நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக அண்ணாமலை வெளியிட்ட ஆடியோவிற்கு, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய 26 நொடிகள் கொண்ட ஆடியோவை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்நிலையில் இந்த ஆடியோவில், ’உதயநிதி ஸ்டாலினும், சபரீசனும் ரூ. 30 ஆயிரம் கோடி சொத்துக்களை சேர்த்துள்ளனர் . தற்போது இது பிரச்சனையாகி வருகிறது. இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பழனிவேல் தியாகராஜன் ஆங்கிலத்தில் பேசியது இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் இதற்கு பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டரில் பதிவிட்ட ட்வீட் “ நான் பேசியதாக வெளியான ஆடியோவில் உண்மைத் தன்மை இல்லை. சமீப காலத்தில் ஆன்லைனில் கிடைக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டு பொய்யாக ஒரு ஆடியோவை உருவாக்க முடியும். இதுபோல இனி வரும் காலங்களிலும் ஆடியோ, வீடியோ வெளியாகும்.
என்னைப் பற்றி வெளியாகும் விமர்சனங்களுக்கு நான் எப்போதும் பதிலளித்ததில்லை. இந்த விஷயத்திற்குதான் பதிலளித்துள்ளேன். எங்களை பிரிப்பதற்காக செய்யப்படும் எந்த ஒரு விஷயமும் வெற்றிபெறாது. எனது பொதுவாழ்வில் நான் செய்த அனைத்திற்கும் முதல்வர் ஸ்டாலின்தான் காரணம் ” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த விளக்கத்திற்கு அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். “ திமுகவின், சமூகவலைதள பிரிவில் இருப்பவர்கள் வேடிக்கையானவர்கள். இதுபோன்ற பதில்களை யாரும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை .
நிதியமைச்சர் இந்த ஆடியோ தொடர்பாக பொதுவான ஆய்வை மேற்கொள்ள ஏன் தயங்குகிறார். ஒரு வருடத்தில் ரூ. 30,000 கோடி பெறும் முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களிடம் கூடுதல் விளக்கத்தை கொடுக்க வேண்டும் “ என்று குறிப்பிட்டுள்ளார்.