மோசடி புகாரில் முதல்வர் உள்ளிட்டவர்களின் பதவி பறிபோகும் என டிடிவி.தினகரன் அதிரடியாக பதிலடி கொடுத்தார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், அதிமுக அம்மா அணியின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கட்சியின் துணை பொதுச் செயலாளராக டி.டி.வி. தினகரன் நியமிக்கப்பட்டது செல்லாது எனவும், அதனால், அவரால் நியமிக்கப்பட்ட பதவிகளும் செல்லாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட 27 பேர் கையெழுத்திட்டனர். அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் ஆகியோர் கையெழுத்திடவில்லை.
இந்நிலையில், அன்று மதியம் தஞ்சையில் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேர்தல் ஆணைய தலைவராக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எப்போது ஆனார்? தீர்மானத்தில் கட்சியின் பெயர் அதிமுக என குறிப்பிடப்பட்டிருக்கிறது. தேர்தல் ஆணைய உத்தரவுபடி, அதிமுக அம்மா அணி என மட்டுமே குறிப்பிட வேண்டும். இவ்வாறு பெயர் குறிப்பிட்டதற்கு யாராவது வழக்கு தொடுத்தால் முதலமைச்சர் உட்பட அனைவரது பதவிகளும் பறிபோகும்.”, என கூறினார்.
மேலும், கட்சியை அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்குள் மேம்படுத்த வேண்டும் என்பதால், தான் தமிழகம் முழுவது சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்திக்கவிருக்கும் நிலையில், அதனால் ஏற்பட்ட பயத்தில் தனக்கு எதிராக தீர்மானம் இயற்றப்பட்டதாக டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
”வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் கட்சியை ஊக்குவிக்கவும், தொண்டர்களை பலப்படுத்தவும் பயத்திலே இதுபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றுகின்றனர்.”, என தினகரன் குறிப்பிட்டார்.
மேலும், ”கட்சியின் விதிமுறைகள் தெரிந்தும் வேண்டுமென்றே தவறாக குறிப்பிடுகின்றனர்.
சட்ட விதிகளுக்குட்பட்டு சசிகலாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அனைவரும் கையெழுத்திட்டுதான் பொதுச்செயலாளர் பதவி நியமனம் செய்யப்பட்டது. மேலும், பொதுச் செயலாளர் சசிகலாவால் பொருளாளராக நியமிக்கப்பட்ட திண்டுக்கல் ஸ்ரீநிவாசன் தான் கட்சியின் வங்கி பரிமாற்றங்கள், ஊதியம் வழங்குதல் உட்பட அனைத்து வேலைகளையும் மேற்கொள்கிறார். சசிகலாவால் கட்சியிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டது செல்லுபடியாகிறது. அப்படியிருக்கையில் நான் மட்டும் செயல்படுவதை எதிர்ப்பது நியாயமற்றது.”, என தினகரன் கூறினார்.
மேலும், தனக்கு எதிரான தீர்மானத்திக் கட்சியின் சட்ட விதிகள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், நியமன பதவிகளை பொதுச் செயலாளர் நியமிக்கலாம் என்ற கட்சி விதியின் அடிப்படையிலேயே தான் பதவி வகிப்பதாகவும் தினகரன் குறிப்பிட்டார். அவர்கள் குறிப்பிட்ட சட்டவிதிகள் தவறு, நியமன பதவிகளை பொதுச்செயலாளர் செய்யலாம்’ என்றார்.
”பொதுச் செயலாளர் சசிகலாவால் நியமிக்கப்பட்ட எனக்கு கட்சி விதிமுறைகளை மீறுபவர்களை நீக்கவும், கட்சியில் சிலரை இணைக்கவும் அதிகாரம் உண்டு. முதலமைச்சராக இருந்தாலும் கட்சி விதிகளுக்கு உட்பட வேண்டும்.”, என கூறினார்.
பதவியைக் கொடுத்தவர்களை மறந்து, கட்சியின் வளர்ச்சிக்கு எதிராக சுயநலத்துடன் செயல்படும் முதலமைச்சர், அமைச்சர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தனக்கு தைரியம், மன வலிமை, தொண்டர்கள் ஆதரவு இருப்பதாக தினகரன் கூறினார்.
திறமையான மருத்துவர்களைக் கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் எனவும், அவருக்கு எதிராக எடுக்கப்பட உள்ள நடவடிக்கை குறித்து தினகரன் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
”தேர்தல் ஆணையத்தின் விதியை மீறி லெட்டர் பேடில் அதிமுக கட்சி என பெயர் குறிப்பிட்டது சட்டப்பிரிவு 420-ன் படி மோசடி குற்றம். அந்த பெயரை உபயோகித்து தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால் முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிகள் பறிபோகும்”, இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.