ப.சிதம்பரம் வீட்டில் நடந்த சிபிஐ சோதனைக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அரசியலில் எதிரும் புதிருமாக இருக்கும் இளங்கோவன், சிதம்பரத்துக்கு ஆதரவு தெரிவித்து இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில் இன்று சிபிஐ அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தினார்கள். சிதம்பரத்தின் மகன் கார்த்தியைக் குறிவைத்து இந்த ரெய்டு நடத்தப்பட்டது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு:
‘முன்னாள் மத்திய அமைச்சர் மரியாதைக்குரிய ப.சிதம்பரத்தை குறிவைத்து மத்தியில் ஆளும் பிஜேபி அரசு அம்லாக்கத்துறை சோதனை, அதனைத் தொடர்ந்து சிபிஐ சோதனை என தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அரசியலில் தனக்கு வேண்டாதவர்களை குறிவைத்து இது போன்ற மிரட்டல்களை பிஜேபி மேற்கொண்டு வருகிறது. இது கண்டனத்துக்குரியது.
மோடி அரசின் இந்த வெற்று மிரட்டல்களுக்கெல்லாம் எந்தக் காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் ஒரு போதும் அஞ்சமாட்டார்கள். வருங்காலங்களில் இதற்கு காரணமானவர்கள் வருத்தப்பட நேரும். இம்மாதிரியான மிரட்ட சோதனைகள் தொடருமானால், மக்கள் இந்த அராஜக பிஜேபி அரசை புறக்கணிப்பார்கள்.’ என்று அறிக்கையில் இளங்கோவன் சொல்லியுள்ளார்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ் தலைவராக இருந்த போது கார்த்தியும், அவரும் மோதிக் கொண்டனர். கார்த்தியை கட்சியில் இருந்து நீக்க நோட்டீஸ் கொடுத்தார், இளங்கோவன். இந்நிலையில் இளங்கோவன் அறிக்கையை அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.