பேரவைத் தலைவர் முட்டுக்கொடுத்தாலும் இந்த ஆட்சி அகற்றப்படுவது உறுதி: ராமதாஸ்

ஆளுநரும், பேரவைத் தலைவரும் முட்டுக்கொடுத்தாலும் கூட சட்டத்தின் உதவியுடன் இந்த ஆட்சி அகற்றப்படுவது உறுதி என ராமதாஸ் கருத்து

By: September 18, 2017, 2:22:38 PM

பதவியில் தொடர்வதற்காக எந்த பாதகத்தையும் செய்யத் துணிந்து விட்ட எடப்பாடி பழனிசாமி அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். ஆளுநரும், பேரவைத் தலைவரும் முட்டுக்கொடுத்தாலும் கூட சட்டத்தின் உதவியுடன் இந்த ஆட்சி அகற்றப்படுவது உறுதி என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நீக்க வேண்டும் என்று தமிழக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த 19 சட்டப்பேரவை உறுப்பினர்களில் 18 பேரை தகுதிநீக்கம் செய்து பேரவைத் தலைவர் ஆணையிட்டுள்ளார். கட்சித் தாவல் தடை சட்டத்தின் எந்த பிரிவும் பொருந்தாத ஒரு செயலுக்காக இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஜனநாயகப் படுகொலை கண்டிக்கத்தக்கது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி தமிழக அரசின் தலைமைக் கொறடா அளித்த மனுவின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை பேரவைத் தலைவர் எடுத்திருக்கிறார். தகுதி நீக்கத்திற்கான இந்த அடிப்படையே தவறு ஆகும். சட்டமன்றத்திற்குள் கொறடா ஆணையை மீறி செயல்படும் பட்சத்தில் தான், சட்டமன்ற உறுப்பினர்களை பேரவைத் தலைவர் பதவி நீக்கம் செய்ய முடியும். கொறடா உத்தரவை 18 உறுப்பினர்களும் மீறாத நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது முறையற்றது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பினாமி அரசை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சரும, அவரது துதிபாடிகளும் துடித்துக் கொண்டிருக்கின்றனர். மீதமுள்ள 3.5 ஆண்டுகள் பதவிக்காலத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே பதவியை தக்கவைத்துக் கொள்வதற்கு துடிக்கின்றனர். ஆனால், மொத்தமுள்ள 233 உறுப்பினர்களில் பெரும்பான்மைக்குத் தேவையான 117 உறுப்பினர்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமி அரசுக்கு இல்லை என்பதால், தங்களிடம் உள்ள உறுப்பினர்களையே பெரும்பான்மை பலமாக்கிக் கொள்ளும் முயற்சியில் ஆட்சியாளர்கள் துடித்தனர்.

அதற்காக உரிமைப் பிரச்சினையை எதிர்கொண்டு வரும் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 21 பேரை தகுதி நீக்கம் செய்து பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுங்கட்சி முடிவு செய்தது. ஆனால், அந்த முயற்சிக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்து விட்ட நிலையில், இப்போது அதிமுக அதிருப்தி உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்து தங்களின் பெரும்பான்மையை நிரூபித்துக் கொள்ள ஆளுங்கட்சி துடிக்கிறது. தங்களின் பிழைப்புக்காக அரசியலமைப்புச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், இந்திய ஜனநாயகம் உள்ளிட்ட அனைத்தையும் முதலமைச்சர் படுகொலை செய்ய பேரவைத்தலைவர் துணை போயிருக்கிறார்.

தமிழகத்தில் இத்தகைய ஜனநாயகப் படுகொலை நடத்தப்பட்டிருப்பதில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. கடந்த மாதம் 22-ம் தேதி எடப்பாடி பழனிசாமிக்கு அளிக்கப்பட்டு வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக 19 உறுப்பினர்களும் கடிதம் கொடுத்த போதே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்கும்படி முதலமைச்சருக்கு ஆளுநர் ஆணையிட்டிருக்க வேண்டும்.

ஆனால், அதை செய்யாத ஆளுநர், குதிரைபேரம் மூலம் உறுப்பினர்களை வளைப்பதற்கு வசதியாக இந்த விஷயத்தில் காலதாமதம் செய்து வந்தார். அதன்படி நடத்தப்பட்ட குதிரைபேரம் வெற்றி பெறாத நிலையில் இப்போது சம்பந்தப்பட்ட 18 உறுப்பினர்களும் சட்டவிரோதமாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆளுநர் மட்டும் மிகவும் நேர்மையாக செயல்பட்டிருந்தால் இந்த ஜனநாயகப் படுகொலை நடத்திருக்காது.

கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜகவைச் சேர்ந்த 11 பேர் உட்பட 16 உறுப்பினர்கள் கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ம் தேதி அம்மாநில ஆளுநர் பரத்வாஜிடம் கடிதம் கொடுத்தனர். அதையேற்ற ஆளுநர் பரத்வாஜ் அக்டோபர் 11-ம் தேதிக்குள் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு ஆணையிட்டார்.

அதைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில் 16 பேரவை உறுப்பினர்களையும் பதவி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் போப்பையா ஆணையிட்டார். ஆனால், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கர்நாடக பேரவைத் தலைவருக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அவரது நடவடிக்கை செல்லாது என்று கூறி, 16 பேரவை உறுப்பினர்களின் பதவியையும் மீண்டும் வழங்கி தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை மதிக்காமல் பேரவைத் தலைவர் மேற்கொண்டுள்ள இந்நடவடிக்கை சட்டத்தின் முன் செல்லுபடியாகாது.

பதவியில் தொடர்வதற்காக எந்த பாதகத்தையும் செய்யத் துணிந்து விட்ட எடப்பாடி பழனிசாமி அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். ஆளுநரும், பேரவைத் தலைவரும் முட்டுக்கொடுத்தாலும் கூட சட்டத்தின் உதவியுடன் இந்த ஆட்சி அகற்றப்படுவது உறுதி.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Even the speaker joins with cm edappadi palanisamy the governemnt will be removed by people ramadoss

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X