எடப்பாடி அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டது : மார்க்சிஸ்ட் மாநில செயற்குழு தீர்மானம்

தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும் என சி.பி.எம். மாநில செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.

By: Updated: August 23, 2017, 05:18:39 PM

தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும் என சி.பி.எம். மாநில செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்)  தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (23.08.2017) சென்னையில் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், உ. வாசுகி, பி. சம்பத், அ. சவுந்தரராசன், கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்டு மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
அதிமுக அம்மா பிரிவும், அதிமுக புரட்சி தலைவி அம்மா பிரிவும் அண்மையில் ஒன்றிணைந்துள்ளன. இவர்கள் பிரிந்த போதே, இது கொள்கை பிரச்னையினால் அல்ல, அதிகார போட்டியின் காரணமாகவே பிரிவு நடந்துள்ளது, இது அரசியல் சந்தர்ப்பவாதமே என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்தது. இந்த மதிப்பீடு சரியானது என்பதை, இவர்களின் இணைப்பு நிரூபிக்கிறது.

கட்சியிலும், ஆட்சியிலும் அதிகாரம் மற்றும் ஊழல் என்பதே பிரிவுக்கும், இணைப்புக்கும் பின்னால் உள்ள காரணிகள் என்பதை மறுப்பதற்கில்லை. தினகரன் தலைமையிலான குழுவின் கருத்து வேறுபாடும் இதே ரகத்தில் எழுந்திருப்பது தான். இருப்பினும் ஒரு பகுதி எம்.எல்.ஏக்கள் தங்களது ஆதரவை விலக்கிக் கொண்ட நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. இச்சூழலில், உடனடியாக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தகுந்த நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளுநரை வலியுறுத்துகிறது.

அரசியல் ஆதாயத்தை நோக்கமாகக் கொண்டு, மத்திய பாஜக அரசின் தலையீடு தமிழக அரசியலில் தொடர்ந்து இருந்து வருகிறது. இதற்கு உகந்தவாறு வருமான வரித்துறை மற்றும் மத்திய புலனாய்வு பிரிவு பயன்படுத்தப்பட்டன. இத்தலையீட்டின் விளைபொருளாகவே அதிமுக பிரிவுகளின் இணைப்பு நிகழ்ந்திருக்கிறது.

கடந்த காலத்தில் ஆளுநர் வருவதில் ஆன தாமதமாக இருக்கட்டும், இந்த இணைப்பை ஒட்டி ஆளுநரின் வருகை துரிதமாக நடந்ததாக இருக்கட்டும், இரண்டுமே தற்செயல் என்று கருத இயலவில்லை. ஒட்டு மொத்தத்தில் அரசியல் சதுரங்க வேட்டை தமிழகத்தில் அரங்கேறிக் கொண்டிருப்பதைப் பார்த்து மக்கள் குமுறிக் கொண்டிருக்கின்றனர்.

நீட் நுழைவு தேர்வு பிரச்னையில் பாஜக அரசு தமிழகத்துக்குப் பெரும் துரோகம் இழைத்திருக்கிறது. லட்சக்கணக்கான ஆசிரியர், அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம் நடந்திருக்கிறது. விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. ஜிஎஸ்டியால் மக்களும், சிறு, குறு தொழில் முனைவோரும் துயரத்தில் மூழ்கியுள்ளனர். தமிழகத்தின் அனைத்துப் பகுதியினரும் போராட்ட களத்தில் நிற்கின்றனர்.

போராடுபவர்களை குண்டர் சட்டம் உள்ளிட்ட ஒடுக்குமுறை நடவடிக்கைகள் துரத்துகின்றன. வர்தா புயல், வறட்சி நிவாரணம் துவங்கி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பது வரை, உணவு பாதுகாப்பு சட்டத்தைக் காட்டி பொது விநியோக முறையை சீர்குலைப்பது முதல் சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்ய அச்சுறுத்துவது வரை, பாஜக அரசு, தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

சென்ட்ரல் ரயில் நிலையம் தனியாருக்குக் குத்தகைக்கு விடப்படுகிறது. இது எதைப் பற்றியும் கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல், தமிழகத்தின் நலனையும், தமிழக மக்களின் வாழ்வுரிமையையும் பலிகடா ஆக்கி, அதிகார வேட்கை தணித்துக் கொள்ளப்படுகிறது. அரசியலின் தரம் அதலபாதாளத்துக்கு இறங்கியிருக்கும் இந்நிலை வேதனைக்குரியது, கடும் கண்டனத்துக்குரியது.

மக்கள் நலன்களை, மாநில உரிமைகளை பறிக்கின்ற, காவு கொடுக்கின்ற மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கினை எதிர்த்து ஒன்றுபட்டு குரல் கொடுக்க முன்வர வேண்டுமென அனைத்து பகுதி மக்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Edappadi palaniswamy government lost majority in tamilnadu assembly cpm state executive resolution

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X