இரட்டை இலை சின்னம் தொடர்பாக வருகிற அக்டோபர் மாதம் 5-ம் தேதி விசாரணை நடத்த முடிவு செய்துள்ள தேர்தல் ஆணையம், மதுசூதனன், பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழக முதல்வராகவும், அஇஅதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி மரணம் அடைந்தார். இதனை அடுத்து அஇஅதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டது. ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு முதல்வராகப் இருந்த பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் கட்சியில் இருந்தும் பன்னீர் செல்வம் நீக்கபட்டார். பின்னர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றார். பின்னர் பன்னீர் செல்வம் அணியுடன் ஏற்பட்ட உடன்படிக்கையின் படி எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர் செல்வம் அணியினர் கடந்த மாதம் இணைந்தனர்.
முன்னதாக, ஜெயலலிதா உயிரிழப்பை தொடர்ந்து காலியான ஆர்கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என இரண்டு அணிகள் மட்டுமே செயல்பட்டு வந்தன. அதில், சசிகலா அணியின் தரப்பில் டிடிவி தினகரன் களமிறங்கினார். பன்னீர்செல்வம் அணியின் தரப்பில் மதுசூதனன் களமிறக்கப்பட்டார். இருவரும் அதிமுக சின்னம் மற்றும் கட்சிக்கு உரிமை கோரியதால், அதிமுக சின்னம் மற்றும் கட்சியை தேர்தல் ஆணையம் முடக்கியது. மேலும், அதிமுக அம்மா என்ற பெயரில் சசிகலா அணியும், அதிமுக புரட்சித் தலைவி அம்மா என்ற பெயரில் ஓபிஎஸ் அணியும் செயல்படுமாறு அறிவுறுத்திய தேர்தல் ஆணையம், இடைத்தேர்தலில் தொப்பி மற்றும் இரட்டை மின்விளக்கு என வேறு வேறு சின்னங்களை ஒதுக்கியது.
இதனைத் தொடர்ந்து, அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரிய இரு தரப்பும், லட்சக்கணக்கில் ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளது.
அதேசமயம், வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்பு பணப்பட்டுவாடா புகார் காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து, இரட்டை இலை சின்னதை மீட்க லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் சிறை சென்றார். அதிமுக அம்மா அணி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
இதனிடையே, ராம்குமார் ஆதித்யன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமாக 45 ஆண்டுகளாக இருந்து வரும் இரட்டை இலையை அக்கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக தேர்தல் ஆணையம் முடக்கியது. அதிமுக நிர்வாகக் குழு தேர்தல் நடத்தி அதில் வெற்றி பெறும் அணியிடம் இரட்டை இலை சின்னத்தை ஒப்படைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கின் மீதான விசாரணை செப்டம்பர் 14-ம் தேதி நடைபெற்ற போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி அதிமுகவின் இரு அணிகளும் தேர்தல் ஆணையத்திடம் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளன. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இரு அணிகள்தான் அவகாசம் கேட்டு வருகின்றன" என வாதிட்டார்.
தொடர்ந்து மறுநாளான செப்டம்பர் 15-ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, இரு தரப்பிலும் மாறிமாறி அவகாசம் கோருவதால் முடிவெடுக்க முடியவில்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து வருகிற அக்டோபர் 31-ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக வருகிற அக்டோபர் மாதம் 5-ம் தேதி விசாரணை நடத்த முடிவு செய்துள்ள தேர்தல் ஆணையம், மதுசூதனன், பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில், இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோருவது தொடர்பாக புதிய ஆவணங்கள் தாக்கல் செய்ய விரும்பினால், வருகிற 29-ம் தேதிக்குள் தகுந்த ஆதாரங்களுடன் தாக்கல் செய்யலாம் என்றும், கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதியன்று, கட்சியின் பொதுக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும். இரட்டை இலை சின்னம் தொடர்பாக, டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் வருகிற 5-ம் தேதி மாலை விசாரணை நடக்கும். அப்போது, நேரிலோ அல்லது அவர்களது அதிகாரப்பூர்வ வழக்கறிஞர்களோ பங்கேற்கலாம் என கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, இபிஎஸ் - ஓபிஎஸ் அணிகள் இணைப்புக்கு பின்னர், அதிமுக பொதுக் குழுவை கூட்டி, சசிகலாவை அதிமுக நியமனப் பொதுச்செயலர் பதவியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றினர். இதனால் அதிருப்தி அடைந்த தினகரன் தரப்பினர் தங்களை கேட்காமல் இரட்டை இலை சின்ன வழக்கில் முடிவெடுக்க கூடாது என தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.