பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று கூடியது. மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது, கூவத்தூரில் பணபேரம் நடத்தப்பட்டது குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் கோரினார்.
ஆனால், இதற்கு அனுமதி மறுத்த சபாநாயகர், வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் சட்டமன்றத்தில் அது குறித்து விவாதிக்க அனுமதிக்க முடியாது என்றார். இது தொடர்பான விவாதங்களால் சட்டமன்றத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
சுமார் 45-நிமிடங்கள் சட்டமன்றத்தில் அமளி நீடித்ததையடுத்து, சபாநாயகர் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூண்டோடு வெறியேற்ற உத்தரவிட்டார்.
இதையடுத்து, சட்டமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட திமுக-வினர், தலைமைச்செயலகத்திற்கு எதிரே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மறியலில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர் மாலையில் அவர்களை விடுவித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் மு.க ஸ்டாலின் கூறியதாவது: நாளை காலை நிச்சயமாக சட்டமன்றத்திற்கு செல்வோம். பண பேர விவகாரம் குறித்து நாளையும் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்புவோம். இந்த விவகாரத்தை எளிதில் விட்டுவிடமுடியாது. இது தொடர்பாக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டிப்பாக குரல் கொடுப்போம் என்று கூறினார்.