Advertisment

சிறையில் சசிகலாவிற்கு சிறப்பு வசதிகள் கொடுத்தது உண்மையே: சிறை அதிகாரிகள் ஒப்புதல்!

கணக்கு தணிக்கை குழுவின் அறிக்கையும், டி.ஐ.ஜி. ரூபா வழங்கிய அறிக்கையில் கூறப்பட்டு இருக்கும் குற்றச்சாட்டுகளும் ஒரே மாதிரியாக இருக்கின்றன.

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
சிறையில் சசிகலாவிற்கு சிறப்பு வசதிகள் கொடுத்தது உண்மையே: சிறை அதிகாரிகள் ஒப்புதல்!

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

இந்த சிறையில், சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை டிஐஜி-யாக இருந்த ரூபா குற்றம் சாட்டினார். இதற்காக சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். கர்நாடக உள்துறை செயலர், ஊழல் தடுப்புத்துறை இயக்குநர், காவல் துறை இயக்குநர் உள்ளிட்டோருக்கு புகார் கடிதம் அனுப்பிய ரூபா, ஊடகங்களிலும் இது குறித்து பேசினார். இதனால், இவ்விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், தன் மீதான இந்த புகாரை டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் மறுத்தார்.

இதுகுறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்ட குழு விசாரணை நடத்த கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டார். மேலும் சத்தியநாராயணராவ், ரூபா ஆகிய 2 பேரும் உடனடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு ஐந்து அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் பிரபல தனியார் ஆங்கில தொலைக்காட்சி மற்றும் சில கன்னட தொலைக்காட்சிகளில் வெளியானது.

அந்த காட்சிகளில், சசிகலா தூங்குவதற்கு வசதியாக ஒரு அறையும், தனி சமையல் அறையும், அவர் பயன்படுத்தும் பொருட்கள் வைக்க ஒரு அறையும், அவரை சந்திக்க சிறைக்கு வருபவர்களுடன் அவர் பேசுவதற்காக பார்வையாளர் அறையும் மற்றும் உடற்பயிற்சி செய்ய மற்றொரு அறையும் என மொத்தம் 5 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மேலும், அந்த அறைகள் வெளியே தெரியாதபடி முன்பக்க கதவுகளில் துணி போட்டு மூடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபையின் பொதுக் கணக்கு குழு கூட்டம் அதன் தலைவர் ஆர்.அசோக் தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. பொதுக்கணக்கு குழு கூட்டத்தில் உறுப்பினர்கள், மற்றும் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. மேகரிக், டி.ஐ.ஜி. ரேவண்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டம் முடிந்த பிறகு பொதுக்கணக்கு குழு தலைவர் ஆர்.அசோக் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில், "“பெங்களூரு சிறையில் நிலவும் குறைபாடுகளை சரிசெய்வது தொடர்பாக 2004-ஆம் ஆண்டு மற்றும் 2015-ஆம் ஆண்டு கணக்கு தணிக்கை குழு(சி.ஏ.ஜி.) வழங்கிய அறிக்கையை ஏன் அமல்படுத்தவில்லை என்று சிறைத்துறை அதிகாரிகளை வரவழைத்து விவரங்களை கேட்டோம். கணக்கு தணிக்கை குழுவின் அறிக்கையில் இடம் பெற்று இருந்த தகவல்களும், டி.ஐ.ஜி. ரூபா வழங்கிய அறிக்கையில் கூறப்பட்டு இருக்கும் குற்றச்சாட்டுகளும் ஒரே மாதிரியாக இருக்கின்றன.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்படும் தகவல்கள் உண்மையானதுதான் என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறினர். இது தொடர்பான முழு விவரங்களையும் என்னால் சொல்ல முடியாது. இந்த முறைகேடுகள் குறித்து முழுமையாக விவாதித்தோம். பொதுக்கணக்கு குழுவுக்கு உள்ள அதிகாரத்துக்கு உட்பட்டு சிறைத்துறை அதிகாரிகளுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறேன்.

மேலும், பெங்களூரு சிறையில் செல்போன் பயன்பாட்டை தடுக்க ஜாமர் கருவியை வைக்க வேண்டும், கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும், கஞ்சா வினியோகம் செய்வதை தடுக்க வேண்டும் என்று சிறைத்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அந்த பரிந்துரைகளை ஏன் அமல்படுத்தவில்லை என்பது பற்றி சிறைத்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டோம்.

அந்த பரிந்துரைகளை அமல்படுத்தி இருந்தால் இந்த முறைகேடுகள் நடைபெற்று இருக்காது. இதில் சிறைத்துறை அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டு உள்ளனர். பரிந்துரைகளை அமல்படுத்தாதது ஏன்? என்பது குறித்து 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளோம். மேலும் சிறையில் நிலவும் குறைகளை சரிசெய்யும்படியும் உத்தரவிட்டு இருக்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment