முன்னாள் தலைமைச் செயலாளரும், தொழில் முனைவோர் மேம்பாட்டுக் கழக இயக்குனருமான ராம மோகன ராவும், சென்னை முன்னாள் காவல்துறை ஆணையர் ஜார்ஜும் அரசுப் பணியிலிருந்து இன்று (28.09.2017) ஓய்வுப் பெறுகின்றனர்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ராம மோகன ராவ், கடந்த 1957-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி பிறந்தார். தமிழக பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக 1985-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். அரசின் பல்வேறு துறைகளின் செயலாளர், ஆணையர் பதவிகளை வகித்தார்.
கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி, முதலமைச்சர் அலுவலகத்தின் முதலாவது செயலாளராக நியமிக்கப்பட்ட ராம மோகன ராவ், அதே மாதம் 8-ஆம் தேதியன்று தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 21-ஆம் தேதி தேதியன்று அவரது வீட்டிலும், அலுவலகத்திலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியதைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து ராம மோகன ராவ் விடுவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 31-ந் தேதியன்று தொழில் முனைவோர் மேம்பாட்டுக்கழக இயக்குனராக அவர் நியமனம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, தமிழகத்தின் 45வது தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி பதவியேற்றார்.
இந்நிலையில், 60 வயது பூர்த்தி ஆவதைத் தொடர்ந்து ராம மோகன ராவ் இன்று ஓய்வு பெறுகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2017/09/z405-300x217.jpg)
அதேபோன்று, சென்னையின் முன்னாள் ஆணையர் ஜார்ஜும் இன்றுடன் பதவி ஓய்வு பெறுகிறார். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின் போது, சென்னை காவல்துறை ஆணையராக ஜார்ஜ் நீடித்தால், இடைத்தேர்தல் நேர்மையாக நடைபெறாது என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தன.
இந்தப் புகாரின் அடிப்படையில், கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி பணியிட மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் ஜார்ஜ் வைக்கப்பட்டு இருந்தார். இதன்பின் அவருக்குப் பதிலாக சிபிசிஐடி கூடுதல் இயக்குநராக இருந்த கரண் சின்ஹா ஐபிஎஸ், சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதன்பின், கடந்த மே மாதம் 1-ஆம் தேதி தீயணைப்புத் துறை மற்றும் மீட்புப் பணித்துறை இயக்குனராக ஜார்ஜ் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், ஜார்ஜ் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.