எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இ.பி.எஸ். அணியினர், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான ஓ.பி.எஸ். அணியுடன் இணைய விரும்புவதற்கு காரணங்களாக 5 அம்சங்களை பட்டியல் இடுகிறார்கள். அவற்றை இங்கே பார்க்கலாம்.
1. சரிந்த ஆட்சியின் இமேஜ்: ‘இது ஜெயலலிதாவின் அரசு’ என மூச்சுக்கு மூச்சு முதல்வர் முதல் அத்தனை அமைச்சர்களும் முழங்கிப் பார்த்துவிட்டார்கள். ஆனால் மக்கள் மத்தியில் இந்த அரசு மீதான இமேஜ் அதலபாதாளத்தை நோக்கிப் பயணிப்பதை தவிர்க்க முடியவில்லை. குறிப்பாக அமைச்சர் விஜயபாஸ்கரை சுற்றிய சர்ச்சைகளால் அரசுக்கு பெரும் பின்னடைவு.
வழக்கமாக ஒரு முட்டுச்சந்தில் மேடை போட்டு, எம்.ஜி.ஆர். வேடம் தரித்த ஒருவர் ஆடிப்பாடினாலே கூட்டம் கட்டி ஏறும். ஆனால் கோடிகளை கொட்டி மாவட்டம் வாரியாக நடக்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்கள் காற்று வாங்குகின்றன. அரசின் செல்வாக்கை ஆட்சியாளர்களுக்கு உணர்த்திய முக்கியமான உரைகல் இது. எனவே அணிகளின் சண்டையை நிறுத்தாவிட்டால், அனைவரின் அரசியலும் அஸ்தமனமாகிவிடும் என ஆளும் தரப்பு உணர்ந்து, இந்த நடவடிக்கையை வேகமாக முன்னெடுக்கிறது.
ஓ.பன்னீர்செல்வம்
2. சுதந்திரக் காற்று: கடந்த 30 ஆண்டுகளாக ஜெயலலிதா என்கிற இரும்புப் பெண்மணியின் இரும்புப் பிடிக்குள் இருந்தே பழகியவர்கள் அ.தி.மு.க. நிர்வாகிகள். அந்த பழக்க தோஷமே ஆரம்பத்தில் சசிகலாவின் பின்னால் மெஜாரிட்டி நிர்வாகிகள் அணிவகுக்க காரணம். ஆனால் சசிகலா சிறைக்கு சென்றபிறகு சுதந்திரமாக மூச்சுவிட்டு பழகிவிட்டார்கள் முதல்வரும், இதர அமைச்சர் பெருமக்களும்!
இந்தச் சூழலில் மீண்டும் டி.டி.வி.தினகரன் கட்சியை அதேபோன்ற இரும்புப் பிடிக்குள் கொண்டு வருவதை இவர்களால் ஏற்க முடியவில்லை. இயல்பாகவே சசிகலா குடும்பம் மீது மக்களுக்கும், தொண்டர்களுக்கும் இருக்கிற கோபம் இவர்களின் பலம்! எனவே அந்தக் குடும்பத்தை கட்சிக்குள் தலையெடுக்க விடாமல் தடுக்க இதுவே தருணம் என இணைப்பை முன்னெடுக்கிறார்கள்.
3. கட்சியை காக்க: ஆர்,கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறாவிட்டாலும்கூட, சசிகலா குடும்பத்திற்கு எதிரான வெறுப்பை களத்தில் நேரடியாக பார்க்க அந்தக் கட்சியினருக்கே கிடைத்த சந்தர்ப்பம் அது! சசிகலா தலைமையில் இனி எந்தக் காலத்திலும் மக்கள் ஆதரவை கட்சி பெறும் வாய்ப்பு இல்லை என்கிற முடிவுக்கு பெரும்பாலான நிர்வாகிகள் வந்துவிட்டனர்.
எனவே அந்தக் குடும்பத்தை தவிர்த்து, மற்றவர்கள் இணைவதால் மட்டுமே கட்சியை காப்பாற்ற முடியும் என நம்புகிறார்கள். இந்தச் சூழலை பயன்படுத்தி பா.ஜ.க. உள்ளிட்ட வேறு கட்சிகள் தலையெடுக்க ஆர்வம் காட்டுகின்றன. எனவே அணிகள் ஒன்றிணையாவிட்டால், அ.தி.மு.க. நிழலில் இளைப்பாறிய அத்தனை பேரும் அரசியல் துறவறம் செல்ல வேண்டியதுதான் என்கிற புரிதல் வந்திருக்கிறது.
4.ஆட்சியைக் காக்க: இன்று மாபெரும் ஆளுமையாக வர்ணிக்கப்படும் ஜெயலலிதாவே 2016-ஐ தவிர, இதர தேர்தல்களில் தொடர்ச்சியாக ஜெயித்ததில்லை. 1996 சட்டமன்றத் தேர்தலிலும், 2004 நாடாளுமன்றத் தேர்தலிலும் மிக மோசமான தோல்விகளை எதிர்கொண்டவர் ஜெயலலிதா. அதன் மூலமாக கட்சிக்குள்ளும், வழக்குகள் ரீதியாகவும் பல நெருக்கடிகளை எதிர்கொண்டார்.
இன்று அதேபோன்ற வீழ்ச்சியை எதிர்கொண்டால், மீண்டும் ஆட்சிக்கு வருவது குதிரை கொம்புதான். வாழ்க்கையில் இன்னொரு முறை ஆளும்கட்சியாக வருவோமா? என்றே தெரியாத சூழலில், இந்த ஆட்சியை தவறவிடக்கூடாது என்கிற சிந்தனை கட்சியின் அனைத்து மட்டங்களிலும் இருக்கிறது.
5. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை : கட்சியின் முன்னணியினர் பலரும் இந்த பழமொழியை அடிக்கடி கூறியபடியே அணிகள் இணைப்பை வலியுறுத்தி வருகிறார்கள். ஆகஸ்ட் 10-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலும்கூட, இந்த பழமொழியை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். ஆளும்கட்சியாக இருப்பதில் ‘கோடி’ நன்மைகள் இருப்பதாகவும் இதற்கு சிலர் அர்த்தம் எடுத்துக் கொள்கிறார்கள். இதுவும் அணிகள் இணைப்புக்கு ஒரு காரணமே!
ஓ.பி.எஸ். தரப்பில், அமைச்சர் பதவியை எதிர்பார்த்திருக்கும் சிலரும், இன்னும் 4 ஆண்டுகள் அதிகாரம் இல்லாமல் அணியை நகர்த்த முடியுமா? என யோசிக்கும் சிலரும் இணைப்பை வலியுறுத்துகிறார்கள். அதைத்தாண்டி, அங்கு பலருக்கு அணிகள் இணைப்பில் விருப்பமில்லை என்பதுதான் நிஜம்!