இந்த ஆட்சியை கலைக்க இன்னொருவர் பிறந்துகூட வர முடியாது என எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் ஓபிஎஸ் பேசினார்.
தமிழக அரசு சார்பில் மாவட்டம் வாரியாக எம்.ஜிஆர். நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரியில் நேற்று நடைபெற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்துகொண்டனர். இதில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
தமிழகத்தை மன்னர் இல்லாத நாடு என்று சில மங்குனிகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியிலே ஒன்றரைக் கோடி விசுவாசத் தொண்டர்களுமே மன்னர்கள்தான். அம்மா வழிகாட்டிய தர்மத்தின் பாதையிலே சாதனைகளை நோக்கித்தான் நாம் சென்று கொண்டிருக்கிறோம். வெற்றிகளை நோக்கித்தான் வீரநடைபோட்டு கொண்டிருக்கிறோம்.
எதிர்ப்புகள் எந்தத் திசையில் இருந்து வந்தாலும் சரி. எந்த உருவத்தில் வந்தாலும் சரி. அவற்றையெல்லாம் உடைத்தெறிவோம். சில சுயநல அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாடு நன்றாக இருந்தாலே பிடிக்காது. நாட்டிலே எதாவது பிரச்சினைகள் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் பிரச்சினைகளை அவர்களே உருவாக்கி விடுவார்கள்.
சிலருக்கு நாடு அமைதியாக இருந்தாலே பிடிக்காது. எதாவது போராட்டங்கள் நடந்து கொண்டே இருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை என்றாலும் அவர்களே போராட்டங்களைத் தூண்டி விடுவார்கள். இந்த ஆட்சி தொடரக் கூடாது என்று சதி செய்பவர்கள் எல்லோருமே மக்களின் விரோதிகள் என்று தமிழக மக்கள் சொல்லி கொண்டிருக்கிறார்கள்.
தமிழக மக்களை தனது தர்மக் கரங்களால் தாங்கிப் பிடித்த எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை, அம்மாவின் அரசு அரசு விழாவாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அதைக்கூட சிலர் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள். திரையுலகில் சம்பாதித்ததை எல்லாம் மக்களுக்காகவே அள்ளி வழங்கியவர் எம்.ஜி.ஆர்.
மக்களுக்காக கொடுத்தவரின் நூற்றாண்டு விழாவை, அரசு விழாவாக கொண்டாடக் கூடாதா? நேர்மையான ஆட்சியைக் கொடுத்த புரட்சித் தலைவருக்கு, தூய்மையான ஆட்சியைக் கொடுத்த புரட்சித் தலைவருக்கு, கறைபடாத ஆட்சியைக் கொடுத்த புரட்சித் தலைவருக்கு, புனிதமான ஆட்சியைக் கொடுத்த புரட்சித் தலைவருக்கு, அம்மாவின் அரசு நூற்றாண்டு விழா கொண்டாடக் கூடாதா? அதைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் மட்டும் பொறாமையில் வெந்து கொண்டிருக்கிறார்கள். புரட்சித் தலைவர் இருந்த பொழுதே, அவரை எதிர்க்க திராணி இல்லாதவர்கள், இப்பொழுது அவரது நூற்றாண்டு விழாவை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
புரட்சித் தலைவரின் நூற்றாண்டு விழா என்பது. செம்மொழி மாநாடு என்ற பெயரிலே, மக்கள் பணத்தில் கொண்டாடப்பட்ட குடும்ப விழா அல்ல. பல கோடி மக்களின் பசியாற்றிய, அன்பு தெய்வத்தின் நூற்றாண்டு விழா. அம்மாவின் அரசு, வெறும் மணல் கோட்டை அல்ல. சுலபமாக கலைத்து விடுவதற்கு! எம்.ஜி.ஆரின் தர்மத்தால், அம்மாவின் கடும் உழைப்பால், தன்னலமற்ற தியாகத்தால், உருவான அரசு. அம்மாவின் ஆட்சியைக் கலைப்பதற்கு, இனி ஒருவன் இந்த மண்ணில் பிறந்துகூட வர முடியாது.
அம்மாவின் அரசுக்கு எதிராக துரோகமும், துரோகமும் சேர்ந்திருக்கிறது. வஞ்சகமும், வஞ்சகமும் சேர்ந்திருக்கிறது. பொய்மையும், பொய்மையும் சேர்ந்திருக்கிறது. விஷத்தோடு, விஷம் சேர்ந்திருக்கிறது. நஞ்சு மனம் படைத்தவர்களை, பஞ்சு பஞ்சாக பறக்க விடும் ஆற்றல் அம்மாவின் விசுவாத் தொண்டர்களுக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.