்தாலும் எதிர்க்கட்சித் தலைவரானது, தனது ஆதரவாளர்களுக்கு பதவி அளித்தது, ஒரு கட்டத்தில் கட்சிக்கு ஒற்றைத் தலைமைதான் தேவை, அந்த ஒற்றைத் தலைமை எடப்பாடி பழனிசாமிதான் என்று பொதுக்குழு உறுப்பினர்களை தனக்கு ஆதரவாக திருப்பியது.
பொதுக்குழுவில் ஓ.பி.எஸ்-ஐ ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்கியது, இ.பி.எஸ் பொதுக்குழுவால் அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளர் ஆக அறிவிக்கச் செய்தது என எல்லாவற்றிலும் இ.பி.எஸ் கை ஓங்கியே இருந்து வந்திருக்கிறது. அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பாக ஓ.பி.எஸ் உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தாலும், இந்த ரேஸில், இ.பி.எஸ் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார் என்பதே நிதர்சனம்.
அதே நேரத்தில், மத்தியில் ஆளும் கூட்டணி கட்சியான பா.ஜ.க-வோ ஒன்றுபட்ட அ.தி.மு.க வேண்டும் என்று வெளிப்படயாகவே கூறிவிட்டது. ஆனாலும், இ.பி.எஸ் அந்தப் பேச்சுக்கே இடமில்லை என்று பிடிகொடுக்காமல் தொடர்கிறார்.
இந்த நிலையில்தான், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் இடையேயான பலப்பரீட்சையை மேலும் தீவிரப்படுத்தியது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், முதலில் ஒ.பி.எஸ் – இ.பி.எஸ் இரண்டு தரப்புமே வேட்பாளர்களை அறிவித்தனர். இருவருமே அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்னத்தை கோரினார்கள். தேர்தல் ஆணையம் வேறு அ.தி.மு.க-வில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இருப்பதாகக் கூறிவிட்டது. இதனால், ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அ.தி.மு.க என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்தது.
ஆனால், விரைவாக செயல்பட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு, ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலைக் குறிப்பிட்டு, அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்னம் குறித்தும் தன்னை அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அ.தி.மு.க வேட்பாளரை அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களிடம் கடிதம் பெற்று தேர்வு செய்யலாம் என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவு எடப்பாடி பழனிசாமிக்கு வெற்றியை உறுதி செய்தது. அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினர்கள் பெரும்பாலானவர்கள் இ.பி.எஸ் பக்கம் இருப்பதால், இ.பி.எஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசுவை வேட்பாளராக ஆதரித்து கடிதம் அளித்தனர். அந்த கடிதங்களை அ.தி.மு.க அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்தல் ஆணையத்திடம் அளித்தார்.
இதனிடையே, ஓ. பன்னீர்செல்வம் தனது தரப்பு வேட்பாளரை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். மேலும், தமிழ்மகன் உசேன், தென்னரசுவை வேட்பாளராக குறிப்பிட்டு பொதுக்குழு உறுப்பினர்களிடம் கடிதம் கேட்டது உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் விதமாக உள்ளது என்று கூறினார்.
“இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவதை தவிர்க்க வேட்பாளரை வாபஸ் பெறுகிறோம். இரட்டை இலை சின்னம் முடப்படக் கூடாது என்பதற்காக இதை செய்கிறோம்” என்று கு.ப கிருஷ்ணன் கூறினார்.
இருப்பினும், இதனால், இ.பி.எஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசு அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ வேட்பாளரானார். ஓ.பி.எஸ் வேட்பாளரை வாபஸ் பெற்றதற்கு இ.பி.எஸ் ஆதரவாளர் கே.ஏ. செங்கோட்டையன் நன்றி தெரிவித்தார்.
இதையடுத்து, கூட்டணி கட்சியான பா.ஜ.க-வும் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்தது. அ.தி.மு.க வேட்பாளரின் வெற்றிக்காக பாடுபடுவோம் என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டார்.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில், ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் இருவருமே அ.தி.மு.க-வின் வேட்பாளர்கள் என்று அறிவித்ததால், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று அரசியல் களத்தில் பேசப்பட்ட நிலையில், ஓ.பி.எஸ் தனது தரப்பு வேட்பாளரை வாபஸ் பெறச் செய்தது. பா.ஜ.க ஆதரவு தெரிவித்தது. என எல்லாமே இ.பி.எஸ் எதிர்பார்ப்பைத் தாண்டி அ.தி.மு.க-வில் வெற்றி கிடைத்துள்ளது என்றே கூறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“