அதிமுக.வின் குழப்பங்களை தி.மு.க. பயன்படுத்தாது : மு.க ஸ்டாலின்

அதிமுக-வின் குழப்பங்களை எல்லாம் பயன்படுத்த திமுக தயாராக இல்லை. எங்களுடைய பணி என்றைக்கும் மக்களுக்கான பணி.

அதிமுக-வின் உச்சகட்ட குழப்பங்களை எல்லாம் பயன்படுத்த திமுக தயாராக இல்லை என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமானமு.க.ஸ்டாலின் நேற்று கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை நேரில் ஆய்வு செய்தார். இதனிடையே மு.க ஸ்டாலின் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, நிதி ஒதுக்கீடு செய்து, அதன் மூலமாக தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை எல்லாம் பார்வையிட்டு, ஆய்வு செய்துள்ளேன். குறிப்பாக, வில்லிவாக்கம் எல்.சி.ஐ.-1 லெவல் கிராஸ் மேம்பாலம் கட்டும் பணியைப் பார்வையிட்டேன்.

இந்தப் பணியை நிறைவேற்றித் தர வேண்டுமென்று தொடர்ந்து நான் வலியுறுத்தி, கடந்த 2012 ஆம் ஆண்டு மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு இதுகுறித்து கடிதம் எழுதினேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவரும் எனக்கு ஒரு பதில் கடிதம் அனுப்பினார். அதனடிப்படையில், 2015-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் முதல்கட்டமாக இப்பணிக்கு ரூ.7 கோடியே 35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இப்போது பணிகள் தொடங்கியுள்ளன.

அதேபோல, கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 80 கிலோமீட்டர் தொலைவுக்கு உயரழுத்த மற்றும் குறைந்த அழுத்த மின் தடங்கள் செல்கின்றன. மேலே செல்லும் அந்த மின் கம்பிகளை புதைவடக் கம்பிகளாக மாற்ற வேண்டுமென்று சட்டமன்றத்தில் நான் தொடர்ந்து வலியுறுத்தினேன். சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் அதனையேற்று, உறுதிமொழி தந்ததன் அடிப்படையில், எல்.டி.க்கு ரூ.270 கோடி மற்றும் எச்.டிக்கு ரூ.85 கோடி என மொத்தம் ரூ.355 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தப் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

மேலும், கணேஷ் நகர், நேர்மை நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 50,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அவர்களுக்கு சீரான மின்சாரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், 110/11 கிலோவாட் மற்றும் 33/11 கிலோவாட் திறனுள்ள துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டிய அவசியத்தை நான் சட்டமன்றத்தில் எடுத்துரைத்து, அதனடிப்படை யில் அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்ல, சீனிவாச நகரில் உள்ள மாநகராட்சித் தொடக்கப்பள்ளியில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.64 லட்சம் ஒதுக்கீடு செய்து, பள்ளியில் உள்ள நூலகத்துக்கு 400 புத்தகங்கள், மாணவ – மாணவிகள் பயன்படுத்த வட்ட மேசைகள், நாற்காலிகள், எழுது பொருட்கள், வாட்டர் பாட்டில்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. அதோடு, சீனிவாச நகரில் உள்ள தாய் – சேய் நல இல்லத்தையும் ஆய்வு செய்தேன்.

இதுபோன்ற பல பணிகளை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன். அவர்களும் கூடிய விரைவில் பணிகளை முழுமையாக நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளார்கள்.

செய்தியாளர்: அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சமையல் செய்தவர் பெயரில் பினாமியாக சொத்துகள் வாங்கப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறதே?

மு.க ஸ்டாலின்: இதை ஒரு புதிய செய்தியாக நான் கருதவில்லை. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது வருமானவரித்துறையினர் 80 கோடி ரூபாய் பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்களைக் கைப்பற்றிய உடனே அவர் பதவி விலகி இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, உயிரைக் கொல்லக்கூடிய, புற்றுநோய் வரக்கூடிய போதைப் பொருளான குட்காவை பொதுமக்களிடையே விற்பனை செய்வதற்காக அவருக்குத் தொடர்ந்து மாமூல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதை ஆதாரத்தோடு நாங்கள் சட்டமன்றத்தில் எடுத்துச் சொல்லி யிருக்கிறோம். அப்போதாவது அவர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். இப்போது அவருக்குச் சொந்தமான சொத்துகள், நிலங்கள், உடமைகள் எல்லாம் முடக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இப்போதாவது அவர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். அடுத்ததாக, பினாமி பெயரில் சொத்துகள் வாங்கியிருப்பதாக செய்திகள் வருகின்றன. இதற்குப் பிறகும் அவர் ராஜினாமா செய்யாமல் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை.

செய்தியாளர்: ஆளும்கட்சியான அதிமுகவில் உச்சகட்டக் குழப்பம் ஏற்பட்டு இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

மு.க ஸ்டாலின்: அந்த உச்சகட்ட குழப்பங்களை எல்லாம் பயன்படுத்த திமுக தயாராக இல்லை. எங்களுடைய பணி என்றைக்கும் மக்களுக்கான பணி. எங்களுடைய பணி கட்சிப்பணிகளை, கடமைகளை நாங்கள் செவ்வனே ஆற்றி வருகிறோம்.

செய்தியாளர்: அதிமுகவில் நிலவும் குழப்பங்களால் அரசு நிர்வாகம் பாதிக்கப்பட்டு உள்ளதே?

மு.க ஸ்டாலின்: அதனால் தானே செயல்படாத ஆட்சி என்று சொல்கிறோம். இதுவொரு ‘குதிரை பேர’ ஆட்சி. இந்த ஆட்சியைப் பொறுத்தவரையில், நீட் தேர்வுப் பிரச்னையாக இருந்தாலும், உதய் மின் திட்டப் பிரச்னையாக இருந்தாலும், உணவுப்பாதுகாப்புத் திட்டம் என எந்தப் பிரச்னை பற்றியும் அவர்கள் கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை.

இந்த ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும், அதற்கு எத்தனை எம்.எல்.ஏ.க்களைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும், அவர்களுக்கு எவ்வளவு லஞ்சம் கொடுப்பது, கமிஷன் கொடுப்பது என்பது பற்றி மட்டும் தான் அவர்கள் சிந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதையும் தாண்டி, அவர்களுடைய தலைகளுக்கு மேல் தொங்கிக் கொண்டி ருக்கும் கத்திகளாக உள்ள வருமானவரித்துறை வழக்குகள், அமலாக்கத்துறை வழக்குகள், தேர்தல் கமிஷன் அனுப்பியுள்ள நோட்டீசுகள் ஆகியவற்றிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக மத்திய அரசிடம் மண்டியிட்டு, சரணாகதி அடைந்திருக்கக்கூடிய நிலை இருக்கின்ற காரணத்தால், தமிழ்நாட்டில் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை என்பது தான் உண்மை. அதனால், பொதுமக்கள் பல துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் ஆளாகி வருகிறார்கள்.

செய்தியாளர்: சென்னையில் போதிய குடிநீர் விநியோக இல்லாததால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறதே?

மு.க ஸ்டாலின்: தண்ணீர் பிரச்னை பரவலாகப் பல இடங்களில் இருப்பதால், போதிய குடிநீரை லாரிகளில் கொண்டு சென்று விநியோகம் செய்ய வேண்டும் என்று நாங்கள் தெரிவித்து உள்ளோம். நாங்கள் சொல்லும்போது, அப்போதைக்கு அரசு அதிகாரிகள் ஏதோ நடவடிக்கை எடுக்கிறார்களே தவிர, தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தரமாகத் தீர்வு காண்பதில்லை.

செய்தியாளர்: எடப்பாடி தொகுதியில் திமுக சார்பில் தூர் வாரப்பட்ட குளத்தினை நீங்கள் பார்வையிட ஏன் அனுமதி தரவில்லை என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதே?

மு.க ஸ்டாலின்: அங்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதற்குக் காரணம், சட்டம் – ஒழுங்குப் பிரச்னையா அல்லது கவுரவப் பிரனையா என்று உயர் நீதிமன்றம் கேட்டுள்ளது. அந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் அதை நான் விமர்சிக்கக்கூடாது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மட்டுமல்ல, சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் மட்டுமல்ல, யாராக இருந்தாலும் அங்கு சென்று ஆய்வு செய்யும் உரிமை இருக்கிறது. அதைத்தான் நீதி மன்றத்தில் நாங்கள் வலியுறுத்தி இருக்கிறோம். வெள்ளிக்கிழமையன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அதன் பிறகு அதுபற்றி முடிவெடுக்கப்படும்.

செய்தியாளர்: மீண்டும் அந்தக் குளத்துக்குச் சென்று பார்வையிட உள்ளீர்களா?

மு.க ஸ்டாலின்: நிச்சயமாக அங்கு சென்று பார்ப்பேன். நீதிமன்றத்தில் வழக்கு நடை பெற்று வருவதால், முறைப்படி அங்கு செல்வேன். எடப்பாடியில் மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழர்கள் எங்கெல்லாம் நீர் நிலைகளைத் தூர் வாரி இருக்கிறார்களோ, அங்கெல்லாம் சென்று அவற்றைப் பார்வையிடும் உரிமை எனக்குள்ளது. எனவே, நிச்சயமாக அவற்றை எல்லாம் சென்றுப் பார்ப்பேன். கொளத்தூர் தொகுதியில் கழகத்தினர் தூர் வாரியுள்ள குளங்களை யும், அரசின் சார்பிலும், பொதுப்பணித்துறை, அறநிலையத்துறை மற்றும் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகளையும் இன்றைக்கு நேரில் சென்று பார்வையிட்டு இருக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close