Advertisment

இரட்டை இலையை வென்ற இபிஎஸ்-ஓபிஎஸ் : ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி

இரட்டை இலையை இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்திருக்கிறது. இதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல டி.டி.வி.தினகரன் முடிவு செய்திருக்கிறார்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
election commission of india, two leaves symbol, aiadmk, tamilnadu government, t.t.v.dhinakaran, deputy cm o.panneerselvam, cm edappadi palaniswami, vk sasikala

இரட்டை இலை சின்னத்தை இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு வழங்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்திருக்கிறது. இதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல டி.டி.வி.தினகரன் முடிவு செய்திருக்கிறார்.

Advertisment

இரட்டை இலை சின்னம், தமிழகத்தின் குக்கிராமங்கள் வரை அறிமுகமானது. எம்.ஜி.ஆர். அறிமுகம் செய்த இந்த சின்னமும், அதிமுக.வின் தொடர் வெற்றிகளுக்கு ஒரு காரணமாக இருந்து வந்திருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இரட்டை இலை யாருக்கு? என்கிற கோதா ஏற்பட்டது.

இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது சசிகலா மற்றும் ஓபிஎஸ் அணிகள் தேர்தல் ஆணையத்தை அணுகின. இந்திய தேர்தல் ஆணையம் இரு அணிகளுக்கும் வழங்காமல், கடந்த மார்ச்சில் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது.

இரட்டை இலை விவகாரம் நிலுவையில் இருந்தபோதே இபிஎஸ்-ஓபிஎஸ் கை கோர்த்தார்கள். அவர்கள் தங்கள் அணிக்கு இரட்டை இலையை கேட்டு புதிய ஆவணங்களை தாக்கல் செய்தனர். டி.டி.வி.தினகரன் தரப்பிலும், இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக புகார் கூறப்பட்டது.

இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் இரு அணிகள் சார்பிலும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் தேர்தல் ஆணையத்தில் ஆஜராகி வாதிட்டனர். கடைசியாக கடந்த 8-ம் தேதி இறுதி விசாரணையை இந்திய தேர்தல் ஆணையம் முடித்துக்கொண்டது. அதன்பிறகு இரு தரப்பும் எழுத்துபூர்வ ஆவணங்களை தாக்கல் செய்ய கூறப்பட்டது. பின்னர் தேதி குறிப்பிடாமல், உத்தரவு வழங்குவதை தேர்தல் ஆணையம் தள்ளி வைத்தது.

இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி-துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான அணிக்கு வழங்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்திருக்கிறது. இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று எந்த நேரமும் வெளியாகும் என தெரிகிறது.

இதற்கிடையே இது குறித்து கர்நாடக மாநில அதிமுக செயலாளரும் டி.டி.வி.தினகரன் ஆதரவாளருமான புகழேந்தி கூறுகையில், ‘அப்படி அறிவிப்பு வெளியானால் உடனடியாக நீதிமன்றத்தை அணுகி, தடை உத்தரவு பெறுவோம்’ என்றார். அமைச்சர் தங்கமணி கருத்து கூறுகையில், ‘இது தர்மத்திற்கு கிடைத்த வெற்றி’ என்றார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை டிசம்பர் 31-க்குள் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் சூழலில், இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்திருப்பதால் இபிஎஸ்-ஓபிஎஸ் அணியினர் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள்.

மாலை 6.15: தலைமை அலுவலகத்தில் இருந்து சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு இபிஎஸ்-ஓபிஎஸ் கூட்டாக வந்தனர். அங்கு மலர் தூவி ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செய்தனர். முன்னதாகவே வந்து காத்திருந்த அமைச்சர்களும் வரிசையாக அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அதே வளாகத்தில் எம்.ஜி.ஆர் நினைவிடத்திலும் அவர்கள் அஞ்சலி செலுத்தினர். தொண்டர்கள் எம்.ஜி.ஆற்., ஜெயலலிதா பெயர்களை உச்சரித்து வாழ்த்து கோஷம் எழுப்பினர்.

மாலை 06.00 : கட்சியில் அனைவரும் ஒற்றுமையோடு செயல்படுகிறோம். நிர்வாகிகள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு உள்ளோம். தேர்தல் ஆணையம் நீதி, உண்மை, தர்மத்தை நிலைநாட்டி உள்ளது என ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். கூட்டறிக்கை.

மாலை 4.55 : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகம் வந்து சேர்ந்தார். மொத்த அமைச்சரவையும் தொண்டர்களுடன் நின்று அவருக்கு வரவேற்பு கொடுத்தது. வழக்கமாக ஓபிஎஸ் வந்தபிறகு வருகை தரும் இபிஎஸ், முதல் முறையாக முன்னதாக வந்திருக்கிறார். ஓபிஎஸ் வருகைக்காக அனைவரும் காத்திருக்கிறார்கள்.

மாலை 4.40 : தேர்தல் ஆணைய உத்தரவில், ‘மதுசூதனன் தலைமையிலான அணிக்கு இரட்டை இலையை வழங்குவதாக’ உத்தரவிட்டது. இந்த ‘கெத்து’ இன்று மதுசூதனனிடம் வெளிப்பட்டது. முதல் முறையாக அவரது கார் அதிமுக தலைமை அலுவலகத்தில் போர்டிகோ வரை வந்தது.

மாலை 4.35 : முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரவர் இல்லங்களில் இருந்து காரில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கிளம்பினர். இதர தலைமைக்கழக நிர்வாகிகள் முன்னதாகவே அங்கு திரண்டனர். தலைமைக் கழகத்தில் அவர்கள் செய்தியாளர்களை சந்திப்பதாக தகவல். அதன்பிறகே மெரினா செல்கிறார்கள்.

மாலை 4.20 : அதிமுக தலைமை அலுவலகத்தில் திரளான தொண்டர்கள் கூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு நிருபர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ‘இரட்டை இலையை மீட்டுத் தந்த முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் தொண்டர்கள் சார்பில் நன்றி. இதில் மத்திய அரசின் தலையீடு இருப்பதாக கூறுவது உள்நோக்கம் கொண்டது’ என்றார் செங்கோட்டையன்.

மாலை 4.15 : இரட்டை இலையை வென்றதை தொடர்ந்து இபிஎஸ்-ஓபிஎஸ் கூட்டாக சென்னை மெரீனாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. ஜெயலலிதாவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.

மாலை 3.30 : சேலத்தில் டிடிவி தினகரன் அளித்த பேட்டியில், ‘கடந்த மார்ச் மாதம் நாங்கள் மெஜாரிட்டி எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் எண்ணிக்கை காட்டியபோது தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுக்க வில்லை. இன்று சுட்டிக்காட்டுகிற சாதிக் அலி ஜட்ஜ்மெண்ட்-டை தேர்தல் ஆணையம் அன்று மறந்துவிட்டது. இந்திய தலைமை தேர்தல் அதிகாரியாக இருப்பவர், குஜராத் தலைமைச் செயலாளராக இருந்தவர். தேர்தல் ஆணையம் இதில் நடுநிலையாக செயல்படவில்லை. மத்திய அரசின் கை இதில் இருக்கிறது’ என்றார் டிடிவி.

மாலை 3.15 : டிடிவி தினகரன் ஆதரவாளரான புகழேந்தி கூறுகையில், ‘தேர்தல் ஆணையம் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஏற்கனவே அமைச்சர் ஒருவர், ‘எங்களுக்கு மோடி இருக்கிறார்’ என சொன்னது போல அமைந்திருக்கிறது. ஆனால் இது இறுதி தீர்ப்பு அல்ல. நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம். இந்த வழக்கை கவனித்தவன் என்ற அடிப்படையில் கூறுகிறேன். இது சிக்கலான பிரச்னை. அவ்வளவு சுலபத்தில் இதில் முடிவெடுக்க முடியாது’ என்றார்.

மாலை 3.00 : சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, எடப்பாடி அணி இணைந்துவிட்டதாக கூறியதன் அடிப்படையிலும் இ.மதுசூதனன் தலைமையிலான அணிக்கு இரட்டை இலையை வழங்குவதாக தேர்தல் ஆணையம் தனது அறிவிப்பில் தெரிவித்திருக்கிறது.

பிற்பகல் 2.45 : இரட்டை இலை சின்னத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி-துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்கு ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டது.

பிற்பகல் 2.30: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆலோசனைக் கூட்டத்தில் இருந்ததால், இரட்டை இலை சின்னம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வந்ததா? என்பதை நான் அறியவில்லை. பத்திரிகையாளர்கள் தெரிவித்த உறுதியான கருத்து அடிப்படையிலேயே மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தேன்’ என விளக்கம் அளித்திருக்கிறார்.

பிற்பகல் 1.50 : இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புக்கு முன்பாகவே முதல்வர் தங்களுக்கு இரட்டை இலை கிடைத்திருப்பதாக பேட்டி அளித்ததை டிடிவி ஆதரவாளர் புகழேந்தி விமர்சனம் செய்தார். ‘தேர்தல் ஆணையர் இவருக்கு போன் மூலமாக கூறினாரா?’ என கேள்வி எழுப்பினார் அவர்.

பிற்பகல் 1.45: முதல்வரின் பேட்டியைத் தொடர்ந்து சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் அதிமுக.வினர் திரண்டனர். அங்கு பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை அவர்கள் வெளிப்படுத்தினர்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ட்வீட்...

பிற்பகல் 1.30: அதிகாரபூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடாத நிலையிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘இரட்டை இலை சின்னம் தங்களுக்கு கிடைத்திருப்பதாக’ சென்னையில் பேட்டி அளித்தார். ‘இந்திய தேர்தல் ஆணையம் நியாயமான தீர்ப்பு வழங்கியிருக்கிறது. தேவையான ஆதராங்களை நாங்கள் அளித்த அடிப்படையில் ஆய்வு செய்து இந்த நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள். இது ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் மகிழ்ச்சி’ என்றார் முதல்வர்.

பிற்பகல் 1.15 : மின் துறை அமைச்சர் தங்கமணி, ‘இது தர்மத்திற்கு கிடைத்த வெற்றி’ என்றார். டிடிவி ஆதரவாளரான புகழேந்தி, ‘அப்படி உத்தரவு வந்தால், நீதிமன்றத்தை நாடி தடை உத்தரவு பெறுவோம்’ என்றார்.

நடிகர் எஸ்.வி.சேகர் ட்வீட்...

பிற்பகல் 1.00 : பிற்பகல் 1 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு வழங்க முடிவு செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின.

 

Vk Sasikala Two Leaves Symbol T T V Dhinakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment