சென்னை வடபழனியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. படுகாயங்களுடன் ஐந்து பேர் கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதுகுறித்து விகடன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தெற்கு சிவன் கோவில் தெருவில் மின்கசிவு ஏற்பட்டு இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புகை மூட்டத்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டுதான் அந்த நான்கு பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பலியான நான்கு பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இரு சக்கர வாகன நிறுத்தத்தில் தான் முதலில் தீ பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால், பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் அனைத்தும் தீயில் கருகிவிட்டன.
தடயவியல் நிபுணர்கள்:
இந்நிலையில், தீ விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில், தீ விபத்துக்கான காரணம் குறித்து தடவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் குறித்து போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலெக்டர்கள் ஆய்வு:
சம்பவ இடத்திற்கு நேரில் வந்திருக்கும் சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் ஆய்வு நடத்தி வருகிறார். தீ விபத்து ஏற்பட்ட குடியிருப்பை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்புச் செல்வன், "விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் விதிமுறை மீறல் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
தீ விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை நடந்து வருவதாகவும் கூறிய ஆட்சியர், ஆய்வு முடிவை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
மின்துறை அதிகாரிகள் சொல்வது என்ன?
இந்த விபத்து குறித்து பேசியுள்ள மின்சார வாரிய அதிகாரிகள், "மின் ஒயரில் தான் கோளாறு ஏற்பட்டு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மின்சார வாரியத்தின் கேபிள்களில் எந்தப் பிரச்சனையும் இல்லை" என்றனர்.
அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு:
இதையடுத்து, விபத்து நடைபெற்ற இடத்திற்கு வந்து ஆய்வு செய்த அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், "துரதிர்ஷ்டவசமாக வசமாக நடந்த இந்த சம்பவம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. காயமடைந்துள்ளவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முழுமையான விசாரணை நடத்தப்பட்ட பின்னரே, விபத்து ஏற்பட்டதற்கான உண்மையான காரணத்தைப் பற்றி சொல்ல முடியும். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை வழக்கமான அளவுகோல் படி கொடுக்கப்படும்" என்றார்.