தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்காவிட்டால் திமுக சார்பில் வழக்கு தொடரப்படும் என அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: டெண்டர் கொடுப்பதற்கு தன்னிடம் 13 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டார் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்”, என்று கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கான்டிராக்டர் வெங்கல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது, ‘குதிரை பேர’ அதிமுக அரசின் ஊழல் முகத்தை தோலுரித்துக் காட்டியிருக்கிறது. எட்டு மாவட்டங்களில் பாலிடெக்னிக்குகள் கட்டும் திட்டத்தில், 79 கோடி ரூபாய் டெண்டருக்கு 13 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டார் அமைச்சர் என்று தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கு பற்றி இதுவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாய் திறக்கவில்லை.
மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் கல்வி நிலையங்களை கட்டுவதற்கு, 20 சதவீதத்திற்கும் மேல் கமிஷன் வாங்கும் அதிமுக ஆட்சியில் இது முதல் ஊழல் புகார் அல்ல! சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் விஜயபாஸ்கர் ஒரே மாதத்தில் 5.16 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற பட்டியல் வருமான வரித்துறை ரெய்டில் சிக்கியது. எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் நியமிக்கவே 32 லட்சம் லஞ்சம் வசூல் செய்ததும் வெளிச்சத்திற்கு வந்தது. இப்போது தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையில் பெற்ற ரூபாய் 40 கோடி லஞ்சம் பற்றிய “டைரி” வெளிவந்திருக்கிறது.
அதேபோல, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் லஞ்ச பணத்தை வாக்காளர்களுக்கு கொடுத்த ஆதாரங்கள் வருமான வரித்துறையால் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் ஜெயகுமார், விஜயபாஸ்கர், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி என்று நீண்டதொரு பட்டியலே வெளிவந்தது. அமைச்சர் காமராஜ் மீது ரூபாய் 30 லட்சம் பண மோசடி புகார் கொடுக்கப்பட்டு, உச்சநீதிமன்றமே மோசடி வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. இவர் மீது ஏற்கனவே பருப்பு கொள்முதல் டெண்டரில் ஊழல் புகார் கூறப்பட்டது. குழந்தைகள் நல அதிகாரியின் பணியை நிரந்தரம் செய்வதற்கு சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ரூபாய் 30 லட்சம் லஞ்சம் கேட்ட புகார் சந்தி சிரித்தது. சாலை போட்டதில் ஊழல் செய்திருக்கிறார் என்று கடலூர் மாவட்ட நீதிபதிகள் முன்பே தொழில்துறை சமீபத்தில் அமைச்சர் சம்பத் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
“தொழிற்சாலைக்கு வழங்க வேண்டிய நிலத்தின் விலையை விட 50 சதவீதத்திற்கும் மேல் லஞ்சம் கேட்கிறார்கள்”, என்று குற்றம்சாட்டி ‘கியா மோட்டார்ஸ்’ நிறுவனம் ஆந்திர மாநிலத்திற்கு சென்றுவிட்டது. பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்திலேயே, “கான்டிராக்டுகளுக்கு எத்தனை சதவீதம் கமிஷன்”, என்று விளம்பரப்பலகை வைத்த கேடுகெட்ட ஆட்சியாக இந்க ஆட்சி இருக்கிறது.
முதலமைச்சரும், அமைச்சர்களும் இப்படி “ஊழல் பேரணி” நடத்துகிறார்கள் என்றால், இந்த ஆட்சியின் நிர்வாகத்திற்கு தலைமை வகிக்கும் தலைமைச் செயலாளரும், போலீஸ் கமிஷனர்களும் ஊழல் புகார்களில் சிக்கியுள்ளார்கள். தலைமைச் செயலாளராக இருந்த ராம்மோகன் ராவ் வீட்டிலும், கோட்டையில் உள்ள அவரது அலுவலகத்திலும் ரெய்டு நடத்தப்பட்டது. ரூபாய் 600 கோடி மதிப்புள்ள மருத்துவமனை பராமரிப்புப் பணிகளை அவரது பினாமி கம்பெனிக்கு கொடுத்த புகார் எழுந்தது. அவர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறையின் ரெய்டில் தங்கக் கட்டிகளும், கரன்சி நோட்டுக்களும் கைப்பற்றப்பட்டன.
தடை செய்யப்பட்ட குட்கா விற்பனைக்கு, போலீஸ் கமிஷனர்களாக இருந்த ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட டைரியை வருமான வரித்துறை கைப்பற்றியது. இப்போது உயர்நீதிமன்றமே அதன் மீது, “சுதந்திரமான அதிகாரிகள் குழுவை”, வைத்து விசாரிக்க உத்தரவு போட்டிருக்கிறது. ஆனால், ”வருமான வரித்துறையின் கோப்புகளை காணவில்லை”, என்று கூறுவதற்கு ஒரு தலைமைச் செயலாளரே இந்த ஊழல் அரசுக்கு கிடைத்திருக்கிறார் என்பது நிர்வாக அலங்கோலமாக இருக்கிறது.
‘குதிரை பேர’ அதிமுக ஆட்சியில் ‘அமைச்சர்கள் ஊழல்’ மீதும் நடவடிக்கை இல்லை. ‘அதிகாரிகள் ஊழல்’ மீதும் நடவடிக்கை இல்லை. ஏன், நாட்டின் முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமி மீதே ஆர்.கே.நகரில் 89 கோடி ரூபாய் வழங்கப்பட்ட விவகாரத்தில் தேர்தல் ஆணையமே வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டிருக்கிறது. நம்பிக்கை வாக்கெடுப்பில் 4 கோடி ரூபாய் முதல் 6 கோடி ரூபாய் வரை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்தது குறித்த ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சியின் புலனாய்வு செய்தியின் மீது, மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களே விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆகவே எல்லா துறைகளிலும் ஊழல், எதிலும் கமிஷன் என்ற அளவில் ஊழல் அமைச்சர்களின் பட்டியலே இந்த ‘குதிரை பேர’ அமைச்சரவையில் ஒரு டஜனை தாண்டி விட்டது. ஊழல் அமைச்சர்களால் இன்றைக்கு தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லை. தொழில் வளர்ச்சி இல்லை. தொழில் முதலீடுகள் எல்லாம் வேறு மாநிலங்களுக்குச் சென்று கொண்டிருக்கின்றன. உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் இல்லாமல் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
ஊழல் அமைச்சரவைக்கு தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியோ, தானே முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய நிலையில் இருப்பதால், மக்கள் போராட்டங்களை குண்டர் சட்டம் மூலம் அடக்க பார்க்கிறார். மாணவர்களின் கனவுகளை ‘நீட்’ தேர்வு மூலம் பறித்துவிட்டு, அதை எதிர்த்துப் போராடும் அரசியல் கட்சிகளை கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் மிரட்டிப் பார்க்கிறார். ஊழலில் உறைந்துவிட்ட சில போலீஸ் அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் ஊழல் அமைச்சரவைக்கு முட்டுக் கொடுக்க நினைத்து இந்த அராஜக நடவடிக்கைகளுக்கு துணை போகிறார்கள்.
இந்நிலையில், ஊழல் புகார்களை விசாரிக்கும் ‘லோக் அயுக்த’ அமைப்பு மாநிலத்திற்கு மிக முக்கியம்! அதுமட்டுமின்றி, சென்னை உயர்நீதிமன்ற (மதுரை கிளை) நீதிபதிகள் குட்கா வழக்குத் தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருப்பது போல், லஞ்ச ஒழிப்புத்துறையும், மாநில விழிப்புணர்வு ஆணையமும் சுதந்திரமிக்க அமைப்புகளாக செயல்பட வேண்டியதும் மிக மிக முக்கியம். ஆகவே, ‘லோக் அயுக்த’ அமைப்பை இனியும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக அமைத்திட வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக் கொள்கிறேன். அப்படி அமைக்கத் தவறினால் இந்த ஊழல் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீதான புகார்களை விசாரிக்க திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ‘லோக் அயுக்த’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி, விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.