Advertisment

விலைவாசி உயர்வு: அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்பாட்டம் அறிவிப்பு

அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க சார்பில் வருகிற 20-ந்தேதி கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

author-image
Martin Jeyaraj
New Update
EPS announce AIADMK protest in TN On essential commodities price hike Tamil News

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும் கண்டன ஆர்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி

AIADMK Edappadi K Palaniswami  Tamil News: அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அ.தி.மு.க சார்பில் வருகிற 20-ந்தேதி கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அ.தி.மு.க சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது பின்வருமாறு:-

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும்; அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதைக் கண்டித்தும்; இவைகளையெல்லாம் கண்டும் காணாமல் இருந்து வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைக் கண்டித்தும், கழகத்தின் சார்ப்பில் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் - 20.7.2023 - வியாழக் கிழமை.

விடியா திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த இரண்டாண்டு காலத்தில், தமிழ் நாட்டில் மக்கள் வாழ்வே கேள்விக்குறியாகி உள்ளது. மக்கள் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், பீன்ஸ், அவரைக்காய், கேரட் உள்ளிட்ட காய்கறிகளின் விலைகளும்; துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, புளி, சீரகம் உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலைகளும் தற்போது கடுமையாக உயர்ந்துள்ளது.

மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்குவதாக வெற்றுத் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் திமுக அரசு, அதை முறையாக செயல்படுத்தவில்லை. விலைவாசி உயர்வு காரணமாக, சாதாரண ஏழை எளிய, நடுத்தர மக்கள் வாழவே முடியாத சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.

கழக ஆட்சிக் காலங்களின்போது, இயற்கை இடர்ப்பாடுகளாலும், இன்னும் சில காரணங்களாலும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு ஏற்படும் நேரங்களில், அதிமுக அரசு தனிக் கவனம் செலுத்தி, அதற்கு ஏற்ற நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அண்டை மாநிலங்களில் இருந்து காய்கறி உள்ளிட்ட மளிகைப் பொருட்களை கொள்முதல் செய்து நியாய விலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு பண்டகசாலைகள் மூலமாக மக்களின் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி செய்யப்பட்டதுடன், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைத்தது அதிமுக அரசு என்பதை இந்த நேரத்தில், நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அதே போல், இந்த இரண்டாண்டு விடியா திமுக ஆட்சியில், தமிழ் நாட்டு மக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். வாழவே வழியற்று நிற்கதியாய் நிற்கின்ற மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. தமிழ் நாட்டு மக்கள் 10 ஆண்டு காலமாக மறந்து போயிருந்த மின்வெட்டு, நிர்வாகத் திறனற்ற திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அறிவிக்கப்படாத மின்வெட்டால் சிறு, குறு தொழில் முனைவோர் செய்வதறியாது கலங்கி நின்ற நேரத்தில், மூன்று மடங்கிற்கும் மேலான மின்கட்டண உயர்வு என்ற பேரிடியை இறக்கியது இந்த திமுக அரசு. மனசாட்சியற்ற இந்த திமுக அரசு, கழக அரசு கொடுத்து வரும் இலவச மின்சாரத்தையும் தடுப்பதற்கான முயற்சிகள்; அதைத் தொடர்ந்து சொத்து வரி, வீட்டு வரி 100 சதவீதம், கடை வரி 150 சதவீதம் வரை உயர்வு - இதன் காரணமாக வீட்டு வாடகை உயர்வு; பால் மற்றும் பால் பொருட்களின் விலை உயர்வு; கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு; வெளியூர் செல்லும் பேருந்துகளின் கட்டணம் வானளாவ உயர அனுமதித்தது இந்த விடியா திமுக அரசு.

இது போதாதென்று, திமுக அரசு, பத்திரப் பதிவுத் துறையில், மக்கள் தங்கள் சொத்துக்களை சந்ததியினருக்கு பெயர் மாற்றம் செய்தல், குடியிருப்பதற்கு மனை வாங்குதல், சொத்துக்களை அடமானம் வைத்து கடன் பெறுதல் உள்ளிட்ட பதிவுகளுக்கு பல மடங்கு கட்டணங்களை உயர்த்தி, மக்களை மேலும் கடனாளிகளாக ஆக்கப் பார்க்கிறது.

திறனற்ற திமுக அரசின் ஆட்சிக் காலத்தில், அனைத்துத் துறைகளும் ஊழல் மயப்படுத்தப்பட்டு நாட்டின் ஜனநாயகம் கேலிப் பொருளாக்கப்பட்டு மக்கள் வாழ்வு சீரழிக்கப்படுகிறது. மின்சாரத் துறை, டாஸ்மாக், பத்திரப் பதிவுத் துறை என தொடங்கி, சகல துறைகளிலும் ஊழல் கோலோச்சுகிறது. சுமார் 30 ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடாக முதலமைச்சரின் மகனும், மருமகனும் ஓர் ஆண்டில் சேர்த்திருக்கிறார்கள் என்று முன்னாள் நிதி அமைச்சர், தற்போதைய அமைச்சர் பேசிய ஆடியோ பதிவிற்கு முதலமைச்சர் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை; எந்த ஒரு பதிலும் கொடுக்கவில்லை; எந்த ஒரு விசாரணையும் இல்லை.

நாட்டில் அனுமதியின்றி நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பார்கள் இயங்குகிறது என்று நான் குற்றச்சாட்டு வைத்து, கழகம் போராடிய நிலையில் அங்கொன்றும், இங்கொன்றுமாக பார்களுக்கு சீல் வைத்தது திமுக அரசு என்றால், இரண்டாண்டு காலம் அந்த பார்கள் அனுமதியின்றி இயங்கியது உண்மைதானே. அப்படியெனில், இரண்டாண்டுகள் அந்த முறையற்ற பார்களில் இருந்து பல கோடி ரூபாய் ஊழல் செய்யப்பட்டது தெரிய வருகிறது. இதுபோல, அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. ஊழலில் திளைக்கின்ற திமுக அரசின் மக்கள் விரோத, ஜனநாயக விரோதப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழ் நாட்டில் இவ்வளவு அவலங்கள், வன்முறைகள், விலைவாசி உயர்வு, பல்வேறு துறைகளில் ஊழல் ஆகிய எதையும் கண்டுகொள்ளாமல், குடும்ப நலன் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு மு.க. ஸ்டாலின் பொம்மை முதலமைச்சராக இருந்து வருகிறார். எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது பழிபோட்டு தப்பிக்கப் பார்க்கிறார். முதலமைச்சரின் இத்தகைய மக்கள் விரோதச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்நிலையில், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும்; அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதைக் கண்டித்தும்; இவைகளையெல்லாம் கண்டும் காணாமல் இருந்து வரும் பொம்மை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், 20.07.2023 - வியாழக் கிழமை காலை 10 மணியளவில், வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; கழகம் மற்றும் சார்பு அமைப்புகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும்; உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும்; கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கான ஏற்பாடுகளை, வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்களும், நிர்வாகிகளும் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும். மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், திமுக அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு ஆதரவு நல்கிடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamilnadu Aiadmk Admk Edappadi K Palaniswami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment