Advertisment

மக்கள் வரிப்பணத்தை சூறையாடும் மோடியின் ‘கார்ப்ரேட் அரசு’: வைகோ

கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு லட்சக்கணக்கான கோடி வரிச்சலுகை அளித்து மக்கள் வரிப்பணத்தை சூறையாடி வரும் மோடியின் ‘கார்ப்ரேட் அரசு’ எளிய மக்கள் மீது பொருளாதார தாக்குதலை நடத்தி வருவது அக்கிரமம்

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vaiko

சமையல் எரிவாயு உருளைகள் மானியம் ரத்து, மாதந்தோறும் ரூபாய் 4 விலையேற்றம் உள்ளிட்ட அறிவிப்புகளை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும். பொது விநியோகத் திட்டத்தை சீரழிக்கும் முடிவை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சமையல் எரிவாயு உருளைகளுக்கு வழங்கப்பட்டு வரும் மானியங்களை அடுத்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ரத்து செய்வது என்றும், எரிவாயு உருளைகள் விலையை மாதந்தோறும் 4 ரூபாய் உயர்த்த வேண்டும் என்றும் மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்து இருக்கிறார்.

2016 ஜூலை மாதம் முதல் சமையல் எரிவாயு உருளைகள் விலையை 10 முறை உயர்த்திய மோடி அரசு, ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வந்தவுடன், ஜூலை மாதம் ரூ 32 உயர்த்தியது. தற்போது மானியம் ரத்து செய்யப்படுவதால், எரிவாயு விலையாக ரூ.564 கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

மாதத்தோறும் ரூ.4 விலை உயர்த்தப்பட்டால், சமையல் எரிவாயு உருளையின் விலை அதிகரிப்பது மட்டுமின்றி, பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலையை காரணம் காட்டி பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்த்தப்படும்போது, சமையல் எரிவாயு விலையும் உயரும். இதனால் கட்டுப்படுத்தப்படாத அளவுக்கு சமையல் எரிவாயு விலை அதிகரித்து, மக்கள் மீதுதான் சுமை ஏற்றப்படும்.சமையல் எரிவாயு விலை ஏற்றத்தால் கோடிக்கணக்கான சாதாரண எளிய மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவர்கள். மத்திய அரசின் மக்கள் விரோத இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்கு உரியது.

2017 பிப்ரவரி மாதம் மத்திய நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபோது, சர்க்கரை மானியம் ரத்து என்று அறிவிப்பு வெளியிட்டார். உலக வங்கியின் உத்தரவை ஏற்று பொது விநியோகத் திட்டத்தை ஒரேயடியாக ஒழித்துக் கட்டும் வேலையில் மோடி அரசு இறங்கி இருக்கிறது என்று அப்போதே நான் எச்சரித்து இருந்தேன்.

தற்போது மோடி அரசு பொது விநியோகத் திட்டத்தில் உணவுப் பொருட்கள் வழங்குவதை ஒரேயடியாக நிறுத்தும் நோக்கில் முதல்கட்ட அறிவிப்பாக, ஆண்டு வருமானம் ஒரு இலட்ச ரூபாய் உள்ளவர்களுக்கு பங்கீட்டுக் கடைகளில் வழங்கப்பட்டு வரும் அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழகத்தில் பொது விநியோகத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதால், ஜூலை 1ஆம் தேதி தமிழக அரசு சத்தமில்லாமல் அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், முன்னுரிமை குடும்ப அட்டைகள் அடையாளம் காணப்பட்டு, பங்கீட்டுக் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கு என்ன பொருள் என்றால், மத்திய அரசின் உத்தரவுப்படி, பொதுவிநியோகத் திட்டத்தில் இனி அனைவருக்கும் உணவுப் பொருட்கள் வழங்க முடியாது என்பதாகும். ஆனால் தமிழக உணவு அமைச்சர் இதனை மறுத்து வழக்கம் போல் பொதுவிநியோகத் திட்டத்தில் அனைவருக்கும் பொருட்கள் கிடைக்கும் என்று கூறி இருப்பதை நம்ப முடியாது.

ஏனெனில், மோடி அரசின் எதேச்சதிகார, மக்கள் விரோதப் போக்கிற்கு தமிழக அரசும் உடந்தையாக இருப்பதை பல நிகழ்வுகள் உணர்த்தி இருக்கின்றன. பெரும் கார்ப்ரேட் நிறுவனங்கள் வங்கிகளில் கடன் பெற்று, அவற்றை திரும்பச் செலுத்தாமல், ஏமாற்றி வருகின்றது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் வாராக் கடன் தொகை ரூபாய் ரூ.6 லட்சம் கோடி என்று நிதித்துறை அமைச்சரே தெரிவித்து இருக்கிறார். கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு லட்சக்கணக்கான கோடி வரிச்சலுகை அளித்து மக்கள் வரிப்பணத்தை சூறையாடி வரும் மோடியின் ‘கார்ப்ரேட் அரசு’ எளிய மக்கள் மீது பொருளாதார தாக்குதலை நடத்தி வருவது அக்கிரமம் ஆகும்.

மூன்று ஆண்டுகளில் மோடி அரசின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் ஏழை, எளிய மக்களுக்கு பெரும் பாதிப்பை உருவாக்கி வருகின்றன. சமையல் எரிவாயு உருளைகள் மானியம் ரத்து, மாதந்தோறும் ரூபாய் 4 விலையேற்றம் உள்ளிட்ட அறிவிப்புகளை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும். பொது விநியோகத் திட்டத்தை சீரழிக்கும் முடிவை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Bjp Central Government Vaiko Gas Cylinder Mdmk Lpg Subsidy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment