ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டாசு உற்பத்தியாளர்கள் ஜூன் 30-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
ஜிஎஸ்டி-யில் பட்டாசு உற்பத்திக்கு 28% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பட்டாசு உற்பத்தியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே, வரும் ஜூன் 30-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பட்டாசு உற்பத்தியார்கள் சங்க தலைவர் ஆசைத்தம்பி கூறும்போது: பட்டாசு உற்பத்திக்கு ஜி.எஸ்டி-யில் 28% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 8 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்டுவார்கள். எனவே, இதனை 15 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜூன் 30-ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கவுள்ளோம் என்று கூறினார்.
இந்த போராட்டத்தில் சிவகாசி மற்றும் அதைச்சுற்றியுள்ள 811 பட்டாசு உற்பத்தி ஆலைகள் பங்கேற்கின்றன.