டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், நேற்றைய போராட்டத்தின் போது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றிக் கொண்டு தற்கொலை முயன்றதால் கைது செய்யப்பட்டனர்.
தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க நடவடிக்கை வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள், டெல்லியின் ஜந்தர் மந்தரில் தொடர் முதற்கட்ட போராட்டத்தில் சுமார் 41 நாட்கள் ஈடுபட்டனர்.
தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, தினம் தினம் வெவ்வேறு வடிவில் போராடி வந்த விவசாயிகள், முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கைகளை ஏற்று தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். எனினும், கோரிக்கைகள் நிறைவேறவில்லை எனில், மீண்டும் டெல்லியில் மீண்டும் போராட்டம் தொடரும் என போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அதன்படி, இரண்டாவது கட்டமாக டெல்லி ஜந்தர் மந்தரில், தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாள்தோறும் வித்தியாசமான போராட்டங்கள் மூலம் தங்களது எதிர்ப்பை காட்டி வரும் தமிழக விவசாயிகளின் இந்த போராட்டம் 76 நாட்களை தாண்டி இன்றும் தொடர்கிறது. இதனிடையே, 76-வது நாள் போராட்டமான நேற்று, உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தமிழக விவசாயிகள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தற்கொலைக்கு முயன்ற விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.
ஆனால், தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.