தமிழ்நாடு கால்நடை மற்றும்m விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் அண்மையில் கால்நடை மருத்துவப் படிப்புக்கான (பிவி.எஸ்சி) தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் பன்னிரண்டாம் வகுப்பில் தொழிற்கல்வியை பாடமாக எடுத்த மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் இடங்களில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடி இன மாணவர் யு.சந்திரன் முதல் இடத்தில் இருந்தார். அதனால், அவர் தனக்கு கால்நடை மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் ஒரு கால்நடை மருத்துவராகி விடலாம் என்ற கனவில் இருந்தார்.
கால்நடை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு அழைப்பு கடிதம் வரும் என்று எதிர்பார்த்து இருந்தார். ஆனால், வரவில்லை. என்ன நடந்தது?
ஈரோடு மாவட்டம், பர்கூர்மலை கிராமம், சுண்டபோடு கிராமத்தை சேர்ந்த, உடுமுட்டு மகன் சந்திரன். பழங்குடியினத்தில் சோளகர் பிரிவைச் சேர்ந்த மாணவர் சந்திரன், கோபிசெட்டிப்பாளையம், வைரவிழா மேல்நிலைப்பள்ளியில், வேளாண் செயல்பாடு தொழில் பாடப்பிரிவில் பன்னிரண்டாம் வகுப்பில், 444 மதிப்பெண் பெற்றுள்ளார். இவர் தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் பிவி.எஸ்சி-க்கு விண்ணப்பித்தார்.
வேளாண் பல்கலை தொழில் பாடப்பிரிவில், தரவரிசையில், 409வது இடம் பெற்றார். ஆனால், இட ஒதுக்கீடு தரவரிசை எண் வழங்கவில்லை. கால்நடை மருத்துவ பாடப்பிரிவில், 146வது இடம், இட ஒதுக்கீட்டில் பழங்குடியினர் பிரிவில் முதலிடம் பெற்றார். வேளாண் பல்கலையில் கடந்த, ஜூலை 12ஆம் தேதியும், கால்நடை மருத்துவ பல்கலையில் 25ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெற்றது. ஆனால், இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
வேளாண்மை செயல்பாடு தொழில் பாடப்பிரிவு மாணவர்களுக்கு, வேளாண் பல்கலையில், 5 சதவீத இடம் வழங்கப்படுகிறது. 5,220 இடத்தில், தொழில் படிப்பு மாணவர்களுக்கு, 44 இடம் மட்டுமே வழங்கப்படும். அதேபோல் கால்நடை மருத்துவ படிப்பில், 360 இடங்களில், 18 மட்டுமே அளிக்கப்படுகிறது. இந்த, 18 இடங்களில் இட ஒதுக்கீட்டின் படி இவர், முதலிடம் பெற்றும், கலந்தாய்வுக்கு அழைக்கப்படவில்லை.
தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் தமிழகத்தில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறைப்படி, மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் ஆகியோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கு 26.5%, பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) 3.5%, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 20%, பட்டியல் இனத்தவருக்கு 15%, பட்டியல் இன அருந்ததியர் 3%, பழங்குடியினருக்கு 1% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த முறைப்படி, பிவி.எஸ்சி 18 இடங்களுக்கு பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டின்படி 0.18% இடஒதுக்கீடு ஆகும். அதனால், மாணவர் சந்திரனுக்கு இடம் கிடைக்கவில்லை. இந்த இடஒதுக்கீடு செயல்படுத்தப்படும் முறையால் பழங்குடியினருக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தும் மாணவர் சந்திரனுக்கு இடம் கிடைக்காததால் அவருடைய கனவு சிதறிப்போயிருக்கிறது.
இது தொடர்பாக மாணவர் சந்திரன் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் தனக்கு கால்நடை மருத்துவப் படிப்பில் இடம் அளிக்க நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்துள்ளார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, தனக்கு இடம் அளிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதில், மாநில மனித உரிமைகள் அமைப்பு தானாக முன்வந்து இந்த வழக்கை எடுத்து நடத்துவதாக தெரிவித்துள்ளது. அதோடு, இது தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி பல்கலைக்கழக துணை வேந்தர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது குறித்து ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி ஐ.இ. தமிழுக்கு பேசுகையில் “முதலில் மாநில அரசு உயர்கல்வியில் பழங்குடியினருக்கு என்று எந்த ஒரு தனி திட்டத்தையும் கொண்டுவரவில்லை. எஸ்.சி., எஸ்.டியினருக்கான உயர்க்கல்வி நிதியுதவி எல்லாம் மத்திய அரசு திட்டங்கள்தான். இந்த திட்டம் கொண்டுவரப்பட்டு 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் பழங்குடியினரில் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை உயர்ந்தது. ஆனால், அதுவும் இப்போது பின்னோக்கி செல்லுமோ என்ற அச்சம் உள்ளது.
பழங்குடியினரின் உயர்கல்வியில் எந்த ஆர்வமும் மாநில அரசுக்கு இல்லை. ஒரு பழங்குடி மாணவர் 12 ஆம் வகுப்பில் தொழிற்கல்வி படித்த மாணவர்களுக்கான பிரிவில் முதலிடம் பெற்றுள்ளார். ஆனால், அவருக்கு இடம் கிடைக்கவில்லை. பழங்குடியினரிலிருந்து இப்போதுதான் கல்லூரிகளுக்கு வரத் தொடங்கியிருகிறார்கள். அதனால், தமிழக அரசு ஏதேனும் ஒரு சிறப்பு ஏற்பாட்டில் சந்திரன் என்ற அந்த மாணவருக்கு பிவி.எஸ்சியில் இடம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழங்குடியினரின் உயர்கல்வியில் மாநில அரசு அக்கறை காட்ட வேண்டும்.” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.