பொதுப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு இன்று துவக்கம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பொது பிரிவு கலந்தாய்வு இன்று துவங்கவுள்ளது.

By: July 23, 2017, 9:19:53 AM

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பொது பிரிவு கலந்தாய்வு இன்று துவங்கவுள்ளது.

நீட் தேர்வில் பங்கேற்றவர்கள், பொறியியல் கல்வியை விட்டு விட்டு மருத்துவக் கல்விக்கு சென்று விட்டால், காலியிடம் அதிகம் ஏற்படும் என்ற நிலை இருந்ததால் பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதி தள்ளி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அதில் கால தாமதம் ஏற்படவே, நடப்பாண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதி அண்மையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 583 பொறியியல் கல்லூரிகளில், மாணவர்கள் சேர்கைக்கான கலந்தாய்வு கடந்த 17-ம் தேதி தொடங்கியது.

முதல் இரண்டு நாட்களான, ஜூலை 17 மற்றும் 18-ம் தேதிகளில் தொழில் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. ஜூலை 19-ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, விளையாட்டு பிரிவினருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 19 மற்றும் 20-ம் தேதிகளில் நடைபெற்று முடிந்து, விளையாட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 21-ம் தேதி நடைபெற்றது. இந்த கலந்தாய்வுகளில் இதுவரை சுமார் 2000 இடங்கள் நிரம்பியுள்ளன.

இந்நிலையில், பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 23-ம் தேதி (இன்று தொடங்குகிறது. இன்று முதல் ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி வரை இந்த கலந்தாய்வு நடைபெறவுள்ளது. பொறியியல் கலந்தாய்வுக்கான அழைப்பு கடிதம் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வின் போது மாணவர்கள் அழைப்பு கடிதத்தை கொண்டு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வழக்கமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் கலந்தாய்வு நடைபெறும் போது, மாணவர்களுக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்படும். ஆனால், கடந்த சில நாட்களாக நடைபெற்ற கலந்தாய்வில் இந்த வசதிகள் காணப்படவில்லை. ஆனால், “பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வின் போது அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்படும்” என அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

அதன்படி, மாணவர்களுக்கும் அவர்களுடன் வரும் ஒருவருக்கும் சென்னைக்கு வந்து செல்ல பேருந்து கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. வெளியூர்களில் இருந்து கலந்தாய்வில் பங்கேற்க முதல் நாளே சென்னைக்கு வரும் மாணவியர், தாய் அல்லது பெண் உறவினருடன் வந்தால் அவர்கள் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலுள்ள விடுதியில் தங்க இலவச இட வசதி வழங்கப்படுகிறது.

மருத்துவ உடற்தகுதி பரிசோதனை மையம், கேன்டீன், கலந்தாய்வு கட்டணம் செலுத்த வங்கி கவுன்டர்கள், கடன் பற்றி தெரிவிக்க வங்கியின் விசாரணை அரங்குகள், அரசின் உதவித்தொகை தகவல் மையங்கள், விசாரணை மையம் என அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கல்லூரிகளில் உள்ள காலி இடங்கள் குறித்து அடுத்தடுத்து தெரிவிக்கவும், ஒவ்வொரு கலந்தாய்வு அமர்வு முடிந்த பின்னர், அதன் விவரங்கள் பிரத்யேக இணையதளத்தில் வெளியிடவும், பெரிய டிஜிட்டல் திரைகள் மூலம் இந்த விவரங்களை நேரடி ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Engineering counselling for general category starts today

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X