இன்று இரவு (ஞாயிற்றுக்கிழமை) அல்லது நாளை (திங்கள் கிழமை) காலையில், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும், நவம்பர் மாதம் முழுதும் வழக்கமான வடகிழக்கு பருவமழையைவிட, நாம் கூடுதல் மழையை பெறுவோம் என தமிழ்நாட்டின் வெதர்மேன் பிரதீப் ஜான் தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் வானிலை குறித்து வானிலை மையம் சொல்வதைவிட, தமிழ்நாட்டின் வெதர்மேன் என அழைக்கப்படும் பிரதீப் ஜான் என்ன சொல்கிறார் என்பதையே மக்கள் ஆர்வமாக கவனிப்பார்கள். அவர் நவம்பர் மாதத்தில் தமிழகத்திற்கு நல்ல மழை இருக்கிறது என, பாஸிட்டிவாக தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2017/10/pradeep-john-300x300.jpg)
அதன் சாராம்சம் இதோ:
"நாம் நீண்ட நாட்கள் காத்திருந்த நிகழ்வு நடக்கவிருக்கிறது. தண்ணீர் பிரச்சனைகள் இன்று இரவு (ஞாயிற்றுக்கிழமை) அல்லது நாளை காலைக்குள் தீர்ந்துவிடும். இது அற்புதமான நவம்பர் மாதமாக அமையவிருக்கிறது.
இன்று இரவுதான் உண்மையிலேயே வடகிழக்கு பருவமழை துவங்கவிருக்கிறது. சென்னை மட்டுமல்லாமல், தமிழகத்தின் அனைத்து கடலோர மாவட்டங்களிலும் இன்று இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை காலை மழை பெய்யும். டெல்டா மாவட்டங்களில் இன்று மாலையிலேயே மழை பெய்யலாம்.
வதந்திகள்:
எவ்வளவு பிரபலமானவராக இருந்தாலும் வதந்திகளை நம்பாதீர்கள். வெள்ளம் வருகிறது என பிபிசி சொன்னாலும் நம்ப வேண்டாம். வரும் நாட்களில் மழையை மட்டும் மகிழ்ச்சியுடன் அனுபவிப்போம். புயல் வந்தால், அதன்பின் வெள்ளம் பற்றி பேசுவோம். நாளை காலயில் (திங்கள் கிழமை) சென்னையில் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகும். கொஞ்ச நாளைக்கு வெயிலுக்கு ‘குட் பாய்’ சொல்லுவோம். வரும் நாட்களில் வெப்பநிலை குறைந்தே காணப்படும்.
பருவ மழை எப்படி சாதகமானது?
தென்மேற்கு வங்க கடல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, 2, 3 கட்டங்களில் சிறிது காலத்திற்கு நிலைத்திருக்கும். நவம்பர் மாதம் இறுதி வரை இந்த சுழற்சி நிலைத்திருக்கும். முன்னதாக, இந்த சுழற்சி பசிபிக் பெருங்கடலில் நிலைக்கும் என கணிக்கப்பட்டநிலையில், அது மாறியிருக்கிறது. அதனால், நமக்கு நல்ல மழை உண்டு,
வழக்கமாக பெய்யும் மழையைவிட, இந்தாண்டு கூடுதலாக மழை பெய்யும். நவம்பரிலும், டிசம்பர் முதல் வாரத்திலும் அதிக மழை பெய்யும்.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, நவம்பர் மாதம் சந்தோஷமான 30 நாட்களாக அமையும்.