Advertisment

முற்றிலும் எரிந்த 'சென்னை சில்க்ஸ்'...! ஸ்தம்பித்த தி.நகர்!

12 மணி நேரமாகியும் அந்த புகையை கட்டுப்படுத்த முடியாமல், தீயணைப்புப் படை வீரர்கள் திணறி வருகின்றனர்

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
முற்றிலும் எரிந்த 'சென்னை சில்க்ஸ்'...! ஸ்தம்பித்த தி.நகர்!

சென்னை தி.நகரின் உஸ்மான் சாலையில் உள்ள பிரபல தனியார் துணிக்கடையான 'சென்னை சில்க்ஸ்'-ல் இன்று அதிகாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, அந்த துணிக்கடையின் மேல்தளத்தில் தங்கியிருந்த 11 ஊழியர்களை, 4 மணி நேர போராட்டத்திற்குப்பின், கிரேன் மூலம் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

Advertisment

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருப்பதாக தீயணைப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். தீ விபத்தை தொடர்ந்து, உஸ்மான் சாலையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், அக்கடையின் தரைத்தளத்தில் இருந்து தொடர்ந்து புகை வெளிவந்து கொண்டே இருக்கிறது. 12 மணி நேரமாகியும் அந்த புகையை கட்டுப்படுத்த முடியாமல், தீயணைப்புப் படை வீரர்கள் திணறி வருகின்றனர். இதையடுத்து, தீ விபத்து ஏற்பட்டிருக்கும் பகுதி, அபாயகரமான பகுதியாக தீயணைப்புத் துறை அறிவித்தது. தொடர்ந்து, புகை வெளியேறுவதால், கட்டடம் பலவீனம் அடைய வாய்ப்புள்ளதால், இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது.

publive-image

இந்தச் சூழ்நிலையில், தற்போது அந்த கட்டிடத்தின் உள்பகுதியில் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு மிக பதற்றமான சூழ்நிலை உருவாகி வருகிறது. சில மணி நேரங்களுக்கு முன்பிருந்ததைவிட, தற்போது அந்த கட்டிடத்தில் இருந்து அதிகளவிலான கரும்புகை வெளிவந்துக் கொண்டிருக்கிறது. இதையடுத்து அந்தப் பகுதி முழுவதுமே வாகனப் போக்குவரத்திற்கும், மக்கள் போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமைச்சர் ஆர்பி உதயகுமார் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளார். பிறகு அவர் அளித்த பேட்டியில், "யாருக்கும் பாதிப்பின்றி இந்த புகையை கட்டுப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சரின் ஆணைப்படி, நாங்கள் இங்கு முகாமிட்டுள்ளோம். தீயணைப்பு வீரர்கள் தற்போது கட்டிடத்தின் உள்ளே சென்றுள்ளனர். டெக்னிக்கலாக புகையை கட்டுப்படுத்தும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.

publive-image

இருப்பினும், தீயை கட்டுப்படுத்த முடியாததால், அந்த துணிக் கடையின் பின்புற சுவரை, பொக்லைன் வைத்து இடித்து தீயை அணைக்க, தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஜெயக்குமார், "ஸ்கை லிஃப்ட் மூலம் போர்க்கால அடிப்படையில் தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. அனைத்து அரசுத் துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர். விதிமுறை மீறி கட்டடம் கட்டப்பட்டுள்ளதா என விசாரணைக்கு பின் தெரியவரும். ஒருவேளை விதிமுறை மீறப்பட்டிருந்தால், மீட்புப் பணிக்கான முழு செலவையும் இந்நிறுவனம் தான் ஏற்கவேண்டும்.   அதோடு மட்டுமில்லாமல், இந்நிறுவனத்தின் மீதும், அதற்கு அனுமதித்த அதிகாரிகள் மீதும் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கட்டடம் முழுமையாக இடிக்கப்படும்" என எச்சரித்தார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அளித்த பேட்டியில், "கட்டடத்தின் அமைப்பு காரணமாக தான் தீயை அணைப்பதில் அதிக நேரம் ஆகிறது. மொத்தம் 50 வண்டிகள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. 10 நிமிடத்திற்கு ஒரு லாரி வீதம் தண்ணீர் கொண்டுவந்து, தீயை அணைக்கும் முயற்சியில் 125 வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.

T Nagar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment