காவிரி பிரச்னையில் மாற்றுத் தீர்வை திணித்தால் போராட்டம் வெடிக்கும் : திமுக மாநாட்டில் ஸ்டாலின் தீர்மானம்

திமுக.வின் முன்னணி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், தொண்டர்கள் முகாமிட்டிருக்கும் ஈரோடு நோக்கியே அரசியல் பார்வையாளர்களின் கவனம் திரும்பியிருக்கிறது.

ஈரோடு மண்டல திமுக மாநாடு நேற்று (மார்ச் 24) தொடங்கியது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து பெருமளவில் திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். முதல் நாள் மாநாட்டில் நிர்வாகிகள் பலரும் வெவ்வேறு தலைப்புகளில் பேசினர்.

ஈரோடு மண்டல திமுக மாநாடு 2-ம் நாள் நிகழ்ச்சிகள் இன்று (25-ம் தேதி) காலை 9:00 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. காலை 10:00 மணி முதல் முக்கிய நிர்வாகிகள் உரையாற்றுகிறார்கள். 12:30 மணிக்கு திண்டுக்கல் லியோனி பட்டிமன்றம், மாலை 3:00 மணிக்கு இசை நிகழ்ச்சி, மாலை 4:00 மணிக்கு மாநாட்டு தீர்மானம் வாசித்தல், மாலை 6:00 மணிக்கு மாநாட்டு நிறைவு நிகழ்ச்சி என நிகழ்ச்சி நிரல் அமைக்கப்பட்டிருக்கிறது.

திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் இரவு 8:00 மணிக்கும், செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இரவு 8:30 மணிக்கும் நிறைவுப் பேரூரை ஆற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. திமுக.வின் முன்னணி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், பெருவாரியான தொண்டர்கள் முகாமிட்டிருக்கும் ஈரோடு நோக்கியே அரசியல் பார்வையாளர்களின் கவனம் திரும்பியிருக்கிறது.

ஈரோடு மண்டல திமுக மாநாடு 2-ம் நாள் நிகழ்ச்சிகள் #DMKMaanaadu2018 2-ம் நாள் LIVE UPDATES

மாலை 5.00 : டி.கே.எஸ்.இளங்கோவன், நெல்லிக்குப்பம் புகழேந்தி, வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர். மேலும் சுமார் 30 பேர் பேச இருப்பதாகவும், அதன்பிறகே பேராசிரியர் அன்பழகன், மு.க.ஸ்டாலின் ஆகியோரின் உரை இடம் பெறும் என்றும் கூறப்பட்டது.

காலை 11.35 : ‘திமுக ஈரோடு மண்டல மாநாட்டு மேடையில் தலைவர் கலைஞர் இல்லையென்றாலும் அவர் ஒவ்வொரு தமிழன் இதயத்திலும் இருக்கிறார். மாநில அரசை சரியாக நிர்வகித்ததால் உங்களுக்கு தண்டனையாக உங்கள் மாநிலத்திற்கான நிதியை குறைக்கிறோம் என்கிறது மத்திய அரசு.’ என குறிப்பிட்டார் கனிமொழி.

பகல் 11.30 : திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி பேசினார்.

பகல் 11.20 : காவிரி பிரச்னை தொடர்பாக சிறப்புத் தீர்மானம் ஒன்றை மாநாட்டில் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். அந்த சிறப்பு தீர்மானம் வருமாறு :

‘மத்திய மாநில அரசுகளுக்கு இறுதி எச்சரிக்கை! காவிரி பிரச்னையில் திமுக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. கலைஞர் வலியுறுத்தலின் பேரில் விபி சிங் அரசு நடுவர் மன்றம் அமைத்தது. நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பு, இறுதி தீர்ப்பு கிடைக்க கலைஞர் அரசு தொடர்ந்து பணியாற்றியது. நடுவர் மன்றம் இறுதி தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதும் ஒழுங்காற்றும் குழு அமைப்பது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

தமிழ்நாடு அரசு இதில் உரிய அழுத்தத்தை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும் என திமுக ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. இந்தச் சூழலில் 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது என மத்திய அரசு முடிவு எடுத்திருப்பது தமிழ்நாட்டின் உரிமைகளை முறித்துப் போடுகிற செயல்பாடு ஆகும்.

ஏற்கனவே இருந்த ஆணையத்தை பல் இல்லா ஆணையம் என விமர்சித்தவர் ஜெயலலிதா. இன்று கர்நாடக தேர்தல் என்கிற குறுகிற அரசியல் லாபத்திற்காக காவிரி மேற்பார்வை ஆணையம் என ஒன்றை அமைத்தால் மாநில அரசு அதை எதிர்க்க வேண்டும்.

காவிரி பிரச்னையில் தமிழ்நாடு அரசு விட்டுக்கொடுத்து தெண்டனிட்டு கிடந்தால் திமுக கடுமையான போராட்டங்களை நடத்தும். காவிரி மேலாண்மை வாரியம் தவிர வேறு எதையும் ஏற்கமாட்டோம். காவிரி மேலாண்மை வாரியம் தவிர வேறு எதையும் திணித்தால் கடும் போராட்டம் வெடிக்கும்’. இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டிருக்கிறது. தொண்டர்களின் கரவொலியுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பகல் 11.00 : கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் பேசினார்.

பகல் 10.50 : ‘சுதந்திர சிந்தனைகள் மீதான வன்முறை’ என்ற தலைப்பில் பேராசிரியர் சுப.வீ பேசினார்.

பகல் 10.45 :‘தமிழை மத்திய ஆட்சி மொழியாக ஆக்குவோம்’ என்ற தலைப்பில் புலவர் இந்திரகுமாரி பேசுகையில், ‘தளபதி ஆட்சிக்கு வந்தால் தமிழ் மத்திய மொழி ஆகும். தளபதி ஆட்சிக்கு வந்ததும், கலைஞரின் நூல்களை நாட்டுடமை ஆக்கும் கோப்பில் முதல் கையொப்பம் இடவேண்டும்’ என்றார்.

பகல் 10.30 மணி : இன்னிசை நிகழ்சியுடன் தொடங்கிய மாநாட்டில் அசன் முகம்மது ஜின்னா பேசுகையில், ‘பாட்டரசியல், நீட் அரசியல், நோட்டரசியல், ஓட்டரசியல் என ஆரியர்களின் கூட்டரசியல்!’ என குறிப்பிட்டார்.

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close