கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடியவர்களை விடுவிக்கக் கோரி மக்கள் இயக்கத்தின் அகில இந்திய தலைவர் உள்பட ஐந்து பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு ஓஎன்ஜிசி சார்பில் எண்ணெய்க் கிணறுகள் அமைக் கப்பட்டது. பல நூறு அடி ஆழத்தில் இருந்து இந்த கிணறுகள் மூலம் உறிஞ்சப்படும் கச்சா எண்ணெய், அங்கிருந்து குத்தாலம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு குழாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. ஆழ்குழாய் அமைத்து கச்சா எண்ணெய் உறிஞ்சுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது, நிறம் மாறி நீர் மாசடைகிறது, விவசாய நிலங்கள் பாதிப்படைகிறது என குற்றம் சாட்டிய அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஓஎன்ஜிசி எண்ணெய் குழாயில் கடந்த மாதம் 30-ம் தேதி ஏற்பட்ட கசிவு காரணமாக அதிலிருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் திறந்த வெளியில் ஓடி, அப்பகுதி வயல்களில் பரவியது. இதனால் பதற்றமடைந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். மேலும், எண்ணெய் கசிவை சரிசெய்ய வந்த அதிகாரிகளை ஊருக்குள் நுழைய விடாமல் போராட்டம் நடத்தினர். இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனிடையே, எண்ணெய் குழாயில் ஏற்பட்ட உடைப்பில் மர்ம நபர்கள் தீ வைத்ததால் பதற்றம் மேலும் அதிகரித்தது. தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் அப்பகுதி கலவர பூமியாக காட்சியளித்தது.
இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை போலீசார் சிறையில் அடைத்தனர்.
அதனைத்தொடர்ந்து, கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி-க்கு எதிராக போராடியவர்களை விடுவிக்க கோரியும், குழாய்களை அகற்ற கோரியும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த காத்திருப்பு போராட்டம் 19-வது நாளாக இன்றும் தொடர்கிறது.
இதனிடையே, ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடியவர்களை விடுவிக்கக் கோரி, மக்கள் இயக்கத்தின் அகில இந்திய தலைவர் சண்முகசுந்தரம், மாநிலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, கதிராமங்கலத்தை சேர்ந்த அமுதா, முருகானந்தம், ராஜேந்திரன் ஆகிய ஐந்து பேரும் நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
முன்னதாக, கைது செய்யப்பட்டவர்களின் நீதிமன்றக் காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், கும்பகோணம் இரண்டாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நீதிபதி, வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் விசாரணை நடத்தி அவர்களின் நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார். அதன்படி, அவர்களது நீதிமன்ற காவல் வருகிற ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.