Advertisment

சிவாஜி மணி மண்டபத்தை அக். 1-ல் முதல்வர் திறக்கிறார் : நடிகர் பிரபு எதிர்ப்பால் அரசு பணிந்தது

சிவாஜி கணேசன் மணி மண்டப சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் 1-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
sivaji ganesan memorial, sivaji ganesan memorial opening on october 1, actor sivaji ganesan

சிவாஜி கணேசன் மணி மண்டப சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் 1-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.

Advertisment

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னையில் மணி மண்டபம் கட்டவேண்டும் என்பது அவரது ரசிகர்களின் நெடுநாள் கோரிக்கை! தமிழக சட்டமன்ற பேரவை கூட்டத்தில் 26.08.2015 அன்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ், ‘நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவை போற்றும் வகையில், மணிமண்டபம் அமைக்க தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடத்தில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசின் சார்பாக மணிமண்டபம் அமைக்கப்படும்’ என்று அறிவித்தார்.

அதன்படி சென்னை அடையாறு எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரி அருகில் ரூ.2.80 கோடி மதிப்பீட்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபம் கட்ட அரசாணை வெளியிடப்பட்டது. இப்போது மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டு திறக்க தயார் நிலையில் உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபம் கட்டப்பட்டு பணி நிறைவடைந்ததையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.2.80 கோடி செலவில் கட்டப்பட்ட மணிமண்டபத்தை அன்னாரது பிறந்த நாளான 01.10.2017 அன்று தமிழக அரசின் சார்பில் திறப்பு விழா நடத்திட உத்தரவிட்டுள்ளார்.

இம்மணிமண்டபம் திறப்பு விழா 01.10.2017 காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைத்து, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துவார்.

இத்திறப்பு விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் குடும்பத்தினர், திரையுலக பிரமுகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்' என கூறப்பட்டிருந்தது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பு சிவாஜி கணேசன் குடும்பத்தினருக்கும் அவரது ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சென்னையில் இருக்கும் சூழலில் அமைச்சர் ஜெயகுமார் மூலமாக மணிமண்டபத்தை திறப்பது, சிவாஜிக்கு அவமானம் என ரசிகர்கள் கருத்து கூறினர்.

நடிகர் பிரபு இன்று வெளியிட்ட செய்தியில், ‘ஜெயலலிதா உயிரோடு இருந்தால், அவரே வந்து மணிமண்டபத்தை திறந்திருப்பார். முதல்வர் இந்த நிகழ்ச்சியை தவிர்ப்பது எங்களுக்கு வருத்தம் தருகிறது’ என்றார். அதேபோல சிவாஜி சமூகநலப் பேரவை தலைவர் கே.சந்திரசேகரன் வெளியிட்ட அறிக்கையில், ‘அமைச்சர்களை வைத்து மணிமண்டபத்தை திறக்க வேண்டாம். திரையுலக பிரபலத்தை வைத்து திறக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தார்.

அமைச்சர் ஜெயகுமாரை வைத்து மணிமண்டபத்தை திறப்பதில், சிவாஜி ரசிகர்களுக்கு இன்னொரு பிரச்னையும் இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பியபோது, ‘சிவாஜி கணேசனாலேயே அரசியலுக்கு வந்து ஒரு எம்.எல்.ஏ.கூட ஆக முடியவில்லை’ என குறிப்பிட்டார். இதற்கு சிவாஜி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். அதே அமைச்சர் ஜெயகுமாரை இந்த விழாவில் முன்னிலைப்படுத்துவது சரியல்ல என்பது அவர்கள் கருத்து.

நடிகர் பிரபு சில தினங்களுக்கு முன்பு, அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே முதல்வரும் துணை முதல்வரும் சிவாஜி மணி மண்டப திறப்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று (28-ம் தேதி) மதியம் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ‘அக்டோபர் 1-ம் தேதி சிவாஜி மணி மண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைப்பார்’ என அறிவித்தார். சிவாஜி குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் எதிர்ப்பு காரணமாக இந்த விஷயத்தில் அரசு தரப்பில் நிலைப்பாடை மாற்றிக்கொண்டதாக தெரிய வருகிறது.

 

Prabhu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment