காவல் துணை ஆய்வாளர் மற்றும் ஏட்டு ஒருவரை பழிவாங்க தேனாம்பேட்டை காவல் நிலையத்தை தீ வைத்து எரிக்க திட்டமிட்டோம் என கைது செய்யப்பட்டவர்கள் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
தேனாம்பேட்டை காவல்நிலையத்திற்கு கடந்த 13-ம் தேதி அதிகாலை வந்த அடையாளம் தெரியாத நபர்கள் காவல்நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டுச் சென்றனர். இதனால், ஏற்பட்ட தீயை காவல் துறையினர் உடனடியாக அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த சென்னை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சட்டப்பேரவையிலும் இது எதிரொலிக்க தவறவில்லை. எனவே, குற்றவாளிகளை பிடித்தே தீர வேண்டும் என ஆறு தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். காவல்நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகள் மூலம் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வந்தது
போலீசார் நடத்திய விசாரணையில், காவல் நிலையத்தின் மீது குண்டு வீசியது சென்னை தேனாம்பேட்டை எஸ்.எம்.நகரை சேர்ந்த வினோத் என்கிற கருக்கா வினோத் (வயது 35), கண்ணகி நகரை சேர்ந்த மணி என்கிற டியோமணி (23) ஆகிய ரவுடிகள் என தெரிய வந்துள்ளது.
தலைமறைவாக இருந்த இவர்களை கைது செய்த போலீசார், அவர்களுக்கு உடந்தையாக இருந்த கூட்டாளிகள் மணிகண்டன்(20), ஐயப்பன் என்கிற அஸ்வின்(21), அருண்(18), கார்த்திக்(35) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கில் கருக்கா வினோத் மற்றும் டியோமணி ஆகிய இருவரும் தான் முக்கிய குற்றவாளிகள். மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோல் குண்டுகளை செய்வதில் கருக்கா வினோத் கை தேர்ந்தவர். பணம் வாங்கிக் கொண்டு குண்டுகளை செய்து கொடுப்பார். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அதேபோல், மணி என்கிற டியோ மணி மீது பாண்டி பஜார் போலீஸ் நிலையத்தில் கொலை, கொள்ளை போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.
கைது செய்யப்பட்ட ஆறு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிசீலனை செய்து வருவதாக தென் சென்னை காவல் இணை ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் பணிபுரியும் காவல் துணை ஆய்வாளர் மற்றும் ஏட்டு ஒருவரை பழிவாங்க தேனாம்பேட்டை காவல் நிலையத்தை தீ வைத்து எரிக்க திட்டமிட்டோம் என கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் மற்றும் டியோமணி ஆகிய இருவரும் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அவர்கள் அளித்த வாக்குமூலத்தை போலீசார் வீடியோ பதிவு செய்துள்ளனர் அது குறித்த விவரம்:
பணிபுரியும் காவல் துணை ஆய்வாளர் மற்றும் ஏட்டு ஒருவரும் எங்கள் மீது வழக்கு போடாமல் இருக்க ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டனர். எங்களது வீடுகளுக்கு வந்து எங்களது மனைவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டனர். இதனால் அவர்களை பழிவாங்குவதற்காக, தேனாம்பேட்டை காவல் நிலையத்தை தீ வைத்து எரிக்க திட்டமிட்டோம். சம்பவ தினத்தன்று, குண்டு வீச முதல் முறை காவல் நிலையம் வந்த போது, எங்களுக்கு வேண்டப்பட்ட நல்லவரான ஒரு காவல் துணை ஆய்வாளர் இருந்தார். அதனால் வீசவில்லை. இரண்டாவது முறை பொதுமக்கள் இருந்தனர். அதனால் வீசவில்லை. பின்னர், அதிகாலை நான்கு மணிக்கு மேல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி சென்று விட்டோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்,
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.