தமிழக விவசாயிகள் போராட்டம்... பயன்களும் கடக்க வேண்டிய தூரமும்

புது தில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 40 நாட்களாக நடந்துவந்த தமிழக விவசாயிகளின் போராட்டம் ஒரு வழியாகத் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டெல்லி: தமிழக மக்களின் அற உணர்வையும் ஒட்டுமொத்த இந்திய மக்களின் மனசாட்சியையும் உலுக்கும் விதத்தில் இந்தியத் தலைநகர் புது தில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 40 நாட்களாக நடந்துவந்த தமிழக விவசாயிகளின் போராட்டம் ஒரு வழியாகத் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தில்லியில் போராடும் விவசாயிகளை நேரில் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்துவதாகக் கூறியதையும், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு..ஸ்டாலினின் கோரிக்கையையும் ஏற்று, மே25 வரை தங்களது போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர் விவசாயிகள்.

போராட்டத்தின் பின்னணி

தமிழகத்தைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தில்லியில், கடந்த மார்ச் 14ஆம் தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்தல், தமிழகத்துக்கான வறட்சி நிவாரண நிதியை ரூ.40,000 கோடியாக உயர்த்துதல், அனைத்து வங்கிகளிலும் பெறப்பட்ட விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தல். காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைத்தல், தேசிய நதிகளை இணைத்தல் ஆகியவை அவர்கள் கோரிக்கைகளில் முக்கியமானவை.

விவசாயம் பொய்த்ததால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் மண்டை ஒடுகளை மாலையாக அணிந்துகொள்வது, எலிகளை வாயில் கவ்விக்கொண்டு போராட்டக் களத்தில் அமர்ந்திருப்பது. அரை நிர்வாணப் போராட்டம். தலையை மொட்டை அடித்துக்கொள்ளும் போராட்டம் என்று பல்வேறு வகையான நூதனப் போராட்டங்கள் அரங்கேற்றப்பட்டுவிட்டன. ஏப்ரல்22 அன்று உச்சகட்டமாக விவசாயிகள் மனித சிறுநீர் குடிக்கும் போராட்டத்தை அரங்கேற்றத் தயாராக இருந்தனர். நல்ல வேளையாக அந்தப் போராட்டம் நிறுத்தப்பட்டது.

பிரதமரின் பாராமுகம்

இத்தனை நாட்களில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்களும் தமிழகத்தின் பல்வேறு தலைவர்களும் நேரில் சென்று போராட்டத்துக்கு ஆதரவளித்துவிட்டனர். ஆனால் போராட்டம் யாரை நோக்கி நடக்கிறதோ அவர்களிடமிருந்து சிறு சலனங்களைத் தவிர வேறொன்றும் இல்லை. பாஜகவின் பொன் ராதாகிருஷ்ணன், ராஜ்நாத் சிங் உள்ளிட்ட ஒரு சில மத்திய அமைச்சர்களைத் தவிர வேறு யாரும் விவசாயிகளை வந்து பார்க்கக்கூட இல்லை.

குறிப்பாக விவசாயிகளைப் பற்றிப் பேசும்போதெல்லாம் அவர்கள் மீதான மரியாதையும் அக்கறையும் ஒழுகப் பேசும் பிரதமர் நரேந்திர மோடி, இதுவரை இந்தப் போராட்டம் பற்றி எந்த வகையிலும் நேரடி எதிர்வினை ஆற்றவில்லை. சமூக வலைதளங்களில் திவிரமாக இயங்கும் அவர், 40 நாட்களில் இந்தப் போராட்டம் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. பிரதமரை சந்திக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. எதைச் செய்தாவது பிரதமரின் கவனத்தை ஈர்க்கும் மனநிலைக்குத் தள்ளப்பட்ட சில விவசாயிகள் அவரது அலுவலக வாயிலுக்கு முன்னால் முழு நிர்வாணப் போராட்டம் நடத்தினர். மனசாட்சி உள்ள ஒவ்வொருவரையும் உலுக்கியிருக்கக்கூடிய இந்தப் போராடத்துக்குப் பின்னும் பிரதமர் எந்த வகையிலும் எதிர்வினையாற்றவில்லை.

திசைதிருப்பும் அவதூறு பிரச்சாரம்

பிரதமரின் இந்தப் பாராமுகத்தை, எதிர்கட்சிகள், சமூக இயக்கங்கள் மட்டுமல்லாமல் பொது மக்களில் பெரும்பாலானோரும் விமர்சிக்கத் தொடங்கினர். இதை எதிர்கொள்ள தமிழக பாஜக தலைவர்களும் ஆதரவாளர்களும் போராட்டத்தையும் போராட்டத்துக்குத் தலைமை தாங்கும் அய்யாகண்ணுவையும் இழிவுபடுத்தத் தொடங்கினர்.

அய்யாகண்ணு வசதியானவர், விலையுயர்ந்த கார் வைத்திருக்கிறார் என்றெல்லாம் பாஜகவினர் அவதூறு பரப்புகின்றனர். ஒரு போராட்டத்தை திசைதிருப்ப அதை ஒருங்கிணைத்துத் தலைமை தாங்குபவரின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான அவதூறுகளைப் பரப்புவது அரசுகள் நெடுங்காலமாக பின்பற்றிவரும் உத்திதான்.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரன், அமெரிக்க அரசிடமிருந்து பணம் வாங்குகிறார் என்ற அவதூறை அன்றைய ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸும் எதிர்கட்சியாக இருந்த பாஜகவும் ஒரே குரலில் பரப்பின. ஆனால் இன்றுவரை உதயகுமாரன் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் வெளியானதில்லை. அதேபோல் அய்யாக்கண்ணு மீதான குற்றச்சாட்டுகளுக்கும் எந்த ஆதாரமும் வரப்போவதில்லை என்றே ஊகிக்க வேண்டியிருக்கிறது.

அப்படியே அய்யாக்கண்ணு வசதியானவர், அவர் போராடுவதற்கு வேறு உள்நோக்கங்கள் இருக்கின்றன என்பது உண்மைதான் என்று வைத்துக்கொண்டாலும். அதையும் போராட்டத்தையும் ஒன்றாகப் பார்க்கக் கூடாது. கடந்த சில ஆண்டுகளாகப் பருவ மழை பொய்த்ததால் தமிழக விவசாயிகள் மிக மோசமான நிலையில் இருக்கிறார்கள் என்பதும் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்துவருகிறது என்பதும் யாராலும் மறுக்க முடியாத உண்மை. குறிப்பாக கடந்த ஆண்டில் மழை அளவு சராசரியைவிட மிகக் குறைவாக இருந்ததால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டுவருகின்றனர்.

சாதாரண மக்களின் நிலை இதுவென்றால் மழைநீரை நம்பி வாழ்வை நடத்தும் விவசாயிகளின் நிலைபற்றிசொல்ல வேண்டியதில்லை. நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கையில் தமிழக ஆளும்கட்சியின் கவனம் மிகுதியும் உள்கட்சிப் புசல்களிலும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதிலும் செலுத்தப்படுகிறது. இந்தச் சமயத்தில் மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதும் மற்ற மாநில மக்களின் மனசாட்சியை உலுக்குவதும் இன்றியமையாதவை ஆகின்றன. அய்யாக்கண்ணுவால் ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டம் அதை ஓரளவுக்காவது சாதித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

மாநில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தேசிய ஊடகங்களிலும் கடந்த சில வாரங்களாக இந்தப் போராட்டத்தைப் பற்றிய செய்திகள் முதன்மை பெற்றன. சமூக வலைதளங்களிலும் இது முக்கியப் பேசுபொருளாக இருந்து வருகிறது. ஏப்ரல்25 அன்று விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான திமுக தமிழகம் முழுவதும் மாநிலம் தழுவிய கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய பிரதான கட்சிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

கோரிக்கைகளின் நிலை என்ன?

விவசாயிகளின் கோரிக்கைகள்அனைத்தையும் நிறைவேற்றுவது சாத்தியமற்றதாக இருக்கலாம்.கடன்களைத் தள்ளுபடி செய்வதை ரிசர்வ் வங்கி கடுமையாக எதிர்க்கிறது. அதே போல் ஒவ்வொரு கோரிக்கைக்கு ஒவ்வொரு தரப்பினருக்கு ஏற்கத்தகாததாக இருக்கலாம். ஆனால் விவசாயிகள் மிக மோசமான நிலைமையில் இருக்கின்றனர் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர். அந்த வகையில் இந்தப் போராட்டத்தின் மூலம் கவனம் கிடைத்திருக்கிறது. இனி காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படாத வரை போராட்டம் தொடரும் என்பதில் விவசாயிகள் திண்ணமாக இருக்கின்றனர்.

இங்கு நாம் இன்னொரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். விவசாயிகள் தங்கள் போராட்டத்தை நிரந்தரமாகக் கைவிடும் அளவுக்கு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுவிட்டாலும் அவை அனைத்தும் தற்காலிகத் தீர்வுகளாகவே இருக்கும். விவசாயம் தொடர்பான மத்திய மாநில அரசுகளின் கொள்கை மாற்றமும் அது சார்ந்த நடவடிக்கைகளும் மட்டுமே விவசாயிகள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கமுடியும். அது இப்போதைக்கு எட்டாக்கனிதான். ஆனால் எட்டவே முடியாத கனி அல்ல.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close