First local body elections in Kurumalai: உள்ளாட்சி தேர்தலில் முதன்முறையாக தங்களின் வாக்குகளை செலுத்த உள்ளனர் ஆனைமலைத் தொடரில் வசிக்கும் பழங்குடிகள். திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வனச்சரகத்தின் கீழ் வரும் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மொத்தம் 15 பழங்குடியின கிராமங்கள் உள்ளன. மலைப் புலையர் மற்றும் முதுவர் இன பழங்குடிகள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் இதற்கு முன்பு உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றதே இல்லை. தற்போது இந்த 15 கிராமங்களில் 11 கிராமங்கள் ஊரக உள்ளாட்சி அமைப்புகளாக அறிவிக்கப்பட, குருமலை, மேல்குருமலை, பூச்சிக்கொட்டாம்பாறை, மற்றும் திருமூர்த்தி மலை போன்ற பகுதிகள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க தகுதியான வார்டுகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குருமலை, மேல்குருமலை, மற்றும் பூச்சிக்கொட்டாம்பாறை 16வது வார்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று திருமூர்த்தி மலை 17வது வார்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்குருமலை மற்றும் பூச்சிக்கொட்டாம்பாறை பகுதிகளில் முதுவர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். முறையே 45 மற்றும் 40 குடும்பங்கள் இங்கே உள்ளன. குருமலையில் 90 குடும்பங்களில் மலைப்புலையர்கள் வசித்து வருகின்றனர். மொத்தமாக 385 தகுதிபெற்ற வாக்காளர்கள் இந்த வார்டில் இடம் பெற்றுள்ளனர். சி.பி.எம். மற்றும் அதிமுக கட்சியினர் இந்த வார்டில் போட்டியிடுகின்றனர்.
திருமூர்த்தி மலை, 17வது வார்டில் மொத்தம் 110 குடும்பங்களில் 234 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த பகுதியில் அதிகமாக மலைப்புலையர் பழங்குடியினர் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சி.பி.எம்., அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்கள் இங்கே களம் இறங்குகின்றனர்.
"2008ம் ஆண்டில் இருந்தே அடிப்படை வசதிகளை அமைத்து தர எங்களின் கிராமங்களை ஊராட்சி அல்லது பேரூராட்சி வார்டுகளாக மாற்ற வேண்டும் என்று நாங்கள் போராட்டம் நடத்தி வந்தோம். ஆனால் அதற்கு தற்போது தான் நல்ல விடிவு காலம் வந்துள்ளது" என்று தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய குருமலை கிராமவாசி ஒருவர் கூறினார். மேலும், முதன்முறையாக தேர்தல் நடைபெற இருப்பதால் கிராமம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் அவர்.
“காப்புக்காடு, அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் எங்களின் கிராமங்கள் அமைந்திருப்பதால் உள்ளாட்சித் தேர்தல் என்பது சிரமமான காரியம் என்று கூறி வாக்கு அளிக்கும் உரிமையை வனத்துறையினர் தொடர்ந்து மறுத்துவந்தனர். ஆனால் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் 2008ம் ஆண்டில் இருந்தே உள்ளாட்சி தேர்தல்கள் கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தி வந்தது. தற்போது தான் அதில் நாங்கள் அதில் வெற்றி பெற்றுள்ளோம்” என்று கூறினார் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினரும், சி.பி.எம். திருப்பூர் மலைக்கமிட்டி உறுப்பினருமான மணிகண்டன். செயலாளர் செல்வம் மற்றும் 9 உறுப்பினர்களைக் கொண்ட திருப்பூர் மலைக்கமிட்டி தொடர்ந்து ஆனைமலைத் தொடரில் வசித்து வரும் பழங்குடி மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமூர்த்திமலையில் போட்டியிடும் சி.பி.எம். வேட்பாளர் வானீஸ்வரியிடம் பேசிய போது, ”இங்கு வாழும் மக்களின் வீடுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அவர்களுக்கு பசுமை வீடுகள் கட்ட ஏற்பாடுகள் செய்யப்படும். மேலும், சிமெண்ட் சாலைகள் மற்றும் சமுதாயக் கூடங்கள் அமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” என்ற அவர், “பட்டியல் இன மக்களாக வகைப்படுத்தப்பட்டிருக்கும் மலைப்புலையர் வகுப்பினரை பட்டியல் பழங்குடி இனமாக அறிவிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்” என்றும் கூறியுள்ளார்.
கிடைக்காத ஒரு அதிசய வாய்ப்பு எங்களுக்கு கிடைத்துள்ளதாகவே நான் நினைக்கின்றேன். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைப் பெற்றுத்தர ஏற்பாடு செய்துத் தருவேன் என்று கூறுகிறார் 30 வயது, மலைப்புலையர் இனத்தைச் சேர்ந்த சி.பி.எம். வேட்பாளர் வானீஸ்வரி. சுற்றிலும் உற்றார்கள் உறவினர்கள் தான் இருக்கின்றனர். வேட்பாளர்களும் கூட நன்கு பரீட்சையமானவர்களாவே உள்ளனர். வெற்றி பெற்று இம்மக்களுக்கு நிச்சயம் நல்லது செய்து தரவே விரும்புகிறோம் என்று கூறினார் வானீஸ்வரி. அவரை எதிர்த்து அதே வார்டில், பாஜக சார்பில் அருக்காணி மற்றும் அதிமுக சார்பில் குப்பாத்தாள் ஆகியோர் களம் இறங்குகின்றனர்.
”இந்த திட்டங்கள் எதையும் நிறைவேற்றுவேன், மக்களுக்காக கொண்டு வருவேன் என்று கூறவில்லை. ஆனால் நான் அரசு வெளியிடும் திட்டங்கள், அறிவிப்புகள் போன்றவற்றை எங்கள் மக்களுக்காக நிறைவேற்ற என்னால் இயன்ற முயற்சி மேற்கொள்வேன்” என்று கூறுகிறார் அதிமுக சார்பில் போட்டியிடும் குப்பாத்தாள் (39).
குருமலையில் வசித்து வரும், வார்டு எண் 16ல் போட்டியிடும் சி.பி.எம். கட்சி வேட்பாளர் செல்வத்திடம் இது குறித்து பேச முயன்றது தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ். “பசுமை வீடுகள் கட்ட ஏற்பாடு செய்து தரப்படும். இது தான் எங்களின் முதன்மை திட்டமாக உள்ளது. மழை காலங்களிலும் குளிர் காலங்களிலும் எங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள இந்த திட்டத்தை நாங்கள் முதலில் கையில் எடுத்துள்ளோம். வன உரிமை சட்டத்தின் கீழ் எங்களுக்கான வீட்டுமனை பட்டா மற்றும் விவசாய நிலப்பட்டா பெறவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். சமுதாய கூடம் அமைத்து தரப்படும் என்றும் மக்களிடம் கூறியுள்ளோம். மேலும் திருமூர்த்தி மலையை குருமலை, மேல்குருமலை மற்றும் பூச்சிக்கொட்டாம்பாறை பகுதிகளோடு இணைக்க சாலைகள் உருவாக்கித் தரப்படும் என்றும் கூறியுள்ளோம். கொரோனா தொற்று காரணமாக, உண்டு உறைவிடப் பள்ளிகளில் படித்த எங்களின் குழந்தைகள் அனைவரும் வீடு திரும்பிவிட்டனர். அவர்களின் கல்வி பெறும் அளவு பாதித்துள்ளது எனவே அவர்கள் பயன் பெறும் வகையில் நாங்கள் செல்போன் டவர்களை அருகில் அமைக்க தேவையான ஏற்பாடுகளை ஏற்படுத்தித் தருவோம்” என்று செல்வம் வீட்டில் இல்லாத காரணத்தால், அவருடைய மனைவி கண்ணம்மாள் கூறினார்.
சனிக்கிழமை அன்று தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளது. பிப்ரவரி 19ம் தேதி அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிவுகள் பிப்ரவரி 22ம் தேதி அன்று அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தல்கள் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்ட நிலையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு தற்போது தேர்தல்கள் நடைபெற உள்ளது.
21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், மற்றும் 490 பேரூராட்சிகளில் முறையே 1327 வார்டு உறுப்பினர்கள், 3843 வார்டு உறுப்பினர்கள் மற்றும் 7621 வார்டு உறுப்பினர்கள் பதவி இடங்கள் உள்ளன. மொத்தமாக நாளை நடைபெற இருக்கும் தேர்தலில் 12,838 நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டவுடன், உள்ளாட்சி அமைப்புகளில் தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்கள் பேரூராட்சி தலைவர், நகராட்சி தலைவர் மற்றும் மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு போட்டியிடும் நபர்களை மறைமுகமாக தேர்வு செய்வார்கள். மறைமுக தேர்தல் மூலமாக 21 மேயர்கள், 21 துணை மேயர்கள், 138 நகர மன்ற தலைவர்கள், 138 நகர மன்ற துணைத் தலைவர்கள், 490 பேரூராட்சி தலைவர்கள், 490 பேரூராட்சி துணைத் தலைவர்கள் என 1298 உறுப்பினர்கள் மறைமுகமாக தேர்வு செய்யப்படுவார்கள். இந்த உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் வருகின்ற மார்ச் மாதம் 4ம் தேதி அன்று நடைபெற உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.