அந்நிய செலாவணி மோசடி வழக்கில், டிடிவி தினகரனுக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்காக, சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜரானார் டிடிவி தினகரன். இங்கிலாந்தில் உள்ள வங்கி ஒன்றில் ஒரு கோடிக்கும் அதிகமான அமெரிக்க டாலரை முறைகேடாக டெபாஸிட் செய்ததாக 1996-ம் ஆண்டு மத்திய அமலாக்கப் பிரிவினர் டிடிவி தினகரன் மீது அந்நிய செலாவணி மோசடிப் பிரிவில் வழக்கு பதிந்தனர்.
நீண்ட காலமாக எழும்பூர் பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் வரை குறுக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘விசாரணைக்கு முன்பே அமலாக்கத்துறையினர் கேள்விகளைத் தரவேண்டும்’ என்று கோரினார் டிடிவி தினகரன். அவரின் கோரிக்கைக்கு, நீதிபதி மலர்மதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
‘சிவில் நீதிமன்றம் போல் குற்றம் சாட்டப்பட்டவருக்கு கிரிமினல் நீதிமன்றத்தில் உரிமையில்லை. அதுபோல், இந்த கேள்விகளைத்தான் கேட்க வேண்டும் என அமலாக்கத்துறையினரிடம் குற்றம் சாட்டப்பட்டவர் கேட்க முடியாது. இது நீதிக்கு எதிரானது’ என நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
வழக்கு விசாரணையை 4 மணிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அப்போது கேட்கப்படும் கேள்விகளுக்கு டிடிவி தினகரன் பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.