Advertisment

காவிரியில் பச்சைத் துரோகம் : எடப்பாடி பதவி விலக வற்புறுத்தி ஆக 21-ல் வைகோ அறப்போர்

காவிரி பிரச்சினையில் துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி பதவி விலகக் கோரி ஆகஸ்ட் 21-ம் தேதி சென்னையில் அறப்போர் நடத்தவிருப்பதாக வைகோ கூறியிருக்கிறார்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
Geneva, Vaiko, Srilanka, MDMK, UNHRC meet,

காவிரி பிரச்சினையில் துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி பதவி விலகக் கோரி ஆகஸ்ட் 21-ம் தேதி சென்னையில் அறப்போர் நடத்தவிருப்பதாக வைகோ கூறியிருக்கிறார்.

Advertisment

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று (17ஆம் தேதி) உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்வராய், ஏ.எம்.கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது கர்நாடகா மாநிலத்தின் சார்பில், “காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டினால்தான் தண்ணீரைச் சேமித்துத் தமிழகத்திற்குத் திறந்துவிட முடியும். எனவே புதிய அணைகள் கட்ட அனுமதி அளிக்க வேண்டும்” என்று வஞ்சகமான கருத்து முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொள்ளும் வகையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், தமிழகத்திற்கு நீர் திறப்பதற்கு கர்நாடகம் ஏன் புதிய அணை கட்டக் கூடாது? மழையின்போது கிடைக்கும் நீரை சேமித்து வைத்து தமிழகத்திற்குத் தேவைப்படும்போது கொடுப்பதற்கு புதிய அணை வழிவகுக்குமே? என தெரிவித்துள்ளனர்.

கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்பட்ட யோசனையை உச்சநீதிமன்றம் அப்படியே ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. இது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் சேகர் நாப்தே, தமிழகத்திற்குத் தண்ணீர் கிடைக்கும் வகையில் கர்நாடகம் புதிய அணை கட்டும் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தலாம். ஆனால் புதிய அணையை சிறப்பு ஆணையம் அமைத்து அதன் கட்டுப்பாட்டில் விடவேண்டும் என்று கூறியுள்ளார். இது காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில், இதுவரையில் தமிழகம் மேற்கொண்ட நிலைப்பாட்டுக்கு எதிரானது ஆகும்.

கர்நாடகம் வஞ்சகம் நிறைந்த கருத்தை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தபோது, உச்சநீதிமன்றமும் அதற்கு இசைவான ஒப்புதலை வழங்கும் வகையில் நீதிபதிகள் புதிய அணைகள் கட்டினால் என்ன? என்று வினவும்போது, தமிழகத்தின் தரப்பில் உறுதியான எதிர்ப்பை பதிவு செய்திருக்க வேண்டும். அதைவிடுத்து தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்குமானால், கர்நாடகம் புதிய அணை கட்டிக்கொள்ளலாம் என்கிற தொனியில் கூறி இருப்பது தமிழகத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும் செயலாகும்.

1924 ஆம் ஆண்டு போடப்பட்ட காவிரி ஒப்பந்தத்தை மீறி காவிரியின் குறுக்கே 1959 இல் கபினி அணையைக் கட்டியது கர்நாடகம். அதனைத் தொடர்ந்து 1965 இல் சுர்ணவதி நீர்த்தேக்கம், 1968 இல் ஹேமாவதி நீர்த்தேக்கம், 1979 இல் கிருஷ்ணராஜசாகர் வருணாக் கால்வாய் மற்றும் புதிய பாசன விரிவாக்கம், 1983 யகாச்சி நீர்த்தேக்கம் ஆகியவற்றை கட்டி, காவிரி நீரைச் சேமித்துப் பாசனப் பரப்பை அதிகரித்துக்கொண்டது கர்நாடகம்.

காவிரி நடுவர் மன்றம் 1991 இல் அளித்த இடைக்காலத் தீர்ப்பில், 11.20 இலட்சம் ஏக்கருக்கு மேல் பாசனப் பரப்பை கர்நாடகம் அதிகரிக்கக்கூடாது என்று கூறியது. ஆனால் பாசனப் பரப்பை விரிவுபடுத்திக்கொண்டே போனது கர்நாடகம். நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பில் கர்நாடகத்தின் பாசனப் பரப்பை 18.85 இலட்சம் ஏக்கர் என்று வரையரை செய்தது. ஆனால் கர்நாடக மாநிலம் 21 இலட்சம் ஏக்கராக உயர்த்தியது மட்டுமின்றி, அடுத்து ஐந்தாண்டுகளில் 30 இலட்சம் ஏக்கராக அதிகரிப்பதற்கும் இலக்கு நிர்ணயித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 3,000 புதிய ஏரிகளை உருவாக்கி, பாசனப் பரப்பை பன்மடங்கு உயர்த்தி இருக்கிறது. கர்நாடகம் விரிவாக்கம் செய்து வரும் பாசனப் பரப்புக்கு நீராதாரம் தேவைப்படுவதால், மேகதாட்டு, ராசிமணலில் புதிய அணைகள் கட்ட வேண்டும் என்று தீவிரமாக செயலில் இறங்கி உள்ளது. இந்நிலையில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க புதிய அணைகள் கட்டப்போகிறோம் என்று கர்நாடகம் உச்சநீதிமன்றத்தில் மோசடியான கருத்தைத் தெரிவித்துள்ளது. இதனைத் தமிழகம் ஏற்றுக்கொண்டால் சொட்டு நீர்கூட இனி தமிழகத்திற்குக் கிடைப்பது முயற்கொம்புதான்.

புதிய அணைகளை மேற்பார்வையிட அணைகள் ஆணையம் அமைக்க உத்தரவிடுவோம் என்று உச்சநீதிமன்றம் கூறி இருக்கிறது. காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படியும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் படியும் அமைக்கப்பட்டது. இதன் இறுதித் தீர்ப்பில் கூறியவாறு, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு போன்ற அமைப்புகளை உருவாக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும்கூட மத்திய அரசு ஏற்றுக்கொள்ளாதது மட்டுமின்றி, உச்சநீதின்றத்திற்கு இதுபோன்று உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் இல்லை என்று மனுதாக்கல் செய்தது.

முன்னாள் முதலமைச்சர் மறைந்த சகோதரி ஜெயலலிதா ஆட்சியின்போது தமிழக நதிநீர் உரிமைகளை மத்திய அரசிடமோ, உச்சநீதிமன்றத்திலோ இம்மி அளவும் விட்டுக்கொடுக்காமல் தமிழகத்தைப் பாதுகாக்க தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டார். உச்சநீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு பிரச்சினையிலும், காவிரி பிரச்சினையிலும் தமிழ்நாடு சார்பாக வாதாடிய வழக்கறிஞர்களை கலந்து ஆலோசித்து சட்டப்பூர்வமான வாதங்களை முன் வைப்பதற்கு ஆலோசனைகள் வழங்கி, தமிழக உரிமைகளைக் காக்க உறுதியுடன் போராடினார்.

ஆனால் தற்போது ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை ஏற்றுள்ள அரசு, தமிழ்நாட்டின் பாசன உரிமைகளை காவு கொடுத்து மேகதாட்டுவில் அணை கட்டிக்கொள்ளலாம் என்று தமிழ்நாட்டின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் சேகர் நாப்தே கூறியதற்கு பின்னணி என்ன? இதைவிட தமிழ்நாட்டுக்கு மன்னிக்க முடியாத பச்சை துரோகத்தை எவரும் செய்தது இல்லை. எனவே எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பில் நீடிக்கும் தார்மீக தகுதியையும், உரிமையையும் இழந்துவிட்டார்.

எனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது பதவியை உடனே ராஜினா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆகஸ்டு 21 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் தலைநகர் சென்னையில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாக்க நடைபெறும் இந்த அறப்போரில் கழகக் கண்மணிகளும், தமிழ் உணர்வாளர்களும், விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன்.

இவ்வாறு வைகோ கூறியிருக்கிறார்.

Supreme Court Vaiko Mdmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment