பிரபல சினிமா ஃபைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
பிரபல சினிமா ஃபைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா சினிமா நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்களுக்கு வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். சென்னை சௌகார்பேட்டை மிண்ட் தெருவில் நிதி நிறுவனம், வைரம் மதிப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றை நடத்தி வருகிறார். அவரது மகன்கள் ககன் போத்ரா, சந்தீப் போத்ரா ஆகிய இருவரும் தந்தைக்கு தொழிலில் உதவிகரமாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள பி.ஆர்.சி. இண்டர்நேஷனல் ஹோட்டல் நிர்வாகி செந்தில் கணபதி, முகுந்த் சந்த் போத்ரா தன்னிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார். 83 லட்ச ரூபாய் கடனுக்கு 4 கோடி ரூபாய் கேட்டு மிரட்டுவதாக அவர் புகார் தெரிவித்தார். மேலும், ஜே.எஸ்.கே. பிலிம்ஸ் சதீஷ் குமார் என்பவரும் கந்துவட்டி புகார் கொடுத்தார். இந்த இரண்டு புகார்களின் மீதும், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து கடந்த ஜூலை 25-ஆம் தேதி முகுந்த் சந்த் போத்ரா மற்றும் அவரது இரு மகன்கள் ககன் போத்ரா மற்றும் சந்தீப் போத்ரா ஆகியோரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இதைத்தொடர்ந்து, நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த தங்க நகை வியாபாரியான ஆனந்த் என்பவர் கடந்த 29-ஆம் தேதி காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தார். அதில், “கடந்த 2014-ஆம் ஆண்டு முகுந்த் போத்ராவிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கினேன். பல்வேறு தவணைகளில் ரூ.30 லட்சம், 800 கிராம் தங்கம் ஆகியவற்றை கொடுத்தும், நான் கடன் வாங்கும்போது கொடுத்த காசோலைகள், ஆவணங்களை வைத்து ரூ. 3 கோடி கேட்டு முகுந்த் போத்ரா மிரட்டுகிறார்.”, என தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து முகுந்த் போத்ரா மீண்டும் கைது செய்யப்பட்டார்.
தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டதால், முகுந்த் போத்ராவை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கோரிக்கை விடுத்தனர். இதனை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஏற்றுக்கொண்டதையடுத்து, முகுந்த் போத்ரா குண்டர் தடுப்பு சட்டத்தில் சிரையில் அடைக்கப்பட்டார்.