தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், ஃபெப்சி தொழிலாளர்கள் அமைப்புக்கும் (தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்) இடையே ஏற்பட்டு வந்த சம்பள பிரச்னை காரணமாக ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ஃபெப்சி அமைப்பு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது. இதனால், பல்வேறு படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. பல தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில், ரஜினிகாந்தை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்து ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி பேச்சுவார்த்தை நடத்தினார். ஃபெப்சி நிர்வாகிகளும் அப்போது உடன் இருந்தனர். இரு தரப்பிற்கும் இடையே நிகழும் பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என ரஜினியிடம் அவர் வேண்டுகோள் வைத்தார்.
இதைத் தொடர்ந்து நேற்று ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கையில், “எனக்கு பிடிக்காத சில வார்த்தைகளில் ‘வேலைநிறுத்தம்’ என்ற வார்த்தையும் ஒன்று. எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் சுயகவுரவம் பார்க்காமல், பொதுநலத்தை மட்டும் கருதி அன்பான வார்த்தைகளிலே பேசி தீர்வு காணலாம். தயாரிப்பாளர் சங்கமும், ஃபெப்சி சம்மேளனமும் கலந்து பேசி கூடிய சீக்கிரம் சுமூகமான தீர்வு காண வேண்டும் என்று மூத்த கலைஞன் என்கிற முறையில் எனது அன்பான வேண்டுகோள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, தயாரிப்பாளர் சங்கத்தையும், ஃபெப்சி அமைப்பையும் தொழிலாளர் நலத்துறை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. இந்த நிலையில், இன்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, மூன்று நாட்களாக நடைபெற்றுவரும் ஃபெப்சி ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுகிறது என்றும், நாளை முதல் (வெள்ளி) ஃபெப்சி ஊழியர்கள் பணிக்குத் திரும்புவார்கள் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய செல்வமணி, “தயாரிப்பாளர் சங்கம், தொழிலாளர் நலத்துறை, ஃபெப்சி சார்பில் நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. எந்தவித நிபந்தனையும் இன்றி, தயாரிப்பாளர் சங்கம் இந்த பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டதன் நம்பிக்கையின் அடிப்படையில், இன்றே எங்களது ஸ்டிரைக்கை வாபஸ் பெறுகிறோம். அவர்கள் நிச்சயம் எங்களது கோரிக்கைக்கு உடன்படுவார்கள் என நம்புகிறோம்.
நேற்று ரஜினி தனது அறிக்கையில் ‘சுயகவுரம் பார்க்காமல் பேச்சுவார்த்தை நடத்துங்கள்’ என கூறியிருந்தார். நாங்கள் சுயகவுரவம் எல்லாம் பார்க்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.