அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெறுகிறது. டிடிவி தரப்பில் மேலும் அவகாசம் கேட்கும் வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்தது. இதை தொடர்ந்து நாங்கள் தான் உண்மையான அதிமுக என்று ஓபிஎஸ் அணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர். இதை தொடர்ந்து கட்சியின் பெயரையும், கட்சியின் சின்னமான இரட்டை இலையையும் இந்திய தேர்தல் ஆணையம் முடக்கியது. இதையடுத்து, நாங்கள் தான் உண்மையான அதிமுக என்றும் இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும் எனவும் சசிகலா, ஓ. பன்னீர்செல்வம் அணிகள் சார்பில் தேர்தல் ஆணையத்தில் தனித்தனியாக லட்சக்கணக்கான பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், சசிகலா தரப்பு எதிர்பார்க்காத வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர் செல்வமும் ஓரணியில் இணைந்தனர். சசிகலா, தினகரன் ஆகியோர் மற்றொரு அணியாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக இறுதி தீர்ப்பை அக்டோபர் 31ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகள் இரண்டு அணிகளிடமும் கட்சியின் சின்னம் மற்றும் கட்சி குறித்தும் அக்டோபர் 6ம் தேதி விசாரணை நடத்தினர். இதில் இரு அணிகளும் தங்கள் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிரமாண பத்திரங்கள் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆதரவு எல்எல்ஏ, எம்பிக்கள் தங்களுக்கு ஆதரவாக இருக்கும் அனைத்து விவரங்களையும் ஆணைய அதிகாரிகள் முன்னிலையில் தாக்கல் செய்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தேர்தல் ஆணைய அதிகாரிகள் இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையை அக்டோபர் 13ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
இந்த நிலையில் டிடிவி தினகரன் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் ஒரு புதிய மனுவினை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், எதிரணிகள் தாக்கல் செய்துள்ள ஆவணங்களில் பல போலியானவை என்று ஏற்கனவே ஆணையத்தில் தெரிவித்துள்ளோம். அதனால், அதுகுறித்த உண்மை நிலவரங்களை ஆய்வு செய்து உண்மையான அதிமுக உறுப்பினர்கள் யார் என்பதை எங்களுக்கு உள்ள கட்சியின் உறுப்பினர்களின் அதிகப்படியான எண்ணிக்கையையும் தாக்கல் செய்வதற்கு எங்களுக்கு கூடுதல் அவகாசம் வேண்டும். அதனால், இரட்டை இலை சின்னம் தொடர்பான இறுதிகட்ட விசாரணையை 13ம் தேதியில் இருந்து 21ம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அக்டோபர் 13ம் தேதி நடைபெறவிருந்த விசாரணை அக்டோபர் 16ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. தவிர, தேர்தல் ஆணையம் இறுதி முடிவை அறிவிக்க நவம்பர் 10-ம் தேதி அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், இரண்டாம் கட்ட விசாரணை தேர்தல் ஆணையம் முன்பு இரண்டு அணிகளிடம் இன்று நடைபெறுகிறது. இபிஎஸ்-ஓபிஎஸ் அணி சார்பில் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், மைத்ரேயன் எம்பி, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும், டிடிவி தினகரன் அணி சார்பில் 10 எம்எல்ஏக்கள், 6 எம்பிக்கள், டிடிவி தரப்பு வக்கீல்கள் இந்த விசாரணையில் கலந்து கொள்கின்றனர். இந்திய தேர்தல் ஆணையம் முன்பு பிற்பகல் 3 மணியளவில் விசாரணை நடைபெறுகிறது.
இந்த விசாரணைக்கு பிறகே இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்று இந்திய தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியுள்ளன. இன்று இரண்டாவது கட்ட விசாரணை நடைபெறுவதால், இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்று அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 10-ம் தேதி வரை தேர்தல் ஆணையத்திற்கு அவகாசம் கொடுத்து ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பதால், விசாரணை மேலும் ஓரிரு தினங்கள் நடைபெற வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இதற்கிடையே டிடிவி தரப்பில் மேலும் அவகாசம் கேட்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
இது குறித்து டிடிவி அணியின் முக்கிய நிர்வாகிகளிடம் நாம் பேசியபோது, ‘இபிஎஸ்-ஓபிஎஸ் அணியினர் போலி ஆவணங்களை தாக்கல் செய்திருக்கிறார்கள். குறுக்கு விசாரணையில் அதை நிரூபிக்க தேவையான ஆதாரங்களை திரட்டி வருகிறோம். எனவே எங்களுக்கு இன்னும் அவகாசம் தேவை. அதை தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம். தேவைப்பட்டால் மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடுவோம்’ என்றார் அவர்.