எடப்பாடி அரசுக்கு எதிராக ஓ.பி.எஸ். முதல் போராட்டம் : 10-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்

வெளிப்படையான போராட்டத்தை எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக ஓ.பி.எஸ். தொடங்குவதால், அ.தி.மு.க. அணிகள் இணையும் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்ததுபோல ஆகிறது.

ops, O Panneer selvam

எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக முதல் போராட்டத்தை வருகிற 10-ம் தேதி சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் நடத்துகிறார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தனி அணியாக இயங்கி வருகின்றனர். இந்த அணியை, ‘அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி’ என தேர்தல் ஆணையம் அடையாளப் படுத்தியிருக்கிறது. இரு அணிகளையும் இணைக்க எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.

‘சசிகலா குடும்பத்தினரை விலக்கி வைக்க வேண்டும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும்’ என இரு கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே இணைப்பு சாத்தியம் என ஓ.பி.எஸ். வலியுறுத்தி வருகிறார். தர்மயுத்தம் என்ற பெயரில் மாவட்டம் வாரியாக பொதுக்கூட்டங்களை நடத்தி வரும் ஓ.பி.எஸ்., அந்தக் கூட்டங்களில் எடப்பாடி அரசு மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். ஆனாலும் நேரடியாக எடப்பாடி அரசுக்கு எதிராக இதுவரை ஓ.பி.எஸ். போராட்டம் நடத்தவில்லை.

முதல் முறையாக வருகிற 10-ம் தேதி வட சென்னையில் ஓ.பி.எஸ். தலைமையில் மாநில அரசுக்கு எதிராக புரட்சித் தலைவி அம்மா அணியின் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. குடிநீர் தட்டுப்பாடு, பரவி வரும் டெங்கு காய்ச்சல், நீட் தேர்வு குளறுபடி, விவசாயிகள் பிரச்னை, மாநகராட்சி நிர்வாக சீர்கேடு என மக்கள் பிரச்னைகளில் எடப்பாடி அரசு மெத்தனமாக நடப்பதாக குற்றம்சாட்டி இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்குகிறார். அவைத்தலைவர் மதுசூதனன் முன்னிலை வகிக்கிறார். 10-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தை எந்த இடத்தில் நடத்துவது என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. இந்தப் போராட்டத்திற்கான அறிவிப்பை மதுசூதனன் வெளியிட்டுள்ளார்.

வெளிப்படையான போராட்டத்தை எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக ஓ.பி.எஸ். தொடங்குவதால், அ.தி.மு.க. அணிகள் இணையும் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்ததுபோல ஆகிறது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: First protest of o pannerselvam against edappadi palanisamy government protest at chennai on august

Next Story
மெரீனாவில் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது: நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express