இந்த கடைகளில் தக்காளி கிலோ ரூ.66 தான்!!

தக்காளி விலை எகிறிக் கொண்டு போகும் நிலையில், பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி கிலோ ரூ.66-க்கு விற்கப்படுகிறது.

தக்காளி விலை எகிறிக் கொண்டு போகும் நிலையில், பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி கிலோ ரூ.66-க்கு விற்கப்படுகிறது.

நம் ஊர் சமையலில் தக்காளி இன்றியமையாத ஒன்று. இல்லத்தரசிகளுக்கு தக்காளி இல்லையெனில் கையும் ஓடாது, காலும் ஓடாது. ஆனால், இன்றைக்கு இந்த தக்காளி எட்டாக்கனியாக மாறியுள்ளது. காரணம் விலை. விளைச்சல் மிகுதியாலும், விலை இல்லாததாலும் கடந்த ஆண்டு சாலையில் வீசப்பட்ட தக்காளியை, இன்றைக்கு எட்டிப் பார்த்து விட்டு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

உற்பத்தி குறைவால் தக்காளியின் வரத்தும் குறைந்துள்ளது. வழக்கமாக சென்னைக்கு வரும் தக்காளி லாரிகளின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது. தட்டுப்பாடு காரணமாக அதற்கு ஏற்றாற்போல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த மாதத்தில் ரூ.40-க்கு விற்கப்பட்ட தக்காளியின் விலை படிப்படியாக அதிகரித்து கிலோ ரூ.100-க்கு எகிறியுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசின் கூட்டுறவு துறை கீழ் இயங்கும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம், தக்காளி கிலோ ரூ.66-க்கு விற்கப்படுகிறது. அதேபோல், சின்ன வெங்காயத்தின் விலை ரூ.80-க்கு விற்கப்படுகிறது.

இதுகுறித்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமதேனு சூப்பர் மார்க்கட்டில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது: கிருஷ்ணகிரி மற்றும் திண்டுக்கல்லில் இருந்து தக்காளியும், மகாராஷ்டிராவில் இருந்து சின்ன வெங்காயமும் கொள்முதல் செய்யப்படுகிறது. சென்னையில் மட்டும் 34 கடைகள் மற்றும் இரண்டு நடமாடும் கடைகள் தவிர மாநகரில் உள்ள 110 நியாயமான விலை கடைகள் மூலமாகவும் விற்பனை நடைபெறுகிறது என்றார்.

மேலும், விற்பனைக்காக மூன்று டன் தக்காளி மற்றும் ஐந்து டன் சின்ன வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தேவைகளை பொறுத்து, மாநிலத்தின் பிற பகுதிகளிலும் கூடுதலாக பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் திறக்கப்படும். திருச்சியில் மட்டும் கூடுதலாக எட்டு கடைகள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரிசி, மஞ்சள், வெங்காயம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் இக்கடைகள் மூலம் முன்னதாக விற்கப்பட்டு வந்தன. அத்தியாவசிய பொருட்களை கொள்முதல் செய்து இந்த கடைகள் மூலம் விற்கும் பொருட்டு, ரூ.100 கோடியை மாநில அரசு ஒதுக்குகிறது. இந்த பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் சுமார் 25,922 டன் காய்கறிகள் இதுவரை விற்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close