அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, கோவை மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் கோவை கொடிசியா மைதானத்தில் நடந்தது. அப்போது பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், "அ.தி.மு.க. மக்களின் இயக்கமாக இருக்க வேண்டும். எந்த ஒரு குடும்பத்தின் இரும்பு பிடியில் சிக்கி விடக்கூடாது என்பதற்காகவே நாங்கள் தர்ம யுத்தத்தை தொடங்கினோம். மக்கள் விரோதத் திட்டங்களை மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் விரும்பமாட்டார்கள். இன்றைய ஆட்சியாளர்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்கள் மற்றும் எண்ணங்களைப் பற்றி கவலைப்படாமல் உள்ளனர்.
இன்றைக்கு அ.தி.மு.க. இரு அணிகளாக பிரிந்துள்ளது என்று நினைத்துக் கொண்டு, தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் பல நாடகங்களை நடத்தி வருகிறார். மக்களை நம்ப வைத்து திசைதிருப்பி விடலாம் என நினைக்கிறார். 2016-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு நடத்திய நாடகங்களை போன்று இப்போது மனிதச் சங்கிலி போன்ற நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்.
தி.மு.க. ஆட்சியில் நடந்த நில அபகரிப்பு போன்ற துரோகங்களை மக்கள் மறக்கவில்லை. ஆனால், மக்கள் மறந்துவிட்டதாக ஸ்டாலின் நினைத்துவிட்டார். காவிரி பிரச்சினை, இலங்கை தமிழர் பிரச்சினை போன்றவற்றில் கருணாநிதி தனது கடமையை செய்யத் தவறி விட்டார். ஆனால், நாங்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், நீட் தேர்வு விலக்கு குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்.
ஜல்லிக்கட்டு பிரச்சினை, சென்னை குடிநீர் பிரச்சினை, வர்தா புயல் ஆகியவற்றில் நாங்கள் சரியான முறையில் செயல்பட்டு அவற்றிக்கு தீர்வு கண்டோம். எனவே யார் ஆட்சியில் இருந்தால் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு செயல்படுகிறார்கள் என்று மக்கள் எடை போட்டு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் நமக்கு இளைஞர்கள், மாணவர்கள் ஆதரவு பெருகுகிறது. நாங்கள் தொடங்கி உள்ள தர்மயுத்தத்திற்கு பொது மக்களும், இளைஞர்களும் மற்றும் மாணவர்களும் எங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.
நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்துக்கு அனைத்து அமைச்சர்களும் வரிந்து கட்டிக் கொண்டு மிரட்கிற பாணியில் தேவையில்லாமல் விவாதத்திற்கு கொண்டு போய், மக்கள் முகம் சுளிக்கும் நிலையை ஏற்படுத்தி விட்டனர். இதற்கு முடிவு கட்டுவதற்காக ஜெயலலிதா ஆட்சி மீண்டும் அமையும் காலம் கனிந்து கொண்டிருக்கிறது.
ஓ.பி.எஸ். அணி பலவீனமாக இருக்கிறது என்பதைப் போல சில ஊடகங்கள் சித்தரிக்கின்றன. அ.தி.மு.க. வில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்களும் நம் பக்கம் தான் உள்ளனர். இன்றைய ஆட்சியாளர்களிடம் 122 எம்.எல்.ஏ.க்களும் 2,417 நிர்வாகிகளும் மட்டுமே உள்ளனர். ஆட்சி கவிழ்ந்தால் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஜீரோ ஆகிவிடுவார்கள்" என்று தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.