அதிமுக பொதுச் செயலாளர் யார்? தேர்தல் ஆணையம் விளக்கம்

அதிமுக பொதுச் செயலாளர் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா காலமானதையடுத்து, முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். அதேபோல், அக் கட்சியின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அதன் மூலம், அதிமுக பொதுச் செயலாளராக ஜெயலலிதாவின் தோழியான சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பன்னீர்செல்வம், கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அதன்பின்னர், சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டு, முதல்வராகும் முயற்சியை சசிகலா எடுத்தார். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் சிறை சென்றார். அதேசமயம், அவரது உறவினர் டிடிவி தினகரனை அதிமுக துணைப் பொதுச் செயலாளராக சசிகலா நியமித்தார்.

அதேபோல், கட்சித் தலைமையை எதிர்த்த பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டது. ஆனால், தனது பதவியை பறிக்க சசிகலாவுக்கு அதிகாரம் இல்லை என அப்போதே ஓபிஎஸ் தெரிவித்தார். மேலும், பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைவரது கட்சிப் பதவிகளும் பறிக்கப்பட்டது.

“அடிப்படை உறுப்பினர்களின் வாக்கெடுப்பு மூலமே அதிமுக-வின் பொதுச் செயலாளரை நியமனம் செய்ய வேண்டும். அது தான் அதிமுக-வின் சட்ட விதி. சசிகலா தற்காலிக பொதுச்செயலாளரே. எனவே, அவரால் யாரையும் கட்சியை விட்டு நீக்க முடியாது” என பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர்கள் தெரிவித்து வந்தனர்.

இந்த சூழலில் நடைபெற்ற ஆர்கே நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்தானது. அதிமுக கட்சி மற்றும் சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம், அதிமுக அம்மா அணி என்ற பெயரில் சசிகலா அணியும், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி என்ற பெயரில் பன்னீர்செல்வம் அணியும் செயல்பட உத்தரவிட்டது.

முடக்கப்பட்ட அதிமுக கட்சிக்கும், சின்னத்துக்கும் இருதரப்பினரும் உரிமை கோரி வருகின்றனர். மேலும், பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டது செல்லாது என்றும் பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர். இது தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் இரு தரப்பிலும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனினும் இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் தான் உள்ளது. தேர்தல் ஆணையம் தனது முடிவை இதுவரை அறிவிக்கவில்லை.

இந்நிலையில், அதிமுக-வின் தற்போதைய பொதுச்செயலாளர் யார் என தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் சுவாமிநாதன் கல்யாண சுந்தரம் என்பவர் தேர்தல் ஆணையத்துக்கு கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், அதிமுக பொதுச்செயலாளர் யார் என தற்போது வரை தீர்மானிக்கவில்லை என பதிலளித்துள்ளது. மேலும், அதிமுக-வில் உட்கட்சி பிரச்னை தொடர்ந்து நிலுவையில் உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close