Advertisment

தமிழ்நாட்டில் கந்துவட்டிக் கொடுமையால் மட்டும் கடந்த 7 ஆண்டுகளில் 823 பேர் தற்கொலை: அன்புமணி

தமிழ்நாட்டில் கந்துவட்டிக் கொடுமையால் மட்டும் கடந்த 7 ஆண்டுகளில் 823 பேர் தற்கொலை

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Anbumani Ramadoss, சென்னை உயர்நீதிமன்றம்

Anbumani Ramadoss, சென்னை உயர்நீதிமன்றம்

தமிழ்நாட்டில் கந்துவட்டிக் கொடுமையால் மட்டும் கடந்த 7 ஆண்டுகளில் 823 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொள்ள முயன்றது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் பாளையங்கோட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

Advertisment

நெல்லை மாவட்டம் கடையநல்லூரை அடுத்த காசி தர்மம் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து மற்றும் அவரது குடும்பத்தினர் தற்கொலை செய்துகொள்ள கந்து வட்டிக் கொடுமைதான் காரணம் என்று கூறப்படுகிறது. கந்துவட்டிக்காரர் ஒருவரிடம் இசக்கிமுத்து ரூ.1.30 லட்சம் கடன் வாங்கியதாகவும், அதற்கு வட்டியுடன் சேர்த்து ரூ.2.30 லட்சம் செலுத்திய பிறகும் அவரிடம் கூடுதல் வட்டி கேட்டு கந்துவட்டிக்காரர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. காவல்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் தான் இசக்கிமுத்துவும் அவரது குடும்பத்தினரும் உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளனர்.

கந்துவட்டியால் அப்பாவி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் பலர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்பதால்தான் 14.11.2003 அன்று தமிழகத்தில் கந்துவட்டித் தடை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், இச்சட்டம் பயன்படுத்தப்படுவதே இல்லை. கந்துவட்டிகேட்டு கொடுமைப்படுத்துவதாக காவல்துறையிடம் இசக்கிமுத்து புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் கந்துவட்டிக்காரர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அவரையே காவல்துறை மிரட்டியுள்ளது. அதன்பிறகும் தம்மைக் காப்பாற்றும்படி மாவட்ட ஆட்சியரிடம் இசக்கிமுத்து 6 முறை புகார் அளித்துள்ளார். ஆனால், பல மாதங்களாகியும் அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழக அரசால் இயற்றப்பட்ட கந்துவட்டிச் சட்டத்திற்கு காவல்துறையினரும் மாவட்ட ஆட்சியரும் எந்த அளவுக்கு மரியாதைக் கொடுக்கின்றனர் என்பதற்கு இதுதான் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

குடிமக்களுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், உடுக்கை இழந்தவன் கைபோல அவர்களின் இடுக்கண் களைவது தான் ஆட்சியாளர்களின் பணியாகும். ஆனால், 6 முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத ஆட்சியர் அந்தப் பணிக்கே தகுதியற்றவர் ஆவார். அதேபோல், கந்துவட்டிக்காரருக்கு ஆதரவாக செயல்பட்டு இசக்கிமுத்துவை மிரட்டிய காவல்துறையினர் கந்துவட்டிச் சட்டத்தின்படி தண்டிக்கப்பட வேண்டியவர்கள் ஆவர். இத்தகையக் கொடுமைகளை கண்டும் காணாமல் ஊழல் மூலம் தமிழகத்தைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் இதற்காக வெட்கித் தலைகுனிய வேண்டும்.

கந்துவட்டி மிகவும் கொடுமையானது. தின வட்டி, மணி வட்டி, மீட்டர் வட்டி, ரன் வட்டி எனப் புதுப்புது பெயர்களில் வட்டிக்கு பணம் கொடுக்கும் கந்துவட்டிக்காரர்கள், கொடுத்த கடனை திரும்ப வசூலிப்பதற்காக அனைத்து வகையான சட்டவிரோதச் செயல்களையும் கையாளுகின்றனர். பிழைப்புக்காக வியாபாரம் செய்யும் ஏழை மக்கள், அதற்கான முதலீடு இல்லாததால் கந்துவட்டிக்காரர்களிடம் பணம் வாங்குவதும், தாங்கள் ஈட்டிய வருமானம் முழுவதையும் அதற்கான வட்டியாகக் கொடுத்துவிட்டு, அதற்கு மேலும் தருவதற்கு எதுவும் இல்லாததால் கந்துவட்டிக்காரர்களிடம் கொத்தடிமையாக வேலை செய்வதும் வாடிக்கையாகி விட்டது.

பல தருணங்களில் கொடுத்த கடனைத் திரும்பச் செலுத்த முடியாதவர்களின் வீடு, நிலம் போன்றவை பறிக்கப்படுகின்றன. சில நேரங்களில் சிறுநீரகத்தை கட்டாயப்படுத்தி அகற்றி விற்று பணத்தை திருப்பி வசூலித்த கொடூரங்களும் நிகழ்ந்துள்ளன.

தமிழ்நாட்டில் கந்துவட்டிக் கொடுமையால் மட்டும் கடந்த 7 ஆண்டுகளில் 823 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கந்துவட்டிக் கொடுமை குறித்து தாமாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் சென்னை உயர் நீதிமன்றம், கந்து வட்டி வசூலிப்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. ஆனாலும் அதனால் எந்தப் பயனும் இல்லை. இதற்குக் காரணம் கந்துவட்டிக்காரர்களுக்கு ஆளுங்கட்சியினர் மற்றும் காவல்துறையினரின் ஆதரவு இருப்பது தான்.

ஏழை மற்றும் அப்பாவிகளின் குடும்பத்தை நாசமாக்கும் கந்துவட்டிக் கொடுமை தமிழ்நாட்டில் இனியும் நீடிக்கக் கூடாது. அதற்காக 2003-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கந்துவட்டி தடுப்புச் சட்டத்தை அரசு முழுமையாக செயல்படுத்த வேண்டும். இசக்கிமுத்து குடும்பத்தின் தீக்குளிப்புக்குக் காரணமாக கந்துவட்டிக்காரர், காவல்துறையினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Anbumani Ramadoss Tirunelveli Pmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment