உங்கள் மகனையோ மகளையோ பொறியியல் கல்லூரியில் சேர்க்க செல்கிறீர்கள். நீங்கள் விரும்பியே அந்த கல்லூரிக்கு நன்கொடை கொடுத்தாலும் அது சட்ட விரோதம் என்கிறது நீதிமன்ற உத்தரவு.
2022 அக்டோபர் இறுதியில் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முஹம்மது ஷாஃபிக் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கல்விக் கொள்கைக்கு எதிராக கடுமையாக சாடி இருக்கிறார்கள். 'பல்வேறு கல்விக் குழுமங்கள் நேரடியாக தங்கள் கல்லூரிகள் மூலமாக நன்கொடை பெறாமல், ஏதேனும் டிரஸ்ட்டுகளை உருவாக்கி அதன் பெயரில் நன்கொடை பெறுவதை நீதிபதிகள் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். லஞ்சமாக அப்படி பெறும் பணத்திற்கு ட்ரஸ்ட்டின் பெயரில் வருமான வரி விலக்கு பெற்றுக் கொள்வதையும் நீதிபதிகள் தோலுரித்து காட்டினர்.
'இதையெல்லாம் நடவடிக்கைக்கு மத்திய- மாநில அரசுகள் உள்ளாக்க வேண்டும். அப்படிப்பட்ட டிரஸ்ட்களின் பதிவை ரத்து செய்ய வேண்டும்' என குறிப்பிட்டது கோர்ட். மேலும், 'கேபிடேஷன் பீஸ் தொடர்பாக மாணவர்களும் பெற்றோர்களும் புகார் செய்ய வசதியாக நிரந்தரமாக ஒரு இணையதளத்தை மத்திய- மாநில அரசுகள் தொடங்க வேண்டும்' என உத்தரவு பிறப்பித்தார்கள் நீதிபதிகள். அதோடு கவுன்சலிங் சமயத்தில் முக்கியமான ஆங்கில பத்திரிகைகளிலும், அந்தந்த வட்டார மொழி இதழ்களிலும் இந்த இணையதளம் தொடர்பாக அரசு விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் கூறியது கோர்ட்.
உச்ச நீதிமன்றமும் கூட 2022 மே மாதம் இதே போன்ற ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறது. ஆனால் இது தொடர்பாக மத்திய- மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை என்ன என்பதுதான் பெரிய கேள்விக்குறி. இது தொடர்பாக நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் எஸ்.ஆர் ஸ்ரீராம் கூறுகையில், 'கேப்பிடேஷன் பீஸ் தொடர்பான புகார்களை பதிவு செய்வதற்கு என்றே தனியாக வெப்சைட் தொடங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து ஒன்றரை ஆண்டுகளை தாண்டுகிறது. நான் தேடிப் பார்த்தவரை அப்படி ஒரு இணையதளத்தை இதுவரை அரசு உருவாக்கவே இல்லை. பொறியியல் கல்லூரிகளை ஒழுங்குபடுத்தும் அகில இந்திய தொழில் நுட்பக் கவுன்சில் மட்டும் பொதுமக்களின் புகாரை பெறுவதற்காக பொதுவான ஒரு இணையதளத்தை வைத்திருக்கிறது. அதில் பத்தோடு பதினொன்றாக கேப்பிடேஷன் பீஸ் தொடர்பான புகார்களையும் பெறுகிறார்கள். நீதிமன்ற உத்தரவுப்படி இந்த கேபிடேஷன் கட்டண கொள்ளை பற்றியோ அது தொடர்பான இணையதளம் பற்றியோ அரசு எந்த விளம்பரமும் செய்வதாகவும் இல்லை.
தவிர பொறியியல் கல்லூரிகள் தங்கள் மேனேஜ்மென்ட் கோட்டாவை நிரப்ப கவுன்சலிங் வரை காத்திருக்க போவதில்லை. ப்ளஸ் டூ ரிசல்ட் வரும் முன்பாகவே மேனேஜ்மென்ட் கோட்டாவை நிரப்பும் வேலையை ஆரம்பித்து விட்டார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னை, கோவையில் உள்ள குறிப்பிட்ட சில பொறியியல் கல்லூரிகளில் மட்டும்; அதுவும் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளுக்கு மட்டும் கேப்பிடேஷன் பீஸ் ஐந்து லட்சம் ரூபாய் வரை இருந்தது. ஆனால் இப்போது கோவையில் பிரபலமான ஒரு பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுக்கு 30 லட்சம் ரூபாய் வரை கேபிடேஷன் பீஸ் வாங்குகிறார்கள். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் குறைந்தபட்சம் 20 பொறியியல் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆர்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் பாடப்பிரிவுகளில் மாணவர்களை சேர்க்க ரூ15 லட்சம் வரை கேபிடேஷன் பீஸ் வாங்கிக் குவிக்கிறார்கள். சென்னை, கோவையில் சில இரண்டாம் கட்ட கல்லூரிகளிலேயே 10 லட்சம் ரூபாய் கேப்பிடேஷன் பீஸ் இருந்தால் தான் அட்மிஷன். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாணவர்கள் சேர்க்கைக்கு திண்டாடிக் கொண்டிருந்த கிராமப்புற பொறியியல் கல்லூரிகள் கூட இன்று கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப் பிரிவுக்கு மூன்று லட்சம் ரூபாய் வரை கேபிடேஷன் பீஸ் வசூல் செய்கிறார்கள். இந்த வெளிப்படையான கட்டண கொள்ளை தொடர்பாக மத்திய- மாநில அரசுகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாக இல்லை. காரணம் அரசியல்வாதிகள் பலரே கல்வி அதிபர்களாக இருப்பது தானோ என நினைக்கத் தோன்றுகிறது. நீதிமன்ற உத்தரவை இந்த விஷயத்தில் அரசு அமல்படுத்தாமல் இருப்பது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர பரிசீலித்து வருகிறோம்.' என்றார் எஸ்.ஆர் ஸ்ரீராம்.
கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி இது பற்றி கூறுகையில், 'தமிழகத்தில் 440 பொறியியல் கல்லூரிகளும் கேபிடேஷன் பீஸ் வசூலிப்பதாக கூறி விட முடியாது. நல்ல ரிசல்ட், நல்ல வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும் கல்லூரிகளை தேடிப் பிடித்து மாணவர்களின் பெற்றோர் பணத்தைக் கொடுக்கிறார்கள். குறிப்பாக கம்ப்யூட்டர் சயின்ஸ், செயற்கை நுண்ணறிவு மாதிரியான படிப்புகளுக்கு டிமாண்ட் அதிகமாக இருக்கிறது. இப்படி அதிக கட்டணம் வசூலிப்பதை நாம் சரி என சொல்லவில்லை. அதே சமயம் இதற்கு ஆதாரம் எதுவும் இருப்பதில்லை.
கல்லூரிகளிலும் தரமான ஆசிரியர்கள், தரமான புதிய தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க அதிக செலவு ஆகும். எனவே அரசு கல்லூரிகளில் செலவாகும் தொகையில் 90 சதவீதத்தையாவது தனியார் கல்லூரி மேனேஜ்மென்ட் கோட்டாவுக்கு கட்டணமாக அரசு நிர்ணயிக்க வேண்டும்.
கர்நாடகா மாதிரியான மாநிலங்களில் ஆண்டுக்கு ஒரு முறை தனியார் கல்லூரிகளை அழைத்துப் பேசி மேனேஜ்மென்ட் கோட்டா கட்டணத்தை அவ்வப்போது அதிகரித்துக் கொடுக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் இன்ஜினியரிங் கல்லூரி உரிமையாளர்கள் தொடர்ந்து இதை கேட்டு வந்த போதும், கடந்த ஐந்து- ஆறு ஆண்டுகளாக கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஐந்து- ஆறு ஆண்டுகளாக ஊதிய உயர்வு இல்லாமல் ஆசிரியர்கள் வேலை பார்ப்பார்களா? புதிய வசதிகளை செய்யாமல் ஒரு கல்லூரி நடத்த முடியுமா?
மெடிக்கல் அட்மிஷனை எடுத்துக் கொள்ளுங்கள். அரசு கல்லூரி கட்டணம் 18,000 ரூபாய். தனியார் மருத்துவ கல்லூரியில் அரசு கோட்டா கட்டணம் ஆண்டுக்கு மூன்று முதல் மூன்றரை லட்சம் ரூபாய். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மேனேஜ்மென்ட் கோட்டா கட்டணம் 12 முதல் 13 லட்சம் ரூபாய். அதுவே நிகர் நிலை பல்கலைக்கழகமாக இருந்தால் ஆண்டுக்கு 25 லட்ச ரூபாய் கட்டணம். அங்கே அரசு கோட்டாவுக்கும் மேனேஜ்மென்ட் கோட்டாவிற்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம் இருக்கிறது? அதேபோல பொறியியல் கல்லூரிகளுக்கும் மேனேஜ்மென்ட் கோட்டா கட்டணத்தை தகுந்த அளவில் மாற்றி அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை மிக நியாயமானது. இதை தமிழக அரசின் உயர்கல்வித்துறை செய்ய வேண்டும். அதை செய்துவிட்டு கேபிடேஷன் கட்டணத்தையும் கண்காணிப்பது சரியாக இருக்கும். இப்போதைக்கு தனியார் கல்லூரிகளில் 65 சதவீதம் அரசு கோட்டா சீட்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கவே கூடாது என்பது எங்கள் நிலைப்பாடு' என்றார் ஜெயபிரகாஷ் காந்தி.
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் கல்வியாளருமான பாலகுருசாமி இது பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்-இடம் பேசுகையில், '10 லட்சம், 15 லட்சம் என ஆரம்பித்து கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப் பிரிவுக்கு 30 லட்சம் வரையிலும் கூட கேபிடேஷன் பீஸ் வசூலிக்கப்படுவதாக நானும் கேள்விப்பட்டேன். இது சட்டவிரோதம் என்பதில் சந்தேகம் இல்லை.
அண்ணா பல்கலைக்கழகம், அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் ஆகியவை இதை கண்காணிக்க வேண்டும். அதே சமயம் இப்படி அதிக கட்டணத்தை ரிசிப்ட் கொடுத்து வாங்க மாட்டார்கள். எனவே இதற்கு ப்ரூஃப் இருக்காது. பணம் கொடுத்தவர்களே நான் கொடுத்தேன் என சொல்ல மாட்டார்கள். புற்றுநோய் மாதிரி இது ஒரு பெரிய நோய் தான்.
எனினும் முடிந்த அளவு ஆவணங்களை சேகரித்து நான் துணைவேந்தராக இருந்தபோது சில கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுத்தேன். அதேபோல இப்போதைய சூழலில் அரசியல் அழுத்தங்களுக்கு ஆட்படாமல் நடவடிக்கை எடுப்பார்களா என எனக்கு தெரியவில்லை. கல்லூரிகளில் இப்படி வருகிற பணம் முழுக்க கருப்பு பணம் தான். வருமான வரி துறையினர் சில நேரங்களில் ரெய்டு செய்தாலும் கூட தொடர் நடவடிக்கை இருப்பதில்லை.
உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக புகார் அளிக்க வெப்சைட் தொடங்க உத்தரவிட்டாலும் கூட பலன் கிடைப்பது சந்தேகம். காரணம் நான் துணைவேந்தராக இருந்தபோது கல்லூரிகள் கூடுதல் கட்டணம் கேட்டால் புகார் சொல்லுங்கள் என வெளிப்படையாக அறிக்கை விடுத்தேன். ஆனால் புகார் சொல்லவே யாரும் தயாராக இல்லை. எனவே இதில் பணம் வாங்குபவர்கள் மட்டுமல்ல, அள்ளிக் கொடுக்கும் பெற்றோரும் திருடர்கள் தான். இப்படி ஆதாரமே இல்லாமல் வாங்கப்படும் கேபிடேஷன் கட்டணத்தில் நீதிமன்றமும் என்ன செய்ய முடியும்? மக்களாக பார்த்து திருந்தினால் தான் உண்டு. காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போடும் மக்களிடம் நாம் என்ன எதிர்பார்க்க முடியும்?' எனக் கேள்வி எழுப்பினார் பாலகுருசாமி.
மேனேஜ்மென்ட் கோட்டா கட்டணம் போதுமானதாக இல்லை என்றால் அதை சரியான அளவில் நிர்ணயிக்க வேண்டியது அரசின் கடமை. அந்தத் தொகையை விட கூடுதலாக வசூலிக்காமல் கண்காணிப்பது அரசாங்கத்தின் மிக முக்கிய பொறுப்பு. நீதிமன்ற உத்தரவுகள் காற்றில் பறப்பதற்கு அல்ல என்பதை அரசும், கல்லூரி நிர்வாகங்களும் உணர வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.