குதிரை பேரம் தொடர்பாக நேற்று வெளியான வீடியோ தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த வீடியோ உண்மையானது அல்ல என்று மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் அணியில் உள்ள மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சரவணன், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது குதிரை பேரம் நடத்தப்பட்டதாக என்று கூறியதாக ஒரு வீடியோ நேற்று வெளியானது. நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான விவகாரத்தில் எம்எல்ஏ-க்களிடம் பல கோடி பேரம் பேசப்பட்டது என அந்த வீடியோவின் மூலம் தெரியவந்தது.
எதிர்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த வீடியோ வெளியான அடுத்த சில மணி நேரங்களில், தமிழக அரசு குறித்து ஊழல் ஆட்சி என அறிக்கைகளை விட்டுத் தள்ளினர்.
இது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பில் இருந்து சரவணிடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டது. மேலும், இந்த விவகாரத்தில் விளக்கம் அளிப்பதற்காக எம்எல்ஏ சரவணன் இன்று ஓபிஎஸ்-சை சந்தித்து பேசினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரவணன் கூறியதாவது: நம்பிக்கை வாக்கெடுப்பின் போது குதிரை பேரம் நடத்தப்பட்டதாக வெளியான வீடியோ தவறானது. அதில் எந்தவித உண்மையும் இல்லை. அந்த வீடியோவில் வருவது நான்தான், ஆனால் அதில் வரும் குரல் என்னுடையது அல்ல.அந்த வீடியோவில் வரும் குரல் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாஸ், தமீமுன் அன்சாரி குறித்து நான் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. வீடியோ குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து அது தொடர்பாக வழக்கு தொடர்வேன் என்று கூறினார்.