நடிகர் விஜயின் சுறா திரைப்படத்தை கேலி செய்ததாக, செய்தி இணையத்தளம் ஒன்றின் ஆசிரியரை அவரது ரசிகர்கள் ட்விட்டரில், தரக்குறைவாக விமர்சித்த நிலையில், “யாருடைய திரைப்படத்தையும், யாரும் விமர்சிப்பதற்கு கருத்து சுதந்திரம் உண்டு”, என நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டார்.
‘தி நியூஸ் மினிட்’ செய்தி இணையத்தளத்தின் ஆசிரியர் தன்யா ராஜேந்திரன். இவர் கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில், “நடிகர் விஜய் நடித்த சுறா திரைப்படத்தை நான் இடைவேளை வரை பார்த்தேன். ஆனால், சாருக்கான் நடித்த ’ஜப் ஹாரி மெட் சஜல்’ திரைப்படம் அந்த சாதனையை முறியடித்துவிட்டது. இடைவேளை வரை கூட அந்தப் படத்தை பார்க்க முடியவில்லை”, என குறிப்பிட்டிருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2017/08/Capture-1-300x151.png)
இதையடுத்து, நடிகர் விஜயின் ரசிகர்கள் என்ற பெயரில் பலர் தன்யா ராஜேந்திரனை ட்விட்டரில் தரக்குறைவாக பாலியல் ரீதியாக விமர்சித்து பதிவுகளிட்டனர். ‘பப்ளிசிட்டி பீப் தன்யா’ என்ற ஹேஷ் டேக்-ஐ உருவாக்கி பலர் அவருக்கு எதிராக பதிவுகளை இட்டனர்.
இதையடுத்து, இந்த பதிவுகளுக்குக் காரணமான குறிப்பிட்ட 5 பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு 2 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டன.
இதனிடையே, நடிகர் விஜயின் ரசிகர்கள் ட்விட்டரில் தரக்குறைவாக பதிவிட்டதாக குற்றம்சாட்டப்படும் நிலையில், அவர் இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்காமல் இருந்தார். இந்நிலையில், புதன் கிழமை ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், “சமுதாயத்தில் பெண்களை அதிகம் மதிப்பவன் நான். யாருடைய திரைப்படத்தையும், யாரும் விமர்சிப்பதற்கு கருத்து சுதந்திரம் உண்டு. எக்காரணம் கொண்டும், எந்த நேரத்திலும், பெண்களை இழிவாகவோ, தரக்குறைவாகவோ, விமர்சிக்கக் கூடாது என்பது எனது கருத்தாகும்...அனைவரும் பெண்மையை போற்ற வேண்டும்.. யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் சமூக இணையத்தளங்களில் பெண்கள் மீது தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.”, என குறிப்பிட்டிருந்தார்.
இந்த அறிக்கை அவரது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்படவில்லை என்பதும், அவரது கையெழுத்து அந்த அறிக்கையில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், அறிக்கையில் தனது ரசிகர்களைக் குறிப்பிடாமல், யாருடைய படத்தையோ பத்திரிக்கையாளர் விமர்சித்ததுபோல் குறிப்பிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.