By: Ganesh Raj
Updated: June 16, 2017, 05:06:20 PM
பணபேர விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதம் செய்ய சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததால் சட்டமன்றத்தில் இருந்து திமுக உறுப்பினர்கள் இன்றும் வெளிநடப்பு செய்தனர்.
இது தொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பணபேர விவகாரத்தில் விவாதம் நடத்த சபாநாயகர் ஆதாரம் கேட்டிருந்தார். ஆதாரம் இருந்தால் தான் அது தொடர்பாக விவாதிக்க முடியும் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படியே கூவத்தூரில் நடந்த பணபேர விவகாரம் தொடர்பான ஆதாரத்தை சட்டமன்றத்தை கொண்டு வந்து, விவாதம் நடத்த சபாநாயகரிடம் கோரினோம். ஆனால், அவர் தனியாக அறையில் வந்து கொடுங்கள் என்று கூறினார். அதன் பின்னர் விவதம் நடத்தலாமா, இல்லையா என்பது குறித்து கூறுவதாக தெரிவித்தார். இதையடுத்து இதனை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக கூறிய சபாநாயகர், பின்னர் ஏற்றுக்கொண்டார்.
அப்போது அமைச்சர் ஜெயக்குமார் குறுக்கிட்டதையடுத்து, அவைக்குறிப்பில் இருந்து மீண்டும் நீக்குவதாக சபாநாயகர் தெரிவித்தார். சபாநாயகர் உத்தரவிட்ட பின்னர் முதலமைச்சராக இருந்தால் எதையும் கூறக்கூடாது என்ற நிலையில், அமைச்சர் ஒருவரின் பேச்சைக் கேட்டு சபாநாயகர் சர்வாதிகரமாக நடந்து கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தோம்.
கூவத்தூர் விடுதியில் அடைத்துவைக்கப்பட்ட எம்எல்ஏ-க்களிடம் பல கோடி கைமாறப்பட்டுள்ளது. அதன்படி தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இது தமிழகத்திற்கு மிகப்பெரிய அவமானம் ஆகும் என்று கூறினார்.
முன்னதாக மு.க ஸ்டாலின் தான் கொண்டு வந்த ஆதாரத்தை, சபாநாயகரிடம் நேரில் வழங்கினார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Electoral fraud mk stalin brings evidence dmk walkout from tamilnadu assembly