தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் நேசமணிமாறன் முத்துவின் ரூ. 293.91 கோடி சொத்தை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர். அவர் மீது ஃபெமா (FEMA) எனப்படும் வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை மேலாண்மைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
சிங்கப்பூர் டாலர் 2 கோடியே 29 லட்சத்து 86 ஆயிரத்து 250 அந்நிய முதலீட்டு சொத்துக்களை, இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.293.91 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் நேசமணிமாறன் முத்துவுக்கு எதிராக ‘ஃபெமா’ சட்டத்தின் கிழ் நடத்திய விசாரணையில் அவருடைய ரூ.293.91 கோடி மதிப்புள்ள பங்குகளை பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்கத்துறை இயக்குனரகம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 28) தெரிவித்தது.
கைப்பற்றப்பட்ட சொத்துக்கள் சதர்ன் அக்ரிஃபுரேன் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட், ஆனந்த் டிரான்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட், எம்ஜிஎம் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் எம்ஜிஎம் டைமண்ட் பீச் ரிசார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நான்கு இந்திய நிறுவனங்களில் முத்து என்கிற எம்.ஜி.எம் மாறனின் பங்குகள் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ முத்து 2005-06 மற்றும் 2006-07 நிதியாண்டுகளில் சிங்கப்பூரில் இரண்டு நிறுவனங்களைச் சேர்த்து, 5 கோடியே 29 லட்சத்து 86 ஆயிரத்டு 250 சிங்கப்பூர் டாலர் பணம் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.293.91 கோடி) முதலீடு செய்துள்ளார். “இந்த முதலீடு ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் செய்யப்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டில் இவ்வளவு பெரிய முதலீட்டின் ஆதாரம் இந்திய கட்டுப்பாட்டாளர்களுக்கு வெளியிடப்படவில்லை” என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (ஃபெமா) 37A(1) பிரிவு, இந்தியக் குடியுரிமை பெற்றவராக இருந்தபோதிலும், ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி, வெளிநாட்டில் சொத்துக்கள் வாங்கியது அல்லது இந்தியாவுக்கு வெளியே முதலீடு செய்தவரின் உள்நாட்டுச் சொத்துகளைக் கைப்பற்ற அமலாக்கத்துறை இயக்குனரகத்துக்கு அதிகாரம் அளிக்கிறது.
“5கோடியே 29 லட்சத்து 86 ஆயிரத்து 250 சிங்கப்பூர் டாலர் பணம் அந்நிய முதலீடு செய்யப்பட்டிருந்ததால், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.293.91 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”