புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தன் மகள் குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருந்தும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பரிந்துரையின் பேரிலேயே அவருக்கு மருத்துவ படிப்புக்கு சீட் கிடைத்ததாக, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி தன் முகநூல் பக்கத்தில் குற்றம்சாட்டிய நிலையில், அவர் யாரென்றே தனக்கு தெரியாது என கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி இதுதொடர்பாக தன் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டதாவது, “2015-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் அமைச்சர் ஒருவர், போதிய மதிப்பெண்கள் இல்லாதபோதும் முதலமைச்சரின் பரிந்துரையில் தங்கள் மகள் மருத்துவ படிப்பில் சேர்ந்ததை மறந்துவிட்டீர்களா என கிருஷ்ணசாமியை பார்த்து கேள்வி எழுப்பியதாக குறிப்பிட்டார். அப்போது, தான் அதனை மறக்கவில்லை என்பதுபோல் முதலமைச்சருக்கு வணக்கம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
/tamil-ie/media/media_files/uploads/2017/09/21317423_1185913971554964_4758942955279282516_n-268x300.jpg)
இவ்வாறு முதலமைச்சரின் உதவியுடன் தன் மகளுக்கு மருத்துவ சீட் பெற்றுக்கொண்டு, அனிதாவை விமரிசிக்கலாமா என பாலபாரதி குற்றம்சாட்டினார்.
முன்னதாக, நீட் தேர்வை எதிர்த்து போராடிய அனிதா தற்கொலை செய்துகொண்டதையடுத்து, அவர் தற்கொலை செய்துகொண்டதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கலாம் எனவும், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு மற்றும் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் தூண்டுதலின் பேரில் அனிதா தற்கொலை செய்திருக்கலாம் எனவும் கிருஷ்ணசாமி பேசி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பாலபாரதி குற்றச்சாட்டு குறித்து பேசிய கிருஷ்ணசாமி அவர் யாரென தனக்கு தெரியாது என மறுத்தார். மேலும், பாலபாரதியை தரக்குறைவாகவும் பேசினார்.
இதுகுறித்து, தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்ட மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, பாலபாரதி கூறுவது முற்றிலும் உண்மை எனவும், சட்டப்பேரவையில் அச்சபவம் நிகழ்ந்தபோது கிருஷ்ணசாமி அருகில் அமர்ந்திருந்த தான் சாட்சி எனவும் பதிவிட்டார்.
தன்னை யாரென தெரியாது என கிருஷ்ணசாமி கூறியது குறித்து பேசிய பாலபாரதி, “பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவாக பேசும் கிருஷ்ணசாமி ஒரு மருத்துவர் அல்ல. அவருக்கு மதநோய் பிடித்திருக்கிறது”, என கூறினார். தன்னை தரக்குறைவாக பேசிய கிருஷ்ணசாமிக்கு மற்றுமொரு பதிவையும் முகநூலில் பதிவிட்டார்.