தமிழ்நாட்டின் மொத்தக் கடன் ரூ.9 லட்சம் கோடி என்றும் நடப்பு ஆண்டு 1 லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசின் நிதித் துறை செயலர் உதயச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், மாநில அரசின் கடன் வாங்கும் வரம்புக்குள்தான் தமிழக அரசின் கடன் உள்ளது என்று உதயச்சந்திரன் கூறினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமை (14.03.2025) தொடங்கியது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், தமிழ்நாட்டின் மொத்தக் கடன் ரூ.9 லட்சம் கோடி என்றும் நடப்பு ஆண்டு 1 லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசின் நிதித் துறை செயலர் உதயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசின் நிதித் துறை செயலர் உதயச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது உதயச்சந்திரன் கூறியதாவது: “தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.41,000 கோடியாகக் குறையும். மாநில அரசின் கடன் வாங்கும் வரம்புக்குள்தான் தமிழக அரசின் கடன் உள்ளது. மத்திய அரசிடமிருந்து பல திட்டங்களுக்கான நிதி வந்திருந்தால் இது மேலும் குறைந்திருக்கும்.
ஜி.எஸ்.டி-யை பொருத்தவரை டிஜிட்டல் சேவையில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். நிறைய கட்டமைப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன” என்று கூறினார்.